சனி, 28 மார்ச், 2020

கொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ்: 27,000 பேர் உயிரிழப்பு!மின்னம்பலம் : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 6 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 27,000த்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியுள்ளது. 180 நாடுகளைப் பாதித்துள்ளது. சீனாவில் இதன் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 104,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,704 ஆக உள்ளது. நேற்று முதல் இன்று வரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியைப் பொறுத்தவரை கொரோனா பரவலைத் தடுக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.
அங்கு 86,498 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,134 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒருநாள் மட்டும் 969 பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் மட்டும் 773 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 5,138 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 65,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் சீனாவைப் பொறுத்தவரை இதன் தாக்கம் குறைந்து வருகிறது. 3,295 பேர் உயிரிழந்த நிலையில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும் விரைவில் குறையும் என்று சீனா சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரைத் தமிழகத்தில் 38 பேர் உட்பட நாடு முழுவதும் 908 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் உட்பட மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும், 601,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 27,438ஆக இருக்கிறது. 133,454 பேர் குணமடைந்துள்ளனர் என்று வோல்டோமீட்டர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: