புதன், 16 நவம்பர், 2016

தமிழனின் பாரம்பரிய அறிவு - அதிர்ச்சி வேண்டாம்!

minnambalam.com :தமிழரின் கட்டடக் கலை குறித்து ஒரு ஆவணப்படம் எடுப்பதற்காக கடந்த வருடம் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஊர்களில் நண்பனோடு சுற்றிவந்தேன். பெரிய கோவில்கள், அரண்மணைகள் எல்லாம் அரசனின் செல்வாக்கைக் காட்டுவதாகவும் பிரம்மாண்டத்தை காட்டுவதாகவும் இருந்தன. அவை பற்றிய தகவல்களும் ஆய்வுகளும் நிறைய உள்ளன. ஆனால் நாம் கவனிக்க மறுக்கும் எளிய மக்களின் கலையை, அவர்களது அறிவை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எங்களது குறிக்கோளாக இருந்தது. மக்கள் தங்களது குடியிருப்புகளைக் கட்டுவதற்கு பயன்படுத்திய இயற்கைசார்ந்த அறிவும் நுட்பமும் வியக்கும்படியாக இருந்தன.

வீடுகளின் அமைப்பு, வீடு கட்ட பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்கள் எல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை. ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கும் ஏதுவாக வீட்டின் தோற்றம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, நெசவுத்தொழில் செய்பவர்களது வீடுகளில் சன்னல்கள் தரைப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது. ஏனெனில், தரையில் அமர்ந்து கீழே உள்ள குழிக்குள் காலைவிட்டு நெசவு செய்யும்போது வெளிச்சம் குழி வரை படரவே இந்த ஏற்பாடு. அதேபோல், நகைத் தொழில் செய்பவர்கள் வீடுகளும் இந்த முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. காரணங்களைப் பொருத்தும் பயன்பாடுகளைப் பொருத்தும்தான் நமது கட்டடக் கலை இருந்திருக்கிறது. வீடு கட்டத் தேவையான மணலோ அல்லது கற்களோ அந்தந்த இடத்தில் எது அதிகமாக கிடைக்குமோ அதைவைத்தே கட்டியுள்ளனர். அதுவே சூழலுக்கு ஏற்றதாகவும் இருந்திருக்கிறது.

மேலும் அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான பழைய காலத்து வீடுகள் தெற்கு நோக்கிய வாசலைக்கொண்டே அமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் முக்கியமானது. அதாவது, அந்தப் பகுதியில் 8 மாதங்கள் தெற்கிலிருந்து வீசும் தென்றல் எனப்படும் தென்மேற்குப் பருவக்காற்றுதான் வீசுகிறது. தெற்கு நோக்கி வாசல் இருப்பதால் காற்று வீட்டினுள் எளிதாக நுழைந்து சூழலை ரம்மியமாக்குகிறது. அதேபோல், வீட்டின் சமையலறை வாஸ்து சாஸ்திரப்படி தென்கிழக்கில் இல்லை. மாறாக, வடகிழக்கில் இருக்கிறது. அதற்கும் அறிவியல்மூலமாகத்தான் பதிலளிக்கின்றனர். வாடைக்காற்று எனப்படும் வடகிழக்கிலிருந்து வீசும் காற்று குளிர்காலங்களில் நோய்களைக் கொண்டு வருகின்றன. அந்தக் காற்று சமையலறையிலுள்ள புகைபோக்கியின்மூலம் வீட்டினுள் நுழைந்து சமையலறையின் வெப்பத்தை வீட்டின் மற்ற அறைகளுக்குள் கொண்டுவந்து குளிரைப் போக்கி கதகதப்பைத் தருகின்றன என்று அவர்கள் சொன்னபோது, தமிழரின் பாரம்பரிய அறிவை நினைத்து சிலிர்த்துப்போனேன்.
நமது முன்னோர்கள் ஒரு ஊரை அமைக்கும் முறை, இயற்கைசார்ந்த அவர்களின் அறிவை அடிப்படையாகக் கொண்டு இருந்திருக்கிறது. ஒரு பெரிய நிலப்பரப்பில் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு ஏற்ற இடத்தைத் தேர்வுசெய்ய மாடுகளைத்தான் உபயோகித்தனர். மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடுவார்கள். மேய்ந்து முடித்து மாடுகள் எந்த இடத்தில் அமர்ந்து இளைப்பாறுகிறதோ அதுவே, மக்கள் தங்கள் இருப்பிடம் அமைய ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். குளிர்ச்சி, காற்றோட்டம் ஆகியவற்றை கணித்து மாடுகள் தேர்ந்தெடுக்கும் அந்த இடம், மனிதர்கள் வாழ ஏற்புடையதாக இருந்தது. அந்த அறிவியலை விட்டுவிட்டு இன்று, இதை ஒரு சடங்காகத்தான் நாம் பயன்படுத்துகிறோம். புதிய வீடுகட்டி குடியேறுபவர்கள் கிரஹப்பிரவேசத்தின்போது பசு மாட்டோடு கன்றை வீட்டினுள் கூட்டிவருவது இதன் எச்சமே.

அதுபோல், ஒரு விவசாய நிலத்தை வாங்குவதற்குமுன் அந்த நிலம் வளமானதா என்று பார்ப்பதற்கு சேவல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். விற்பனைக்கு வரும் நிலத்தை வாங்குவதற்கு முதல்நாளே விவசாயி ஒரு சேவலோடு போய் அங்கு தங்கிவிடுவார். காலையில் எழுந்ததும் அவர் சேவல் கத்தும் ஒலியை வைத்து அந்த நிலத்தை மதிப்பிடுவார். சேவல் நல்ல ஒலி எழுப்பி சத்தமாகக் கூவினால் அது வளமான நிலமாகக் கருதப்படும். அதாவது, முதல் நாளிலிருந்து அந்தச் சேவல் அங்குள்ள புழுக்களைத்தான் தின்றிருக்கும். நிறைய புழுக்கள் இருந்தால் சேவல் நன்றாகச் சாப்பிட்டு சத்தமாக ஒலி எழுப்பும். புழுக்கள் நிறைந்த நிலம் வளமானதாக இருக்கும் என்று நிலத்தை வாங்கியிருக்கின்றனர்.
அம்பாசமுத்திரம், வீரவநல்லூர் ஆகிய அந்தப் பகுதியிலுள்ள ஊர்கள் எல்லாம் பசுமையாகக் காட்சியளித்தன. காய்ந்துகிடக்கும் கரிசல் பூமியிலிருந்துபோன எனக்கு அது பார்ப்பதற்கு இதமாக இருந்தது. அதற்குக் காரணம், ஊரின் நடுவே பாயும் கால்வாய்தான். மக்கள் வீட்டின் பின்வாசல் வழியாக வந்து கால்வாயில் குளித்துச் செல்கின்றனர். அந்தக் கால்வாய்பற்றி அவர்களிடம் கேட்க, ஒரு குட்டிக்கதையுடன் அதைக் கூறினர்.

அந்தப் பகுதியை முன்னர் ஆட்சி செய்துவந்த சிங்கம்பட்டி ஜமீனுக்கும் பக்கத்து ஜமீன் மன்னனுக்கும் போர் மூண்டது. சிங்கம்பட்டி ஜமீன் வலிமை குறைந்த படையைத்தான் கொண்டிருந்தது. போரில் தோற்கும்பட்சத்தில் இங்கிருக்கும் கன்னிப் பெண்களை எதிரிகள் கவர்ந்து செல்வர். இதனால் கலக்கமடைந்த ஜமீன், ஊரிலுள்ள பெண்களை எல்லாம் பாபநாசம் அணைக்கு போகச்சொன்னார். அங்கிருந்து போர் நடைபெறும் இடம்வரை ஒரு மைல் தொலைவுக்கு ஒவ்வொரு மணியாக வழியெங்கும் பெரிய மணிகளை கட்டச் சொல்லியிருந்தார். போரில் தமது படை தோற்றுப்போனால் போர்க்களத்துக்கு அருகிலுள்ள மணி அடிக்கப்படும். அதன் சத்தத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு மணியாக அடிக்கப்பட, அணையின் மீதுள்ள பெண்கள் இந்தத் தகவலையறிந்து தண்ணீருக்குள் குதித்து தங்கள் உயிரைப்போக்கிக்கொள்ள வேண்டும். எதிரியின் கையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நினைத்ததுக்கு மாறாக போரில் சிங்கம்பட்டி ஜமீன் வென்றது. ஆனால் குரங்கு ஒன்று பழத்தை தின்றுவிட்டு கொட்டையை ஒரு மணியில் எறிந்துள்ளது. மணி அடிக்கப்பட்டதாக ஒவ்வொரு மணியாக அடிக்கப்பட அணையின்மீது நின்றிருந்த பெண்கள் மணியின் ஓசையைக் கேட்டு நீருக்குள் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். மக்கள் எல்லோரும் சேர்ந்து அழுதபடி ஜமீனிடம் முறையிட ஜமீன் கலங்கிப்போனார். தன் மக்களுக்கு ஏதாவது பிராயசித்தம் செய்ய நினைத்து, பாபநாசம் தண்ணீரை கால்வாய் அமைத்து அந்தப் பகுதிகளிலுள்ள ஊருக்கெல்லாம் கொண்டுவர எண்ணி வேலையைத் தொடங்கினார். அதன்படி, மலையிலிருந்து மாடுகளை கூட்டமாக மேய்ச்சலுக்குவிட்டார்கள். மாடுகள் எந்தப் பகுதிகள் வழியாக இறங்கி எந்தப் பக்கமெல்லாம் செல்கிறதோ அந்தப் பாதையில் கால்வாயை அமைத்தனர். மனிதனால் அமைக்கப்பட்ட கால்வாயாக இருந்தாலும் தண்ணீரின் போக்கு சீராக வந்து, இன்றும் பயன்பாட்டில் இருந்து மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்கிறது. ஆனால் அதன் அருகிலுள்ள இன்னுமொரு பகுதியில் பலகோடி ரூபாய் செலவில் நமது அரசு போட்டிருக்கும் புதிய கால்வாய் திட்டம் ஒன்று தோல்வியைச் சந்தித்து நிற்கிறது அதையும் பார்த்தோம்.

திருநெல்வேலியிலுள்ள மாவட்ட ஆட்சியரின் இல்லம் பாளைமேட்டுத் திடலில் இருப்பதற்கான காரணம், நகரின் மேட்டுப்பகுதியான அங்கு மேற்குத் தொடர்ச்சிமலையிலிருந்து வரும் மூலிகைக் காற்று வீசுகிறது. இது, உடலில் படுவதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இது, அரசுக் குறிப்பேட்டில் உள்ள தகவல். இதைத் தெரிந்த காமராசர், தனது ஆட்சிக்காலத்தில் பொது மருத்துவமனையை அங்கு அமைக்கச் சொன்னார்.
‘இயற்கையோடு இயைந்த வாழ்வு’ என்று, நமது முன்னோர்கள் எதுகைமோனைக்காக சொல்லவில்லை. அதுவே அவர்களது வாழ்க்கைமுறையாக இருந்தது. நாம் நமது அவசர வேகத்தில் நாகரீகம் என்ற பெயரில் பாரம்பரிய அறிவையும் உதறி நிற்கிறோம். ஊர்களை நீர்நிலைகளைச் சுற்றி அமைத்த காலம் போய், ரியல் எஸ்டேட்காரர்களின் வழிகாட்டுதலில் ஏரி, குளங்கள்மேல் பிளாட் போட்டு வீட்டைக் கட்டுகிறோம். பெருமழையின்போது உணவுப் பொட்டலங்கள் கேட்டு மொட்டைமாடி மீது நின்று பிச்சை எடுக்கிறோம்.
இனி, இதுபோல் ஒரு அவலம் நேராமல் இருக்க பாரம்பரிய அறிவைத் தேடியெடுத்து ஆவணப்படுத்துவதும் முடிந்தவரை அதைப் பின்பற்றுவதுமே நமது எதிர்கால வாழ்வுக்கான வழியாக இருக்க முடியும்.
-மதரா

கருத்துகள் இல்லை: