நாகர்கோவில்: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளில் பிரெஞ்சு, ஜெர்மன்
படிக்கிறார்கள். அப்படி இருக்கையில் ஏன் இந்தி படிக்கக் கூடாது என்று
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
நாகர்கோவிலில் இன்று உதயக்குமார், ராதாகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன்
பேசுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட குழுவைச்
சேர்ந்த உதயகுமார் மற்றும் மீனவ கிராம மக்கள் என்னை சந்தித்து கூடங்குளம்
அணுமின் நிலையத்தை மூட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
பிரெஞ்சு, ஜெர்மன் படிக்கும்போது ஏன் இந்தி படிக்கக்கூடாது?: பொன்.
ராதாகிருஷ்ணன்
கூடங்குளம் அணுமின் நிலையம் வரக்கூடாது என்று ஆரம்பத்திலேயே நாங்கள்
போராட்டம் நடத்தினோம். எங்கள் போராட்டத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை.
உதாசீனப்படுத்தினார்கள்.
தற்போது அணுமின் நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது. அதை நிறுத்துவது என்பது
கடினமான ஒன்றாகும். அந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகள் கொண்டு வரவும் முயற்சிகள்
மேற்கொள்ளப்படும்.
இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார், டாக்டர் ரெட்டி, ரமேஷ், முருகன் உள்பட
இந்து அமைப்பு நிர்வாகிகள் கொலை வழக்கில் குற்றவாளிகள்
கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கொலைகளின் பின்னணியில் மிகப்பெரிய கூட்டம்
உள்ளது. தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
ரயில் கட்டணம் உயர்வு தேர்தலுக்கு முன்பு கொண்டு வந்த திட்டமாகும். பாரதீய
ஜனதா கொண்டு வந்தது அல்ல. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ரயில் கட்டண உயர்வு
தேர்தல் வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ரயில் கட்டணம்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
மோடி அரசின் மீது மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 30
ஆண்டு காலமாக முடங்கி கிடந்த ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான 7 மிகப்பெரிய
திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி உள்ளது. மூடிக்கிடந்த தொழிற்சாலைகளை
திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி உள்ளது.
காங்கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த தவறுகள் உலகிற்கு தெரியும். அதை
சரி செய்ய கால அவகாசம் தேவை. மக்களை ஏமாற்றி அரசு நடத்த மோடி அரசு தயாராக
இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு மக்களின் பங்கும் உள்ளது.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தி
வேண்டுமென்று கட்டாயப்படுத்தக்கூடாது. ஆனால் பணம் படைத்தவர்கள், வசதி
படைத்தவர்கள் இந்தி படிக்கிறார்கள். தமிழை சொல்லி ஆட்சிக்கு வந்த தமிழக
அரசு 1967-ல் இந்தியை ஒழித்தது.
அதன் பிறகு தமிழ் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது, எத்தனை பேர் வேலை வாய்ப்பு
பெற்றனர் என்பதை ஆராய வேண்டும். இந்தி திணிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்.
ஆனால் தமிழகத்தில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழி படிக்கும்போது, இந்தி ஏன்
படிக்கக்கூடாது.
மனித உரிமையை பற்றி பேசுகிறோம். மாணவர் உரிமையை கொடுக்கக் கூடாதா? அவர்கள்
விரும்பும் மொழியை படிக்கக் கூடாதா? மாணவர்கள் விரும்பும் மொழியை படிக்க
உரிமை உள்ளது. திணிக்க உரிமை இல்லை. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்
தொகை வழங்குவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
/tamil.oneindia.in
/tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக