சனி, 19 நவம்பர், 2016

மோடி - பிரணாப் முகர்ஜி அவசர சந்திப்பு!


கடந்த 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் செல்லாது என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்த நிலையில் அது, நாடு முழுக்க பதட்டத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் சுமார், 55 பேர் வரை இதனால் மரணமும் அடைந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கியிருக்கும் நிலையில், அவைக்கு வெளியே இடதுசாரிகளும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்களும் பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை அறிவித்த மோடி, அவைக்கு வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும் என்பது கட்சிகள், தலைவர்களின் கோரிக்கை.
ஆனால் அதை ஆளும்கட்சியான பாஜக நிராகரித்துவிட்ட நிலையில், “நாட்டில் மக்கள் எல்லாம் பொறுமையாக, கியூவில் நிற்கிறார்கள், இந்த அறிவிப்பை ஒட்டுமொத்த மக்களும் தேசத்துக்காக ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்கிறார்கள்” என்கிறார் மோடி!
ஆனால் “இல்லை, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொந்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலைமை நீடித்தால் ஆங்காங்கே கலவரங்கள் உருவாகும்” என்கிறது சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்.
இப்படி கொந்தளிப்பான சூழலில், நேற்று மாலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்திருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த (16-11-2016) தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய அன்றே மம்தா பானர்ஜி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து, ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்ட நிலையில் இன்று, உச்சநீதிமன்றமும் தன் கடும் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கும் நிலையில் மோடி, நேற்று மாலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது, பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதட்டத்தைத் தணிக்கவும், நாடு முழுவதும் பணம் தாராளமாகக் கிடைக்கவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பொருளாதாரம், நிதி நிலைமை மற்றும் சந்தை நிலவரம் விரைவில் இயல்புநிலைக்குத் திரும்ப அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்தும் கூறியுள்ளார் மோடி. அடுத்து வரும் நாட்கள் கடினமாக இருக்கும் என்பதால் சட்டச் சிக்கலோ, கலவரச் சூழலோ உருவாகும் என்பதால் அதுதொடர்பாக, ஜனாதிபதியின் மூலம் சட்டச் சிக்கல்கள் எதுவும் வரக்கூடாது என்பதற்காக இந்த அவசரச் சந்திப்பு என்கிறது டெல்லி வட்டாரம்  minnambalam,com

கருத்துகள் இல்லை: