வெள்ளி, 18 நவம்பர், 2016

FOLLOW UPஓ.பி.எஸ் vs எடப்பாடி!


(ஓ.பி.எஸ் -காண்டிராக்டர் முருகன்)
அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆசி பெற்றவரான ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஜெயராமன் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தியதில் ரூ.50 லட்சம் ரொக்கமும் ஏராளமான ஆவணங்களும் சிக்கி பரபரப்புக்குள்ளாக்கியது பற்றியும் அதன் பின்னணி குறித்தும் நமது மின்னம்பலம் இணைய இதழில் நேற்று (17/11/2016) காலை 7:00 மணி செய்தியில் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், கடந்த முறை அதிமுக ஆட்சியின்போது, ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமானவரான காண்ட்ராக்டர் ஆர்.எஸ்.முருகன் நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்ட் விவகாரங்களில் அதிக ஆதிக்கம் உள்ளவராக வலம்வந்தார். துறை அமைச்சரான எடப்பாடி பழனிசாமியின் நேரடி உதவியாளரான மணியுடன் நெருக்கம் வைத்துக்கொண்டு, காண்ட்ராக்ட் விவகாரங்களில் தென்மாவட்டங்களில் சாதிக்கக்கூடியவராக இருந்தார்.

ஓ.பி.எஸ். கைகாட்டினார் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி, காண்ட்ராக்டர் முருகனின் விஷயத்தில் பொறுமையாக இருந்தார். அதிமுக தலைமையில் ஓ.பி.எஸ்ஸுக்கு செல்வாக்கு சரியத் தொடங்கி, எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு ஏறுமுகம் கண்டதும்தான், முருகன் குறித்தும் ஓ.பி.எஸ். குறித்தும் முதல்வர் ஜெயலலிதாவிடம் எடப்பாடி பழனிசாமி புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து முருகன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டபின்னர், கடந்த ஓராண்டாக முருகன் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ்ஸுக்கு அமைச்சரவையில் முதல்வரின் பொறுப்புகளை கவனிக்கும் சூழல் மறுபடியும் கிடைத்தது.
இம்முறை, முருகன் தென் மாவட்டத்து கண்காணிப்புப் பொறியாளரோடு நெருக்கம் வைத்துக்கொண்டு காண்ட்ராக்ட் விவகாரங்களை கனகச்சிதமாக செய்து வருகிறார்.

(எடப்பாடி பழனிச்சாமி-என்ஜினியர் ஜெயராமன்)
பாளையங்கோட்டை டிவிஷனில் ரூ.12 கோடிக்கான நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்ட் ஒன்றை ஒரே நபருக்கு கொடுப்பதற்கான முயற்சிகளை கண்காணிப்புப் பொறியாளர்மூலமாக முருகன் மேற்கொண்டு வருகிறார் என்ற தகவல் கசிந்திருக்கிறது. பொதுவாக, இதுமாதிரி அதிகத் தொகை உள்ள காண்ட்ராக்ட்டுகளை பிரித்துக் கொடுப்பதுதான் வழக்கம்.
ஏற்கனவே, முருகன் மீது அதிருப்தியில் உள்ள தென்மாவட்ட கோட்டப் பொறியாளர் இந்த காண்ட்ராக்ட் விவகாரத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அவர் கண்காணிப்புப் பொறியாளரிடம் நேரடியாகவே, ‘முருகன் கைகாட்டும் நபருக்கு காண்ட்ராக்ட் கொடுக்க வேண்டாம். ஏனென்றால், அவர் கைகாட்டும் நபருக்கு கொடுத்தால் வேலை தரமாக இருக்காது. எனவே, காண்ட்ராக்ட்டை பிரித்துக் கொடுப்பதுதான் நல்லது’ என்றாராம்.
ஆனால் ஓ.பி.எஸ். பெயரில் முருகன் பிடிவாதமாக இருக்கிறாராம். தனது ஆசி பெற்ற நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் ஜெயராமன் வீடு லஞ்ச ஒழிப்புத் துறையினரால் ரெய்டுக்கு உள்ளானதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்.மேல் வருத்தத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். ஆதரவுபெற்ற முருகனுடைய நடவடிக்கைக்கு என்ன செய்யப்போகிறார் என்பதே சக அமைச்சர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. minnambalam.com

கருத்துகள் இல்லை: