வெள்ளி, 18 நவம்பர், 2016

ப.சிதம்பரம்: மத்தியரசு எந்தவிதத்திலும் தயார் நிலையில் இல்லை !


பிரதமர் மோடியின் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நாளுக்கு நாள் மக்களின் பிரச்னைகள் கூடிக்கொண்டிருக்கிறதே தவிர, நிலைமை சரியாவதற்கான சூழலே உருவாகவில்லை. இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி திடீரென ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது மக்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர். அதை எதிர்கொள்வதற்கு மக்கள் தயார் நிலையில் இல்லை. இந்த நடவடிக்கை மூலம் அவர்கள் மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். இப்போது பிரச்னையைத் தீர்க்க மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் ரூபாய் 500, 1000 நோட்டுகள் சுமார் 2100 கோடி என்ற அளவில் உள்ளன. இத்தனையையும் மாற்றி அதே அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த அளவு ரூபாய் நோட்டுகளை உடனே அச்சிட்டு விட முடியாது. ஒரு மாதத்துக்கு 300 கோடி பண நோட்டுகளைத்தான் மத்திய அரசால் அச்சடித்து தயாரிக்க முடியும். அந்த வகையில், பார்த்தால் புதிய 2100 கோடி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் ஏழு மாதங்கள் ஆகும். இதனைக்கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு ரூ.2000 புதிய நோட்டை அறிமுகம் செய்துள்ளது. ரூபாய் 2000 நோட்டுகளை வெளியிடுவதன் மூலம் பொருளாதாரத்தை சீர்திருத்தி விடலாம் என்று மத்திய அரசு சொல்கிறது. அதை ஒரு போதும் ஏற்க இயலாது.
ரூபாய் 2000 நோட்டுகளை அறிமுகம் செய்ததில் ஒரு தந்திரம் உள்ளது. புதிய நோட்டுகள் அச்சிடும்போது ரூபாய் 2000 என்பதால் குறைவாக அச்சிட்டால் போதும். அது மட்டுமின்றி ஐந்து மாதத்தில் தேவையான அனைத்து புதிய ரூபாய் நோட்டுகளையும் அச்சிட்டுவிட முடியும். இந்த இரு காரணங்களால் மட்டுமே மத்திய அரசு புதிதாக ரூபாய் 2000 நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. மற்றபடி, பொருளாதார சீர்திருத்தத்துக்கும், புதிய ரூபாய் 2000 நோட்டு அறிமுகம் செய்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது இந்த கேள்விக்கு நிச்சயமாக யாராலும் பதில் சொல்ல முடியாது.
தற்போது ரூபாய் 100 நோட்டுகள் கூடுதலாக தேவை என்று உணர்ந்து இருக்கிறார்கள். தேவையான அளவுக்கு ரூபாய் 100 நோட்டுகளை அச்சிட்டு முடிக்கவும் ஐந்து மடங்கு காலம் தேவைப்படும் என்பதுதான் உண்மை.இதையெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும்போது ரூபாய் நோட்டுகள் வி‌ஷயத்தில் மத்திய அரசு எந்தவிதத்திலும் தயார் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. முழுக்க முழுக்க இது அரசியல் லாபம் கருதியே நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: