ஞாயிறு, 22 ஜூன், 2014

வடகறி: போலி மருந்து பிசினஸில் போலிஸும் துணைபோவதை அம்பலப்படுத்தும்

ஆப்பிள் ஐஃபோனுக்கு ஆசைப்படும் ஒரு அப்பாவி ஹீரோ எப்படி விபரீத சிக்கலில் சிக்கி தவிக்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன் ராஜன். காமெடி திரில்லராக இருக்கும் இந்தப் படத்தின் ஹீரோவாக ஜெய்யை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு முதல் பாராட்டுகள். எங்கேயும் எப்போதும், ராஜா ராணி படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அசத்துகிறார் ஜெய்.நல்ல ஃபோன் வச்சிருந்தாதான் பொண்ணுங்க லவ் பண்ணுவாங்கன்னு அசட்டுத் தனமாக நண்பன் பாலாஜி சொல்வதை நம்புகிறார் ஜெய். 2000 ரூபாய் வைத்துக்கொண்டு ஃபோன் வாங்க நினைக்கும் ஜெய்க்கு ஊரையே அலறவைத்து சத்தம் போடும் கொரியன் போன் தான் கிடைக்கிறது.
பொல்லாதவன் படத்தில் தனுஷ் பைக் மீது ஆசைப்படுவதுபோல, ஃபோன் கனவோடு இருந்து வரும் ஜெய்க்கு ஒரு ஆப்பிள் ஃபோன் கையில் கிடைக்கிறது.அங்கு தான் தொடங்குகிறது சஸ்பன்ஸ்! அந்த ஃபோனை பயன்படுத்தி வரும் ஜெய்க்கு காதலியாக சுவாதி கிடைக்கிறார். காதல் வானில் சிறகடிக்கும் ஜெய்க்கு ஆப்பு தேடி வருகிறது. எம்.ஜி.ஆர் பக்தனாக இருக்கும் ஜெய்யின் அண்ணன் நேர்மையாக இருப்பதைப் பார்த்ததும், குற்ற உணர்வில் பதபதைக்கிறார் ஜெய். ஃபோனை திருப்பி கொடுக்க போகும் போதுதான் சிலந்தி வலையாக அடுத்தடுத்த பிரச்சனைகள் ஜெய்யை ‘வடகறி’யாக்குகிறது...


அப்பாவியாக அழுதுகொண்டே ரியாக்‌ஷன் கொடுக்கும்போதும் சரி, ரவுடிகளை அலையவிடும் போதும் சரி, ஜெய் பெர்ஃபெக்டாகவே நடித்திருக்கிறார். சீரியஸான நேரத்தில் காமெடி பண்ணும் சுவாதி ரசிக்க வைக்கிறார். ஆர்.ஜே பாலாஜி அவர் ஸ்டைலில் ஏகத்தும் கமெண்டுகளை அள்ளிவிட, நமக்கு தான் சிரிப்பே வரமாட்டேங்குது! பாலாஜி பண்ணும் காமெடிக்கு ‘நாளைக்கு சிரிக்கட்டுமா’ என்று ஜெய் சொல்வதே அதற்கு சாட்சி!

ஆப்பிள் ஃபோனைப் பார்த்ததுமா பொண்ணுங்க காதலிப்பாங்க? இதுல லாஜிக்கே இல்லையே... என நாம் யோசிக்க, அடுத்தக் காட்சியில் ‘பொண்ணுங்கள அவ்வளவு கேவலமா நெனச்சிட்டீங்களா? என சுவாதி ஜெய்க்கு பதில் சொல்கிறார்.


எம்.ஜி.ஆர் பக்தனாக வரும் அருள்தாஸிடம், ‘நான் கூடதான் சிம்பு ரசிகன், அதுக்காக அவர் செய்வதெல்லாம் நானும் செய்றனா?’ என கேட்க, அதற்கு அவர், ‘நடிகன் பலபேர் வருவாண்டா, ஆனா தலைவன் ஒருத்தன் தான்!’ என்ற வசனம் விசிலடிக்க வைக்கிறது.

அடிபட்டு காயத்தோடு வரும் ஜெய்யைப் பார்த்து, அது என்ன லிப்-ஸ்டிக்கா என்று சுவாதி கேட்பதும், அதற்கு ஜெய் கொடுக்கும் ரியாக்‌ஷனும் அதிரவைக்கும் காமெடி!



சன்னி லியோனின் நடனம் இந்தப் படத்திற்கு தேவையில்லாத விளம்பரம்! அதையும் தாண்டி பல சுவாரஸ்யமான விஷயங்கள் படத்தில் இருக்கிறது. ஐ-போனுக்குள் நுழைந்து ஜெய் திண்டாடும் அனிமேஷன் பாடல் வித்யாச அனுபவம்.

போலி மருந்து பிசினஸில் போலிஸும் துணைபோவதை அம்பலப்படுத்தும் இயக்குனருக்கு சபாஷ் போடலாம். சிம்பிளான கதையை சூப்பரான திரைக்கதையோடு இறுதி வரைக்கும் படத்தை நகர்த்துகிறார் இயக்குனர் சரவண ராஜன். 

வடகறி - அதிரடி + காமெடி! nakkeeran.in

கருத்துகள் இல்லை: