சனி, 19 நவம்பர், 2016

ரூபாய் நோட்டுக்கள் செல்லாததை அன்னா ஹசாரே வரவேற்றுள்ளார் !



மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததையடுத்து, பொதுமக்களிடையே இருந்த பணப் புழக்கத்தில் 80 சதவிகிதம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்குக்கூட கையில் பணமின்றி தவிக்கின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரணமாக நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்படைந்தனர். தங்கள் கையில் வைத்திருந்த பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் குவிந்தனர். வங்கிகளில் போதிய பணம் இல்லாததால், பொதுமக்கள் வங்கிகளின் முன்பும் ஏடிஎம்-களின் முன்பும் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். அவ்வாறு காத்திருந்தாலும், சில்லறை செலவுக்கு பணமில்லாததால் ஏழை-எளியோர், நடுத்தர வர்க்கத்தினர், தினக்கூலி பெறுபவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிப்படைந்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மத்திய அரசின் நடவடிக்கையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.. பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அன்னா ஹசாரே அளித்த பேட்டியில், ‘கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட புரட்சிகரமான நடவடிக்கை இது. ஊழல், பயங்கரவாதிகளுக்கான நிதி ஆகியவற்றை இது கட்டுப்படுத்தும். கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்துவதில் முந்தைய அரசு ஆர்வம் காட்டியதேயில்லை. மக்கள் சில கஷ்டங்களை சந்திக்கிறார்கள். ஆனால் இது நீண்ட நாட்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும்.
தற்போதைய அரசு ஒரு தைரியமான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை வலுப்படுத்தும். மத்திய அரசின் அடுத்த நடவடிக்கை தேர்தல் சீர்கேடுகளை ஒழித்துக்கட்டுவதாக இருக்க வேண்டும். அடுத்ததாக, சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் கறுப்புப் பண புழக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கான சவால்களை அரசு எதிர்கொள்ள வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை அரசு உறுதிசெய்து நம்பகத்தன்மையானதாக மாற்ற வேண்டும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க தவறிவிட்டதாக அன்னா ஹசாரே மத்திய அரசை கடுமையாக விமர்சித்துவந்த நிலையில், தற்போது வெகுவாகப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.minnambalam,com

கருத்துகள் இல்லை: