திங்கள், 23 மார்ச், 2020

சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரிக்கை!

மின்னம்பலம் : சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையிலும், தமிழகத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டமன்றம் தொடர்ந்து இயங்கி வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் கொரோனா தடுப்பு பணியாற்ற சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்கிற ஸ்டாலின், துரைமுருகன், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அவையில் கோரிக்கை வைத்தனர். பாமக நிறுவனர் ராமதாஸும் இதே கோரிக்கையை முன்னிறுத்தினார். இதை நிராகரித்த எடப்பாடி, மக்கள் பணிக்காக அவை தொடர்ந்து இயங்கும் எனத் தெரிவித்தார்.
கோரிக்கைகள் வலுப்பெற்றதை அடுத்து அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தைக் கூட்டிய சபாநாயகர், ஏப்ரல் 9ஆம் தேதி முடிய இருந்த கூட்டத் தொடர் மார்ச் 31ஆம் தேதியுடன் முடியும் என அறிவித்தார். தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் அவை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை மற்ற மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அவை ஒத்திவைப்பு என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், “கொரோனோ வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை 31.3.2020 வரை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், முதலமைச்சர் உடனடியாக ஆலோசனை நடத்தி, மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாதவாறு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைவாசிகள் - இரவலர் ஆகியோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-எழில்

கருத்துகள் இல்லை: