சனி, 19 நவம்பர், 2016

பொருளாதாரம் நம்பிக்கை அடிப்படையிலே இயங்குகிறது...


‘பொருளாதார வளர்ச்சி என்பது, ரத்தபந்தம் அல்லாத சமூக உறவுகளில் வெளிப்படும் நம்பிக்கையை அடிப்படையாகவைத்தே இருக்கும்’ என வாதிட்டார் ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா. மனிதர்கள் பரஸ்பரம் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்ளும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு பொருளாதார கோட்பாட்டை முன்வைத்தவர் அவர்.
1996ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘ட்ரஸ்ட்’ என்னும் பெயரிலான ஆய்வில், ‘பொருளாதார வாழ்வை சோதித்துப்பார்ப்பதன்வழியே நாம் கற்கும் முக்கியப் பாடங்களில் ஒன்றாக இருப்பது, ஒரு நாட்டின் நலன். அதன் போட்டித் திறமை, ஒரே ஒரு கலாச்சார குணத்தைவைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அது சமூகத்தில் மக்களிடம் படர்ந்திருக்கும் நம்பிக்கையின் அளவு’ என்கிறார் அவர்.

நாம், ஃபுகுயாமாவின் அந்த தத்துவத்தை சோதித்துப் பார்த்திருக்கிறோம். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனும் அறிவிப்பு வந்த உடனேயே சந்தைகள் ஸ்தம்பித்துப் போயின. குறிப்பிட்ட துறைகள் மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை ஏற்றுக்கொண்டன. பணத்தாள்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனாலும் சமூகம் இயங்கிக் கொண்டிருந்தது. காரணம், நம்பிக்கை.
தினசரி அடிப்படையில் பணப் பரிமாற்றத்துக்கு பழகிப்போன மக்கள், வணிகர்கள், வியாபாரிகள், நிலைமை சரியாகும் என வேண்டி, நம்பிக்கையின்பேரில் தஞ்சம் புகுந்தனர். ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர்களும், தண்ணீர் கேன் சப்ளை செய்கிறவர்களும், தேநீர் கடைக்காரர்களும், தெருவோர தின்பண்டக் கடைகள் வைத்திருப்போருமாக நம்பிக்கையின்பேரில் இயங்குவது மிக எளிதாகிப் போனது.
தன் அன்றாட அலுவலுக்குச் செல்ல தினந்தோறும் ஆட்டோவைப் பயன்படுத்துகிறவர் வனஜா பீட்டர். பணத் தட்டுப்பாடு உருவானபிறகு சில்லறை இல்லாமல், ஆட்டோ ஒன்றை அமர்த்தியபோது அவருக்கு உதவிக்கு வந்தது ‘நம்பிக்கை’ என்னும் மதிப்புதான். ‘அந்த ஓட்டுநருக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் அவருடைய ஆட்டோவில் சிலமுறை பயணித்திருக்கிறேன். என்னிடம் கொடுக்க காசு இல்லை என்றேன். அவர் உடனே, கொஞ்சமும் தயங்காமல் பணம் வரும்போது கொடுத்தால்போதும் என்றார்’ எனக் கூறுகிறார் வனஜா.
இரண்டு நாட்கள் கழித்து, ஆட்டோ கட்டணத்தை கொடுத்திருக்கிறார் அவர். இந்நிலையில், வீட்டில் குடிநீர் விநியோகிப்பவர், ஒரு கேன் தண்ணீருக்கு மட்டுமே வனஜாவிடம் பணம் இருந்தபோதும் மூன்று கேன் தண்ணீர் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

மடிப்பாக்கத்தில் தண்ணீர் கேன் விற்கும் சாமிவேலுவுக்கும் பெரிய லாபங்கள் எதுவும் வந்துவிடவில்லை. தன் வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாகவே பணம் செலுத்திவிட்டார்கள் எனக்கூறும் அவர், தண்ணீர் அத்தியாவசியத் தேவையாக இருப்பதால், மக்களுக்கு தண்ணீர் கிடைக்கச்செய்வது அவரது கடமை என்கிறார். நம்பிக்கையின்பேரில் தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என்றாலும் அதைச் செய்யவும் அவர் தயாராக இருக்கிறார்.
பெரம்பூரைச் சேர்ந்த நகை வியாபாரி எஸ்.ராமன். சென்னை முழுதும் அலைந்துதிரிந்து மணிகள், மெட்டல்கள் கொண்டு செய்யப்பட்ட கவரிங் நகை விற்பவர். அதனால் ‘மணிக்காரர்’ என அழைக்கப்படும் ராமன், நவம்பர் 8ஆம் தேதி அறிவிப்புக்குப் பிறகு, சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. 6,500 ரூபாய் மதிப்புள்ள நகைகள் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், பணத்துக்காக, டிசம்பர் முதல் வாரம் வரை காத்திருக்க முடியுமா என கேட்கவே, ‘அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். பல வருடங்களாக உங்கள் நம்பிக்கையை சம்பாதித்திருக்கிறேன்’ என பதிலளித்துவிட்டு வந்திருக்கிறார்.
கோயம்புத்தூரில், கட்டுமானப் பணியாளர்கள் கட்டட வேலைகள் நடக்கும் இடங்களின் அருகிலிருக்கும் மளிகைக் கடைகள், டீ கடைகளிடம் ஊழியர்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் பொருட்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள். வேலை செய்பவர்களுக்கு வாரக் கூலி கொடுக்கமுடியாத காரணத்தால், சிறிய அட்வான்ஸ் தொகை அளிக்கப்பட்டிருக்கிறது. கட்டட வேலை செய்யும் ஊழியர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுத்திருக்கும் தனலெஷ்மி, குடியிருப்பவர்களால் வாடகை கொடுக்க முடியவில்லை எனக் கூறியிருக்கிறார். ‘அவர்களுக்கு சம்பளமே ஒழுங்காக வரவில்லை; அவர்களிடம் எப்படி வாடகை கேட்க முடியும்? காசு கிடைக்கும்போது கொடுத்துவிடுவார்கள்’ என்று நம்பிக்கையோடு அதைப்பற்றி சொல்கிறார்.
அரிசி மண்டி, மருந்துக் கடைகள், உள்ளூரில் மளிகைக் கடை வைத்திருப்பவர்கள், தண்ணீர் கேன் விநியோகிப்பவர்கள் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, உடனடியாகப் பணம் கொடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. வேளச்சேரி, அன்னை இந்திராநகரில் வசிக்கும் எஸ்.அனுராதா, வீட்டில் அரிசி தீர்ந்துபோனதும் என்ன செய்வது எனும் கவலையில் இருந்திருக்கிறார். ஆச்சரியமளிக்கும்விதமாக பக்கத்தில் அரிசி மண்டி வைத்திருப்பவர், காசோலை ஒன்றை பெற்றுக்கொண்டு அவருக்கு அரிசி விற்றிருக்கிறார்.
சில்லறை மற்றும் மொத்த வணிகம்
திருச்சியில் பெரியளவில் சில்லறை வணிகமும் மொத்த வணிகமும் நடக்கும் இடம் காந்தி சந்தை. இங்கும் கடந்த வாரம் முழுதும், நம்பிக்கையின் அடிப்படையில்தான் சந்தை இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. பெருந்தன்மை மட்டுமே காரணம் அல்ல, தேவையும் முக்கியக் காரணம்தான். ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, எங்கள் வணிகத்தில் 70 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நம்பிக்கை பரிமாற்றங்கள் அடிப்படையில்தான் பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கிறது’ என்கிறார், திருச்சி வெங்காய கமிஷன் மண்டி வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர். ‘எங்களிடமிருந்து வெங்காயம் வாங்கும் சில்லறை வணிகர்கள், அதை விற்றபிறகு பணம் தருவதாகக் கூறுகிறார்கள். அவர்களுடைய சூழலைப் புரிந்துகொண்டு, நம்பிக்கையின் அடிப்படையில் வெங்காயத்தை எடுத்துச்செல்ல அனுமதிக்கிறோம். பணத்தைப் பெறுவதற்கு நாங்கள் ஒரு மாதம் வரை காத்திருக்க நேரலாம் என்பது தெரியும்’ என அவர் கூறுகிறார்.
இந்நிலையில், பெரிய பணத்தொகையை டீ கடைக்காரர்களிடமும் காய்கறிக் கடை வைத்திருப்பவர்களிடமும் கொடுத்துவிட்டு, மீதிச் சில்லறை பெறாமல் இருக்கும் வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர். மீதமிருக்கும் பணத்துக்கு தொடர்ந்து பொருட்கள் வாங்கி சமன் செய்து கொள்கின்றனர். அதேநேரம், பணத்தாள்களின் புழக்கம் அதிகரிக்காதபட்சத்தில், நம்பிக்கைமீதும் மக்கள் நம்பிக்கையிழப்பார்கள் என்பது உண்மை!
http://www.thehindu.com/news/cities/chennai/trust-in-the-time-of-demonetisation/article9359325.ece?homepage=true
நன்றி: தி ஹிந்து ஆங்கிலம்
தமிழில்- ஸ்னேகா

கருத்துகள் இல்லை: