வெள்ளி, 18 நவம்பர், 2016

பேருந்து டிக்கெட்டுக்களுக்கு கரன்சி கட்டு அமைச்சர்களின் மோசடி பரிமாற்றம்

அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை மாற்றும் வேலைகளை ஆளுங்கட்சி உதவியுடன் கனஜோராக செய்து கொண்டி ருக்கிறார்கள். அரசு போக்குவரத்துக் கழகம், மின்வாரியம், பெட்ரோல் பங்குகளில் இருந்துதான் அதிகமாக 100, 50 தாள்கள் பதுக்கல்காரர்களுக்கு செல்கிறது. அதற்கு மாற்றாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப் படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ. 5 கோடிக்கு மேல் வசூலாகும். மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, பயணிகளிடம் 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வாங்கவேண்டும் என்று நடத்துநர்களுக்கு உத்தரவுகளை போட்டுவிட்டது போக்குவரத்துக் கழகம். இதனால் கொந்தளிப்பாகும் பயணிகளின் ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கொண்டு, 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தவிர்த்து, மற்ற நோட்டுகளையும் சில்லறைகளையும் மட்டும் வாங்கிப்போட்டுக் கொண்டு டிக்கெட் கொடுக் கிறார்கள். அந்தப் பணத்தைக் கொண்டுவந்து டெப்போ அலுவலகத்தில் செலுத்துகிறார்கள். ஆனால் மறுநாள் காலையில் டெப்போவிலிருந்து வங்கியில் செலுத்துவதற்காக காசாளர்கள் எடுத்துச்செல்லும் நோட்டெல்லாம் 1000, 500 ரூபாய் நோட்டுகளாக மாறியிருக்கிறது.

இது எப்படி மாறியது என்று சில நடத்துநர்கள் கேள்வி கேட்டால், ""அதுவா நைட்டு வந்த கார்ல 500, 1000 நோட்டுக் கட்டுகள் இறங்குனுச்சி. இங்கிருந்த சில்லறை நோட்டெல்லாம் காரிலே போயிடிச்சி'' என்று சர்வசாதாரணமாக சொல்கிறார்கள் போக்குவரத்துக் கழகத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒருநாள் வசூல் ரூ. 6 முதல் 7 லட்சம் வரை இருக்கும். மேலாளர் முத்துராமன் உத்தரவுப்படி சில்லறை நோட்டு களைத்தான் பயணிகளிடமிருந்து நடத்துநர்கள் வாங்கினார்கள்.

ஆனால் அடுத்தநாள் அறந்தாங்கி ஸ்டேட் பேங்கில் பணம் கட்டும்போது எல்லாம் 500, 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்ததால் வங்கி மேலாளர் போக்கு வரத்துக் கழக காசாளரிடம்... ""இனி இப்படி வாங்கி வராதீங்க. 100, 50 ரூபாய்களாக கொண்டு வாங்க. அப்பதான் எங்களால் மக்களுக்கு உதவமுடியும்'' என்று சொல்லி யிருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையத்தில் டிப்போவில் வசூலாகும் பணத்தைக் கட்டும்போது, கடந்த புதன்கிழமையிலிருந்து 500, 1000 ரூபாய் நோட்டுக் கட்டுகளாகச் செல்கிறது. இந்த போக்குவரத்துக் கழகத்தின் மூத்த அதிகாரிகள், காசாளர் அனைவரும் உடந்தை இப்படித்தான் தமிழகம் முழுவதும் நடக்கிறது. அப்படியிருந்தும் 14-ந் தேதி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்களுடன் வழக்கம் போல ரூ. 6 லட்சத்துடன் புதுக்கோட்டை டெப்போ காசாளரும், காவலரும் வங்கிக்கு சென்றார்கள் பேங்க் கேஷியரிடம் பணத்தையும் செலானையும் கொடுத்தார்கள். வாங்கிப் பார்த்த கேஷியர், "எங்க மேலாளரை பாருங்க' என்று அனுப்பி வைத்தார். வங்கி மேலாளரின் மேசையில் போ.வ.கழக பணம். எதிரே காசாளர் இருந்தார். அவரைப் பார்த்த மேனேஜர், ""உங்க போ.வ.கழக மேலாளரை வரச் சொல்லுங்க''’என்று சொன்னார்.

 போக்குவரத்துக் கழக மேலாளரும் வங்கிக்கு வந்தார். மேஜை மேல் இருந்த பணத்தைக் காட்டிய வங்கி மேலாளர், ""இது பயணிகளிடம் வசூல் செஞ்ச பணமா?'' என்று கேட்க "ஆமா சார்' என்றார் போ.கழக மேலாளர்.. ""எந்த பஸ்ல... எந்த ஊர்ல இருந்து எந்த ஊருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்குவாங்க? உங்க பஸ்ஸுல 2 பயணிகள் அது போல டிக்கெட் வாங்கிட்டு போய் இருக்காங்களே அது எந்த பஸ்'' என்று பேங்க் மேனேஜர் கேட்க... ஏதும் புரியாமல் விழித்தார் போ.வ.கழக மேலாளர். அவரிடம், ""இதோ பாருங்க சார்... இந்த 1000 ரூபாய் கட்டுல 1 முதல் 100 வரை வரிசை எண் மாறாத தாள்கள் இருக்குது. அதாவது செலவே பண்ணாத கரன்சி நோட்டு. இதே போல 2 கட்டு இருக்குது. இப்படி யாராவது டிக்கெட் எடுப்பாங்களா?'' என்று கேட்டதும் போக்குவரத்து மேலாளரிடம் எந்தப் பதிலும் இல்லை. ""இனி இப்படி நடக்காதுன்னு எழுதிக் கொடுங்க'' என்று வங்கி மேலாளர் எழுதி வாங்கிட்டு அந்த பணத்தை வரவு வைத்துக் கொண்டு அனுப்பியுள்ளார்.

போக்குவரத்துக் கழகத்தில் உள்ள சில ஊழியர்கள் நம்மிடம்... ""எங்களை 1000, 500 வாங்க வேண்டாம்னு சொல்லிட்டு இரவு 11 மணிக்கு பிறகு கார்ல வரும் சூட்கேசுல நாங்க வசூல் செஞ்சு கொண்டு வந்த 100, 50 ரூபாய் நோட்டுகளை அள்ளிக்கிட்டு அவங்க கொண்டு வந்த 1000, 500 தாள்களை வச்சுட்டு போயிடுறாங்க. எல்லாம் இந்த மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சிக்காரங்கதான். அதனாலதான் சீரியல் மாறாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கிக் கொண்டன.
லட்சத்துக்கு 5 ஆயிரம் வரை கமிசனும் கிடைக்குமாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 7 டெப்போவுலயும் ஒரு மாண்பு மிகுவுக்காகத்தான் மாற்றிக் கொண்டு இருக்கி றார்கள். அறந்தாங்கியில் ஆளும்கட்சி நகரப் பொறுப்பில் உள்ள ஒருத்தர்தான் இந்த வேலையை செய்றார்'' என்றனர். சி.பி.எம். மா.செ. கவிவர்மன், மாஜி போக்கு வரத்துக் கழக ஊழியர் "போர்வாள்' கோவிந்தராசு ஆகியோர்... ""ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும் இதேபோல பணத்தை எடுத்து அமைச்சர்கள், அரசியல்வாதிகள், ஒப்பந்தக்காரர் களுக்கு கமிசனுக்கு விற்கும் அவலம் நடக்கிறது.

இதனால பொதுமக்களிடம் புழங்க வேண்டிய 100, 50 ரூபாய் நோட்டுகள் பதுக்கல்காரர்கள் கையில் சிக்கியுள்ளது'' என்றவர்கள், ""இது மட்டுமில்ல மின்வாரியத்திலும் இதுபோல ரூபாய் நோட்டு மாற்றப்பட்டு வருகிறது. டாஸ்மாக் வசூல் பணமும் மாண்புமிகுகளுக்கு போகிறது'' என்றனர். மத்திய அரசு அறிவித்த போது "கூட்டுறவு சங்கங் களிலும் பழைய தாள்களை மாற்றிக் கொள்ளலாம்' என்று சொன்னது. ஆனால் ஒவ் வொரு கூட்டுறவு சங்கத்திலும் 9-ந் தேதி புள்ளி விபரம் வாங்கிய மத்திய கூட்டுறவு வங்கிகள் இனிமேல் 1000, 500 தாள்களை வாங்கக் கூடாது என்ற வாய்மொழி உத்தரவு போட்டதால் கூட்டுறவு சங்க நடவடிக்கைகள் முடங்கின. எங்க ளுக்கும் பழைய தாள்களை வாங்க அனுமதித்தால் தான் எங்கள் கடன்களும் அடைபடும், விவசாயி களுக்கு உரம் கொடுக்கலாம், சுயஉதவிக் குழுக் களுக்கு பணம் கொடுக்கலாம் என்று அரசிடம் கேட்டு பார்த்தார்கள், எந்தப் பதிலும் இல்லை. 14-ந் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் முன் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திய கூட்டுறவு சங்க பணியாளர்கள், வேலை நிறுத்த போராட்டத் திலும் ஈடுபட்டுள்ளனர்.

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட கௌரவத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி... ""நாங்களும் வங்கிகள்தான். ஆனால் எந்தவித அரசாணையும் இன்றி வாய்மொழியாக எங்களை பழைய பணம் வாங்கக்கூடாது என்று நிறுத்தி வைத்திருப்பதால் எங்க சங்கங்கள் முடங்கிவிட்டன.

விற்பனைப் பொரு ளுக்குக்கூட பணம் கட்ட முடியாத சூழ்நிலை. இத னால எங்களுக்கும் விவசாயிகளுக்கும் தினமும் பிரச் சினை வருது. இதை மத்திய கூட்டுறவு வங்கிகளி டம் சொன்னால் எந்தப் பதிலும் இல்லை. எங்களைப் போல அத்தியாவசிய பொருட் கள் விற்பனை செய்யும் இடங்களில்தான் சில்லறைகளை சேர்த்து வங்கிகளில் செலுத்த முடியும்.
அதை இந்த அரசாங் கம் செய்ய மறுக்கிறது. முறைகேடான பணத்தை வைத்திருப்போர் நகை கடன், பயிர்க் கடன்களின் பேரில் உள்ளே வந்து விடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள் ளது. அப்படி நடக்க வாய்ப்பு இல்லை. திடீரென பல லட்சங்களை புதிதாக யார் கொண்டுவந்தாலும் மாட்டிக்கொள்வார் கள்'' என்றார்.
ஆளுங்கட்சி அரசியல்வாதிகளோ எந்தெந்த வழிகளில் பெரிய நோட்டுகளை மாற்ற முடியும் எனக் குறி வைத்து செயல் படுவது தொடர்கிறது. இப்போது டாஸ் மாக் கடைகளின் தினசரி வசூலையும் குறி வைத்துள்ளனர். மேல்மட்டம் முதல் மாவட்டம் -ஒன்றியம்வரை நோட்டு மாற்றும் மையங்களாகியிருக்கின்றன அரசு நிறுவனங்கள். -இரா.பகத்சிங்


-இரா.பகத்சிங்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: