வெள்ளி, 18 நவம்பர், 2016

பழைய நோட்டுக்களுக்கு இனி 2000 ரூபாய் மட்டுமே.. மக்கள் கொதிப்பு ..

சென்னை: ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். மக்களின் கொந்தளிப்பு மத்திய அரசை நோக்கியும், வங்கிகளை நோக்கியும் திரும்பி வருகிறது. இந்த நிலையில் ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை ரூ. 2500 ஆக மத்திய அரசு உயர்த்தியது. அதேபோல தனி நபருக்கு ரூ. 4000 வரை பண மாற்றம் செய்யலாம் என்று இருந்ததையும் ரூ. 4500 ஆக உயர்தியது.  வங்கியில் பணம் மாற்றவும், டெபாசிட் செய்யவும், ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் நாடு முழுவதும் மக்கள் மணிக்கணக்கில் கால் கடுக்க நின்று அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சக்தி காந்த தாஸ், இன்று மட்டுமே தனி நபர் ஒருவர் 4,500ரூபாய் பழைய நோட்டுகளை அளித்து புதிய நோட்டுகளைப் பெற முடியும். 18ம் தேதி முதல் 2000 ரூபாய் மட்டுமே வங்கியில் மாற்ற முடியும் என்றார்.
அதிகம் பேர் பணம் எடுக்க வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குரூப் சி , ராணுவ வீரர்கள் தங்களது சம்பள முன் பணமாக ரூ.10,000 எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார். வங்கியில் பணம் மாற்ற கையில் மை வைக்கப்படும் என்று அறிவித்ததே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது பணம் மாற்றுவதை பாதி அளவாக குறைத்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2000 ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஒரு வாரத்திற்கு எப்படி சாப்பிடுவது என்ன பொருட்களை வாங்குவது என்று மக்கள் கேட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பின்னர் தினசரி புதிய புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன இன்னும் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகுமோ தெரியலையே  tamiloneindia.com


கருத்துகள் இல்லை: