மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.
ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.
ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.
ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.
ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள். மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது. தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும். தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்.
நாம் அடுத்த பயிற்சிக்குச் செல்லும் முன் இதை எல்லாம் மனதில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கொள்வது நல்லது. அடுத்த பயிற்சிக்குச் செல்வோமா?மேலும் ஆழமாகப் பயணிப்போம்.....(தொடரும்)- என்.கணேசன்
www.enganeshan.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக