புதன், 25 ஜூன், 2014

திமுகவின் தோல்விக்கே ஸ்டாலின்தான் காரணம்: முல்லைவேந்தன் போர்க்கொடி !

சென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் போக்குதான் காரணம் என்று அக்கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான முல்லைவேந்தன் குற்றம்சாட்டியுள்ளார். லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவின் முன்னணி நிர்வாகிகளான பழனிமாணிக்கம், முல்லைவேந்தன், கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழுக்கு முல்லைவேந்தன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ! 'என்னை நீக்கியதற்கு என்ன காரணம், யார் புகார் சொல்லி என்னை நீக்கினார்கள் என்று எந்த விவரமும் தெரியவில்லை.
விளக்கம் கேட்டு வரும் கடிதத்தில் என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். அதற்குத் தகுந்த விளக்கத்தை தலைமைக்குக் கொடுப்போம். நாங்கள் உண்மையாகத்தான் வேலை செய்திருக்கிறோம். இப்போது நான் சொல்லப்போகும் விஷயங்கள் ஒட்டுமொத்த தி.மு.க உண்மைத் தொண்டனின் குரலாக இருக்கும். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடங்கி ஸ்டாலினின் போக்குதான் கட்சியின் தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம். விஜயகாந்த்திடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தனது மருமகனை அனுப்புகிறார். ஏன் அவரை அனுப்ப வேண்டும்? இந்தக் கட்சியில் வேற ஆள் இல்லையா? ஸ்டாலினுக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் கட்சியினுடைய எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். இந்த வேட்பாளரை நிறுத்தினால் கட்சி தோற்கும் என்று நான் முன்பே சொல்லியிருக்கிறேன். அதையும் கேட்காமல் ஸீட் கொடுத்தார்கள். அப்புறம் எப்படி ஜெயிக்க முடியும்? நான் வேலை செய்தேனா இல்லை​யா என்று அவர்கள் நியமித்த கட்சி நிர்வாகிகளிடம் கேளுங்கள். தனிப்பட்ட முறையில் வாக்கெடுப்பு நடத்துங்கள். அவர்கள் நான் வேலை செய்யவில்லை என்று சொன்னால், நானே விலகிக்கொள்கிறேன். அதை விட்டுவிட்டு அவர்கள் நியமித்த பொறுப்பாளரையும், அவர்கள் நிறுத்திய வேட்பாளரையும் மட்டும் வைத்து தயாரித்த பொய் புகாரை வைத்து அறிக்கை தயாரித்தால் நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?' கே.பி. ராமலிங்கம் இதேபோல் திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட மாநில விவசாய அணி செயலாளரான கே.பி. ராமலிங்கம் எம்.பி. அளித்துள்ள பேட்டி: 'கடந்த 24 ஆண்டுகாலமாக கருணாநிதியை சொல்லியதை சீரும் சிறப்புமாக தொய்வில்லாமல் செய்திருக்கிறேன். என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பது என் பொதுவாழ்க்கை வரலாற்றில் மிகப்பெரிய அவமானமாக கருதுகிறேன். தோல்விக்கான காரணம் என்னவென்று தலைமைக்கு முழுமையாகத் தெரியும். தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும் மக்களின் தேவைகளை முன்வைத்தார்களா... இல்லை, தங்களை முன்னிறுத்திக்கொள்ள இந்த தேர்தலை நடத்தினார்களா என்ற கேள்வியை பிரசாரத்துக்குச் சென்றவர் தன் மனச்சாட்சியை கேட்டுக்கொள்ள வேண்டும். தாயைப்போல பிள்ளை... நூலைப்போல சீலை என்பார்கள். முதலில் இதை சொல்கிறவர்கள் மற்ற நிர்வாகிகளை அண்ணன், தம்பியைப்போல மதித்தார்களா? இல்லை, நிர்வாகிகளை அடிமைகள் என்று நினைத்தார்களா? என் மீது குற்றம் சுமத்துகிறவர்கள் முதலில் தங்கள் தவறுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் மரியாதை உண்டு. அந்த மரியாதையை அவர் கொடுத்தாரா என்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குஷ்பு கட்சியில் இருந்து ராஜினாமா செய்தபோது டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமையிடம் பேசி முடிவெடுத்திருக்கலாம் என்றார். ஆனால் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளில் இருந்த எங்களிடம் தலைமை எந்த விளக்கத்தையும் கேட்காமல் நடவடிக்கை எடுத்திருப்பதைப் பற்றி இளங்கோவன் வாய் திறக்கவில்லை. தி.மு.க-வில் இருக்கும் ஒவ்வொருவருமே சுயமரியாதையும், தன்மானமும் உடையவர்கள். அவர்களால்தான் எம்.எல்.ஏ ஆனோம். அவர்களால்தான் அமைச்சர் ஆனோம். அவர்களால்தான் எம்.பி ஆனோம். அதற்காக அவர்களின் அடிமைகளாக ஒருபோதும் இருக்க மாட்டோம்! விருதுநகர் போஸ் விருதுநகர் மாவட்ட துணை செயலாளர் விருதுநகர் போஸ் அளித்த பேட்டி: 1967-ல் இருந்து தி.மு.க-வில் இருக்கிறேன். என் மகள் திருமணத்துக்கு அழகிரிக்கு பத்திரிகை கொடுத்தேன். வெளியூரில் இருந்ததால் அவரால் வர முடியவில்லை. இதற்கிடையே அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து விட்டார்கள். அதற்குப் பிறகு மணமக்களை வாழ்த்த வீட்டுக்கு வந்தார். அதனால்தான் இப்போது என்னை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். மேலும், என் வளர்ச்சி பொறுக்காமல் தங்கம்தென்னரசு பழிவாங்க காத்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம்தென்னரசும் கட்சித் தலைமையிடம் சொல்லி என்னை நீக்க செய்துவிட்டார்கள். நீக்கம் பற்றி கேள்விப்பட்டதும் எனக்கு உயிரே போய்விட்டது. கட்சிக்காக 40 ஆண்டுகள் குடும்பத்தை விட்டு உழைத்த எங்களுக்கு கிடைத்த பரிசு. எங்களுக்கு எப்போதுமே தலைவர் கலைஞர்தான். ஆனால் இப்போது நடக்குற சம்பவங்களைப் பார்க்கும் போது கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பது புரிகிறது. தி.மு.க-வுக்கு சம்பந்தமே இல்லாத வியாபாரிகள், தொழிலதிபர்கள் எல்லாம் பணம் கொடுத்து ஸீட் வாங்கும் நிலைமைக்கு கட்சி போய்விட்டது. தி.மு.க-வில் ஒரு நிர்வாகியை நீக்க வேண்டும் என்றால் முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார்கள். விளக்கம் கொடுத்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், இப்போது எந்த விளக்கமும் கேட்காமல் நீக்கியிருக்கிறார்கள். தி.மு.க ரத்தம்தான் என் உடம்பில் ஓடுகிறது. செத்தாலும் கட்சியை விட்டுப் போக மாட்டேன். நாங்கள் தி.மு.க வேஷ்டியைக் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி மு.க.அழகிரியிடம் கலந்து பேசி முடிவெடுப்போம். இன்பசேகரன் தர்மபுரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் இன்பசேகரன் அளித்த பேட்டி: 'இதுவரை மூன்று தேர்தல்களில் வேலை செய்திருக்கிறேன். அனைத்துத் தேர்தல்களிலும் கட்சியின் வெற்றிக்காக இரவு பகலாக வேலை பார்த்திருக்கிறேன். நாங்கள் வேலை செய்யவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? மாவட்டத்தில் நடந்த அனைத்துக் கூட்டங்களையும் நான்தான் நடத்தியிருக்கிறேன். வேட்பாளருடன் வாக்கு சேகரிக்க எல்லா இடங்களுக்கும் சென்றேன். தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு எனது தலைமையில் பேரணி நடந்தது. பூத் ஏஜென்ட்கள் இல்லை என்று வேட்பாளர் சொல்லியிருக்கிறார். அவர் எல்லா பூத்களுக்கும் சென்றாரா? நான் செய்த பணிகளை தொகுத்து அறிக்கையாக தலைமைக்குத் தரப்போகிறேன். தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவேன். நான் வேலை செய்யவில்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு நீக்கப்பட்டோர் குமுறி உள்ளனர்

tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: