வியாழன், 17 நவம்பர், 2016

’டாஸ்மாக் வசூல் எல்லாம் வீட்டுக்கு வரணும்!’ - அமைச்சர் போட்ட உத்தரவு!

ஜெயலலிதாவின் உடல்நிலை, இடைத்தேர்தல் என, எல்லா விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது 500, 1000 ரூபாய் நோட்டுப் பிரச்னை. என்ன செய்வதெனத் தெரியாமல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள்.
மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவர் அந்த மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளரிடம் பேசியிருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக டாஸ்மாக்கில் வசூலாகும் பணத்தையெல்லாம் கொண்டுவந்து வீட்டில் கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக ஆயிரம், ஐநூறு ரூபாய் பணத்தை வாங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். டாஸ்மாக் அதிகாரிகளும், அமைச்சர்கள் சொன்னபடி செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் மட்டும் பல கோடி ரூபாய் கடந்த ஒரு வாரத்தில் கைமாறியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இன்னும் சில அமைச்சர்கள், சென்னையில் உள்ள சில மார்வாடிகளிடம் பணத்தை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு 30 சதவிகித கமிஷனில் அவர்கள் பணத்தை மாற்றித் தருகிறார்களாம். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் ரூ.70 ஆயிரம் திருப்பிக் கொடுப்பார்கள். சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் அமைச்சர்களுக்கு இந்த மார்வாடிகளை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அவர்கள்மூலமாகத்தான் இந்த பணம் மாற்றும் வேலைகள் நடந்துவருகின்றன. கடந்த ஒரு வாரத்தில், சென்னையில் மட்டும் இப்படியாக 5 ஆயிரம் கோடி ரூபாய் மாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
கோவை, திருப்பூர் பகுதிகளில் உள்ள சில தொழிலதிபர்களும் கையில் கோடிகோடியாக பணத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களும் காரில் பணத்தை ஏற்றிக்கொண்டு சென்னைக்கும் கோவைக்குமாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். மார்வாடிகள் பணத்தை மாற்றுகிறார்கள் என்பது தெரிந்தாலும், எந்த அடிப்படையில் அவர்களை அணுகுவது என்று தெரியாமல் அலைகிறார்கள். இதைப் பயன்படுத்தி சில புரோக்கர்கள், ‘நாங்க ஆளை காட்டுறோம்… எங்களுக்கு கமிஷன் 10 பர்சென்ட்!’ என்று தனியாக டீலிங்கில் இறங்கியிருக்கின்றனர். ஆக, பதுங்கியிருந்த கறுப்புப் பணம் எல்லாம் மோடி சொல்வதுபோல வெளியே வர ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் அது மீண்டும் கறுப்புப் பணமாகவே பதுங்கவும் தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை. சென்னையில் மட்டுமே இதுவரை 5 ஆயிரம் கோடி ரூபாய் என்றால் தமிழ்நாடு முழுக்க எவ்வளவு கோடிகள் கை மாறியிருக்கும்… இந்தியா முழுக்க எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி மலைக்கவைக்கிறது.” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதைப் படித்த ஃபேஸ்புக், அதன் தொடர்ச்சியாக ஸ்டேட்டஸ் ஒன்றையும் பதிவிட்டது.
“கடந்த சிலதினங்களுக்கு முன்பு, காவல்துறை அதிகாரிகளுக்கெல்லாம் ஒரு உத்தரவு போயிருக்கிறது. சோதனை என்ற பெயரில் எங்கேயும் எந்த வண்டியையும் நிறுத்த வேண்டாம். யாராவது அதிகமா பணம் எடுத்துட்டுப் போனாலும் அதை கண்டுக்கவேண்டாம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், போலீஸாரும் கடந்த சில தினங்களாக பெயரளவில் மட்டுமே வாகனச் சோதனை நடத்துகிறார்கள். சென்னையைப் பொருத்தவரை இரவு நேரங்களில், குடித்துவிட்டு வருகிறார்களா என்பதைக்கூட பெயரளவுக்கு மட்டும் சோதனை செய்கிறார்கள். வண்டியில் என்ன இருக்கு... எங்கே போறீங்க… என்ற எந்தக் கேள்வியையும் போலீஸார் கேட்பது இல்லை. இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் மட்டும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பதுபோல காட்டிக் கொள்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள். மற்ற மாவட்டங்களைப் பொருத்தவரை எந்த நெருக்கடியும் இல்லை. அதனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், சர்வ சாதாரணமாக பணமாற்றம் என்பது தமிழ்நாடு முழுக்க நடக்கிறது. காவல்துறை உயரதிகாரிகள் சிலரது பணமே இப்படி மாற்றப்படுவதால்தான் இந்த உத்தரவு வந்ததாகச் சொல்கிறார்கள் சிலர். ஆனால் இன்னும் சிலரோ, ஆளுங்கட்சியில் மேலிடத்தில் உள்ள சிலர்தான் இந்த உத்தரவைப் போட்டனர். அதைத் தொடர்ந்துதான் காவல்துறையில் உள்ள அதிகாரிகள் அந்த உத்தரவை இம்ப்ளிமெண்ட் படுத்தச் சொன்னார்கள் என்கிறார்கள். யார் சொன்னார்களோ… போலீஸார் அமைதியாக இருக்கிறார்கள் என்பது மட்டும்தான் உண்மை.”  minnambalam.com

கருத்துகள் இல்லை: