சனி, 28 ஜூன், 2014

கழகத்தை ஸ்டாலின் மயமாக்கும் நடவடிக்கை தீவிரம் ! துரைமுருகன் போன்றோரும் விரைவில் அவுட் !

சென்னை: அங்கே கடித்து.., இங்க கடித்து.. கடைசியில் ஆளை கடித்த கதையாக, திமுகவின் முக்கிய புள்ளியும், கருணாநிதிக்கு நெருக்கமானவருமான துரை முருகனை திமுகவில் இருந்து நீக்க கோரிக்கைள் வலுத்து வருகின்றன. அவரும் நீக்கப்பட்டால், கருணாநிதி தனிமரமாக வேண்டிய நிலை உருவாகும் என்கின்றனர் திமுக முன்னணி நிர்வாகிகள். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலை திமுக அதன் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில்தான் எதிர்கொண்டது என்று சொல்ல முடியுமே தவிர, தலைவர் கருணாநிதி தலைமையில் என்று கூறிவிட முடியாது. ஸ்டாலின்தான் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து தனி நபராக களம் கண்டார் அல்லது ஷோ காட்டினார் , எந்த நேரம் கலைஞர் ஸ்டாலினுக்கு பேர் வைத்தாரோ அச்சு அசல் சர்வாதிகாரி ஸ்டாலின் மாதிரியே களையெடுப்பு அடக்கு முறை , ஆனால் என்ன திமுக ஒரு சர்வாதிகார நாடல்லவே ?
கருணாநிதி அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் தலைகாட்டியதோடு சரி. இப்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் திமுக பெற்ற தோல்விக்காக முக்கிய புள்ளிகள் சிலர் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதிலும் ஸ்டாலின்தான் முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக திமுக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நபர்கள் ஸ்டாலினுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்கள் என்று கூறப்படுவதால் இந்த சந்தேகம் அதிகரித்தது.
அழகிரி, கனிமொழி ஆதரவு.. கே.பி.ராமலிங்கம் மற்றும் போஸ் ஆகியோர் அழகிரி ஆதரவாளர்களாகவும், பழனி மாணிக்கம் மற்றும் முல்லை வேந்தன் ஆகியோர் கனிமொழி ஆதரவாளர்களாகவும் அறியப்பட்டவர்கள். இவர்களுக்கு கல்தா கொடுத்தது ஸ்டாலின்தான் என்ற புகைச்சல் திமுகவில் அணைந்தபாடில்லை. இந்நிலையில் கட்சியின் மிக மூத்த தலைவரான துரைமுருகனுக்கும் இப்போது கட்டம் கட்டப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் வடக்கு மண்டலத்தில் துரை முருகன், ஆற்காடு வீராசாமி, மேற்கே வீரபாண்டி ஆறுமுகம், கிழக்கே, கோசி மணி ஆகியோர் திமுகவின் தூண்களாக இருந்தவர்கள். இதில் வீராசாமி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். உடல் நலக்குறைவால் கோ.சி.மணியும் அடக்கம் காண்பிக்கிறார். வீரபாண்டி ஆறுமுகம் இறந்துவிட்டார். இப்போது பெருந்தலைகளில் தீவிர அரசியலில் இருப்பது துரைமுருகன்தான் என்பதால் ஸ்டாலின் பார்வை அவர் பக்கம் செல்வதாக கூறப்படுகிறது.
வேலூர் தொகுதியில் மட்டும் 2 லட்சம் இஸ்லாமியர் வாக்குகள் உள்ளன. அதில் முஸ்லிம்லீக் 1.70 லட்சம் வாக்குகளை ஈட்டியுள்ளதாம். திமுக வாக்காளர்கள் 35 ஆயிரம்பேர்தான் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளதாக அக்கட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாம்.
பாஜகவுக்கு திமுக வாக்குகளா? முஸ்லிம் லீக் வேட்பாளருக்காக உழைக்காமல் திமுக நிர்வாகிகள் பாஜக வேட்பாளருக்காக தங்கள் கட்சி வாக்குகளை திருப்பிவிட்டதாக கூறப்படுகிறது. மகனுக்கு சீட் கேட்டு கிடைக்காத அதிருப்தியில் துரைமுருகன் கவனம் செலுத்தாததுதான் தங்கள் கட்சியின் தோல்விக்கு காரணம் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் குமுறலாக உள்ளது. வேலூர் தொகுதியிலுள்ள ஒன்றரை லட்சம் திமுக ஆதரவாளர்கள் வாக்கு தங்களுக்கு கிடைத்திருந்தால் தங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் என்று அவர்கள் கருதுகிறார்கள்
துரைமுருகன் குறித்து கருணாநிதியிடம் புகார் அளிக்கவும், முஸ்லிம் லீக் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி துரைமுருகனையும் கட்சியை விட்டு தள்ளி வைக்க ஸ்டாலின் தயாராகிவருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துரைமுருகனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டால், திமுகவில் கருணாநிதிக்கு வலது கரம், இடது கரம் என்று சொல்லிக்கொள்ள ஆளில்லாமல் போய்விடும். அன்பழகன் மூத்த உறுப்பினர் என்றாலும், ஸ்டாலின் என்ன சொன்னாலும் ஓ.கே. என்கிற மனநிலையில் அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: