செவ்வாய், 24 ஜூன், 2014

போலி விசா, பாஸ்போர்ட் மூலம் 53 நாடுகளுக்கு 400 பேர் !

சென்னை: இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, அரபு உள்பட 53  நாடுகளுக்கு போலி விசா, பாஸ்போர்ட் மூலம் அனுப்பி வைத்த 5  இலங்கை தமிழர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   குறிப்பாக, போலி  பாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் மலேசியா, இங்கிலாந்து, கனடா,  ஆஸ்திரேலியா உள்பட 53 நாடுகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.  இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.  மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்ல சிவம், துணை கமிஷனர்  ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.


இந்த நெட்வொர்க்கை முழுவதுமாக பிடிக்கும் வகையில், போலீஸ்காரர்  ஒருவரை இலங்கை தமிழர் போல் நடிக்க வைத்து, போலி பாஸ்போர்ட்  மற்றும் விசா பெறுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக, சென்னை  ஆலப்பாக்கத்தில் உள்ள இலங்கை தமிழர் ராஜன் (42) என்பவரை  அணுகினார். அவருக்கு இலங்கை தமிழராக நடித்த போலீஸ்காரர் மீது  உடனே நம்பிக்கை வரவில்லை. எனினும் 15 நாட்களுக்கு பிறகு, ராஜன்,   புரசைவாக்கத்தை சேர்ந்த முகமது அபுபக்கர் சித்திக் (42) என்பவரிடம்  அழைத்துச் சென்றார். அவர், கிருஷ்ண மூர்த்தி என்ற மற்றொரு  இலங்கை தமிழரிடம் போலி பாஸ்போர்ட் தொடர்பாக அழைத்துச்  சென்றார். இந்த நெட்வொர்க்கை நெருங்கிய போலீசார், வேகமாக  செயல்பட்டு, 3 பேரையும்  கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆலப்பாக்கம் சிவரங்கன் (55),  திருவான்மியூர் தேவ சகாயம் பேட்ரிக் ஸ்ரீதர் (48), மதுரவாயல்   ஜெயராஜசேகரன் என்ற ஜூலி (29) ஆகிய 6 பேரும் கைது  செய்யப்பட்டனர். கிருஷ்ண மூர்த்திதான், இந்த கும்பல் தலைவனாக  செயல்பட்டது தெரியவந்தது.  கிருஷ்ணமூர்த்தி போலீசாரிடம்  கூறியதாவது, ‘ இலங்கையில் நடந்த உச்சகட்ட போரின்போது  தமிழகத்திற்கு வந்தேன். எனக்கு 3 மனைவிகள் உள்ளனர்.  என்னைப்போல், பலரும் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  அவர்கள் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்ல  முயன்று வந்தனர். ஆனால், அவர்களிடம் முறையான பாஸ்போர்ட்,  விசா இல்லை. எனவே, போலி பாஸ்போர்ட் தயாரிக்க முடிவு செய்தேன்.  எனக்கு உதவி செய்ய ஜூலி என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை நியமித்து,  அவருக்கு மாதம்  ரூ.20 ஆயிரம் கொடுத்தேன். முகமது அபுபக்கர்  சித்திக், ராஜன், ஸ்ரீதர், ஜெயராஜ சேகரன் ஆகியோர் எனது ஏஜென்டுகள்.

ஒரு போலி பாஸ்போர்ட்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை வசூல் செய்வேன்.  விசாவுக்கு ரூ.2 முதல் ரூ.4 லட்சம் வரை பெறுவேன். ஸ்ரீதர் போலி  விசா மற்றும் பாஸ்போட் தயாரித்ததற்காக சிபிஐ 2006ல் கைது  செய்தது. ஜூலி 2009ல் கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக கைது  செய்யப்பட்டிருந்தார். இவர் கம்ப்யூட்டர் கையாள்வதில் கை தேர்ந்தவர்.
இதுவரை 400 பேருக்கு மேல் போலி விசா மற்றும் பாஸ்போர்ட்டுகளை  தயார் செய்து கொடுத்துள்ளோம். இதன் மூலம் மலேசியா, இங்கிலாந்து,  கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அரபு நாடு என 53 நாடுகளுக்கு  நபர்களை அனுப்பி வைத்துள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இந்தியா  உள்பட அனைத்து நாடுகளிலும் குடியுரிமை அதிகாரிகள் உள்ளனர்.

இவ்வாறு மூர்த்தி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும்,  வியாபாரிகள் போர்வையிலும், சுற்றுலா பயணிகள் போர்வையிலும்  தீவிரவாதிகள் வெளிநாடுகளுக்கு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.  அவர்கள்தான் போலி விசா மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றிற்காக ரூ.4  லட்சம் வரை அளித்துள்ளதாக தெரிகிறது. எனினும், பிடிப்பட்ட 6  பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான், யார்  தீவிரவாதிகள், யார் சாதாரண பொதுமக்கள் என்பது தெரியவரும்.  கைதானவர்கள் தங்கியிருந்த இடத் தில் இருந்து 110 போலி பாஸ்போர்ட்,  கம்ப் யூட்டர், மலேசியா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய  நாடுகளுக்கான போலி விசா மற்றும் குடியுரிமை முத்திரைகள்,  செல்போன், லேமினேசன் கருவிகள் பறிமுதல் செய்யப் பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் முகமது அபுபக்கர் சித்திக் மட்டும்  தமிழகத்தை சேர்ந்தவர். மற்றவர்கள் இலங்கை தமிழர்கள் எனதெரிய  வந்தது. இவர்கள் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுக்க ரூ.30  ஆயிரமும், விசாவிற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வசூல்  செய்துள்ளனர். dinakaran.com

கருத்துகள் இல்லை: