யார் நமது பளபளக்கும் சாலைகளையெல்லாம் உருவாக்கினார்களோ,
யார் நமது நகரங்களின் வான்முட்டும் கட்டிடங்களும், நமது வீடுகளும் உருவாக காரணமானவர்களோ,
யார் நமது பசி தீர ஹோட்டல்களில் சமையல் வேலைகளும்,சர்வர் வேலைகளும் செய்து நமக்கு தொண்டாற்றினார்களோ…,
யார் நமது சொகுசான வாழ்க்கைக்கு அடிதளமாக இத்தனை ஆண்டுகாலம் பாடுபட்டார்களோ…அவர்களை நாம் அனைவரும் சேர்ந்து கைவிட்டுவிட்டோம்! அவர்கள் ஓரிரவில் அனாதையாக்கப்பட்டுவிட்டனர்!
எந்த முன்யோசனையும் இல்லை! திட்டமிடலும் இல்லை!
திடீர் ஊரடங்கு! பஸ்,ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் முடக்கம்!
வேலை இல்லை, கூலியும் இல்லை என்றால் நாளும் வேலை செய்து பிழைப்பு நடத்தும் கோடானு கோடி ஏழை,எளிய மக்கள் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்…? எங்கு தங்குவார்கள்..?
இவர்கள், ’’வீட்டைவிட்டு வெளியே வராதே’’ என்று சொன்னால், வீட்டில் முடங்கிவிட வேண்டும்.மாலை ஐந்து மணிக்கு கைத்தட்டென்றால் தட்ட வேண்டும்.
’’மூடு கடைகளை!’’ ’’போகாதே வேலைக்கு!’’ ’’நடக்காதே ரோட்டில்!’’ ’’முடங்கி கிட வீட்டிலே!’’
ஆணைகள் இடுவது மட்டும் தான் அதிகாரத்திற்கான லட்சணமா?
உங்கள் ஆணைகளின் விளைவுகள் ஏற்படுத்தும் துன்பச் சூழல்களில் இருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை எப்படி துணிந்து கைகழுவுவீர்கள்...?
வயிற்றுபாட்டுக்காக நகரங்களுக்கு புலம்பெயர்ந்துள்ள கோடிக்கணக்கான அன்றாடக் கூலிகள் நிலைமையை யோசிக்கவில்லையே….,லாரிகளை ஓட்டிச் சென்ற ஓட்டுனர்களும்,கிளினர்களும் வெவ்வேறு ஊர்களில் முடக்கப்பட்டுள்ளனரே……, அவ்வளவு ஏன் அலுவலக வேலையாக வெளியூர் சென்ற மார்க்கெட்டிங் மற்றும் பலதரப்பட்ட அலுவலர்கள்,வியாபாரிகள் கூட எங்கும் தங்க முடியாது,சாப்பிடவும் வழியின்றி தவிக்கிறார்களே!
சமூக முடக்கத்தை அறிவிப்பதற்கு முன்பு, இவர்கள் உடனடியாக வந்து தங்க ஆங்காங்கே பள்ளிகளையும்,சமூக கூடங்களையும் தயார் செய்திருக்க வேண்டும் அல்லது அனைவரும் அவரவர் ஊர் சென்று சேர போதுமான போக்குவரத்து வசதிகள் செய்து,அவகாசம் தந்து பாதுபாப்புடன்.அவர்களை அவரவர் இடத்தில் கொண்டு சேர்த்திருக்க வேண்டும்!
எந்த முன் நடவடிக்கையும் இல்லாததால்,இன்று மாநகர வீதிகளில் சாரி,சாரியாக மூடைகளை தூக்கிக் கொண்டு,குழந்தைகள்,பெண்கள் சகிதமாக குடும்பத்துடன் இந்த எளியவர்கள் செல்லும் காட்சிகள் அரச கையாகாத்தனத்தின் அத்தாட்சியல்லவா..?
போகும் வழியில் இவர்களில் சிலர் சாலைவிபத்தில் இறந்துள்ள
செய்தி கலங்கவைக்கிறது. தண்ணியின்றி, உணவின்றி பலர் மயங்கி விழுந்திருக்கலாம்… சிலர் போலீஸ் தாக்குதலுக்கும் ஆளாகி இருக்கலாம்!
பல மைல் கணக்கில் இவர்கள் நடந்து தங்கள் சொந்த மாநிலத்திற்கு வந்தால்,அங்கே எல்லையில் தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளதாம் குஜராத்,உத்திரபிரதேச அரசுகள்..! என்னே மனிதாபிமானம்!
வெளிநாட்டில் மாட்டிக் கொண்டவர்களை விமானம் அனுப்பி கூட்டிவர முடிந்த அரசுகள் சொந்த மக்களை உள்ளுருக்குள் நுழையவிடாமல் தடுத்திருப்பது அவமானகரமான, அநீதியான செயலாகும்!
முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் தில்லியில் இருந்து கால் நடையாக கிளம்பிய போது கம்மென்று வேடிக்கை பார்த்த தில்லி முதல்வர் கெஜரிவால்,இப்போது, ’’தில்லியில் 500 பள்ளிகள் இருக்குது வாருங்கள்! எத்தனை பேருக்கும் உணவு தரமுடியும்’’ என்கிறார்!
CAA,NRC,NPC என்றல்லாம் பாராளுமன்றத்திலும்,மேடைகளிலும் கடந்த சில மாதங்களாக கர்ஜித்த, உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கே போனார்?
ராகுல்காந்தி காங்கிரஸ் தொண்டர்கள் இந்த எளியவர்களுக்கு உணவு,தங்குமிடம் ஏற்பாடு செய்ய அறிக்கைவிடுகிறார்! அவர் நல்லெண்ணத்திற்கு நன்றி! ஆனால், அவர் களத்தில் இறங்கி காங்கிரசாரை ஒருங்கிணைத்து இதை செய்திருக்க வேண்டும். அவரைப் போலவே தான் மற்ற சில கட்சித் தலைவர்களும் தொண்டர்களை செய்யச் சொல்லி அறிக்கைவிடுவதோடு சரி!
இந்தியாவில் எத்தனை அரசியல் தலைவர்கள் களத்தில் இறங்கி இந்த அவல நிலையை சீர் செய்ய முனைப்பு காட்டினார்கள் என்று தெரியவில்லை!
ஆனால்,ஆங்காங்கே சில தனி மனிதர்கள்,அதுவும் எளியவர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்டு களத்தில் இறங்கி அயராது பணிசெய்வதையும் காண்கிறேன்! அவர்கள் தங்களை வெளிப்படுத்தக் கூட விரும்பவில்லை! உலகில் மனிதம் உயிர்ப்புடன் எங்காவது கனன்று கொண்டுதான் இருக்கிறது என்ற நம்பிக்கை சிறிய அளவில் ஏற்படுகிறது!
ஆனால்,ஒரு அரசோ,அல்லது ஒரு பெரிய இயக்கமோ ஒரு காரியத்தை கையிலெடுப்பதும்,தனி நபர்கள் சிலர் கையிலெடுப்பதற்கும் உள்ள வித்தியாசம் ஒரு சிறுகற்திண்டுக்கும்,பெருமலைக்கும் உள்ள வித்தியாசமல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக