வியாழன், 26 ஜூன், 2014

மசாலா படங்களை ஜுஜுப்பி ஆக்கிய மோகனாம்பாளின் செம்மர கடத்தல் சாம்ராஜ்யம் !

வேலூர்: செம்மர கடத்தல் கும்பல் கடத்தியபோது, பல கோடி ரூபாய் கொடுத்து சித்தி மோகனாம்மாள், காப்பாற்றியதாக போலீசாரிடம் சரவணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.காட்பாடி அருகே வீட்டில் கோடிக்கணக்கான பணத்தை பதுக்கிய வழக்கில் கரகாட்டக்காரி மோகனாம்மாள், அவரது அக்கா நிர்மலா, மகன் சரவணன், இவருடைய மனைவி மதுபாலா, அணைக்கட்டு அரசியல் பிரமுகர் பாபு, செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்த வேல்முருகன், சதீஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.அதில், ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை கடத்தும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இந்த கடத்தலுக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. செம்மர கடத்தலே சரவணனை பல கோடிகளுக்கு அதிபதியாக மாற்றியது. அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்களின் நம்பிக்கைக்கு உரியவராக சரவணன் மாறினார்.


 இதன் மூலம் சரவணனின் தொடர்பு வட்டாரங்கள் பெரிய அளவில் வளர்ந்தது. இந்த சமயத்தில்தான் மோகனாம்மாள் போலீசில் சிக்கி கொண்டார். இதையடுத்து வேறுவழி இல்லாமல் 25 நாட்களாக தலைமறைவாக இருந்த சரவணனும் கோர்ட்டில் சரண் அடைந்தார்.இதையடுத்து சரவணனை தனிப்படை போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். 2ம் நாள் விசாரணை நேற்று நடந்தது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சரவணன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். சரவணன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:கடந்த ஆண்டு செம்மரக்கட்டைகளை லாரியில் கடத்திக்கொண்டு வரவேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒருசில முக்கிய புள்ளிகள் சரவணனை அணுகி உள்ளனர். அவர்கள் சொன்னமாதிரியே வேலையை சரவணன் முடித்து கொடுத்துள்ளார். இதேபோல் 5 முறை கடத்தல் நடந்துள்ளது. 6வது முறை கடத்தலுக்கு சென்ற லாரி போலீசில் சிக்கி கொண்டதாக அந்த முக்கிய புள்ளிகளிடம் சரவணன் கூறியுள்ளார்.

சரவணன் கூறியதை அவர்கள் நம்பி உள்ளனர். ஆனால் அந்த லாரி போலீசில் சிக்கவில்லை. சரவணன் வேறொரு கும்பலுக்கு கைமாற்றி கொடுத்துள்ளார். இந்த விஷயம் திருவண்ணாமலையை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு தெரிய வந்தது. அந்த கும்பல் வேலூரில் இருந்த சரவணனை காரில் கடத்தி கொண்டு போளூரில் உள்ள ஒரு குடோனில் வைத்து கவனித்திருக்கிறார்கள். மேலும் குறிப்பிட்ட தொகை கொடுத்தால்தான் சரவணனை விடுவிப்போம் என்றும் கூறியுள்ளனர்.அப்போது மோகனாம்மாள், பல கோடி ரூபாய் கொடுத்து சரவணனை அந்த கும்பலிடம் இருந்து மீட்டு வந்துள்ளார். அதன்பிறகு, மோகனாம்மாள் மற்றும் சிலர் சேர்ந்து கொண்டு செம்மர கடத்தலுக்கு பல கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து கடத்தலை நடத்தி வந்துள்ளனர்.

இதன்மூலம் பல கோடிக்கணக்கான பணத்தை மோகனாம்மாள் கும்பல் சம்பாதித்தது.முதல் நாள் விசாரணையில் யார், யாருக்கு தொடர்பு என்பதை வெளிப்படையாக சரவணன் கூறவில்லை. ஆனால் 2ம் நாள் விசாரணையில் செம்மர கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை சரவணன் ஒப்புக்கொண்டார். மேலும் அவர்களுடைய பெயர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், முன்னாள் எம்எல்ஏ, மற்றும் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய புள்ளிகளும் அந்த பட்டியில் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.சரவணன் அளித்த வாக்குமூலத்தை வைத்து அடுத்த கட்ட விசாரணையை தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தநிலையில், 2 நாள் காவல் முடிந்து நேற்று காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சரவணனை, சென்னை புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்
tamilmurasu.org

கருத்துகள் இல்லை: