வெள்ளி, 24 செப்டம்பர், 2010

மறந்துபோன உண்மை என்னவென்றால் மிகவும் கொடூரமான, நன்கு திட்டமிட்டு

பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி புதிய பரிமாணங்களை எட்டுவோம் - ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி உரை
இலங்கைக்கு எதிரான சவால்களை நாம் இனங்கண்டுள்ளோம். அதில் பாரிய சவாலாக இருப்பது எமது கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாகும். இந்நிலையில் அதற்காக இவ்வருட முற்பகுதியில் கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அது பொறுப்புத் தன்மையுடனான கொள்கைக்கு முற்றிலும் உட்பட்டது என்று ஜனாதி பதி மஹிந்த ராஜாபக்ஷ நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய போது கூறினார். ஐ. நா. பொதுசபை கூட்டத் தோடரில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-
எனது இரண்டாவது பதவிக் காலம் முதலாவது பதவிக் காலத்தை விட பெரிதும் மாறுபட்டது. 2005 ஆம் ஆண்டு நான் முதலில் தெரிவு செய்யப்பட்ட போது எனது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பதாக வாக்குறுதி வழங்கினேன். அதை நிறைவேற்றியுள்ளேன். சில காலத்துக்கு முன் அங்கு கனவாக மட்டுமே இருந்த சமாதானம் இப்போது அங்கு நனவாகியுள்ளது. எனது இரண்டாவது பதவிக் காலத்தில் சமாதானம் மற்றும் சபீட்சத்தை ஸ்திரப்படுத்துவதுடன் பயங்கரவாதம் மீண்டும் ஒருமுறை தலைதூக்க இடமளிக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை எனது மக்களுக்கு வழங்குகிறேன்.
விரைவிலேயே மறந்துபோன உண்மை என்னவென்றால் மிகவும் கொடூரமான, நன்கு திட்டமிட்டு செயற்பட்ட சிறந்த நிதி உதவியை பெற்று, நன்றாக இயங்கிய ஒரு பயங்கரவாத இயக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதாகும். இது ஏனைய நாடுகளிலும் தனது வலையை விரிக்கக் கூடியதாக இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.
மேற்கு நாடுகள் அண்மைக் காலத்தில் அனுபவித்துவரும் பயங்கரவாதத்தின் கொடூரத்தை இலங்கை மக்கள் சுமார் 30 வருடங்கள் அனுபவித்து வந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் அதில் உயிரிழ ந்தனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இலங்கை ஜனாதிபதி ஒருவரும் முன்னோக்க தரிசனத்துடன் கூடிய ஒரு இந்தியத் தலைவரும் நூற்றுக்கணக்காக புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.
வழி தவறிப் போன சிலருக்கு நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் பிரிவினைவாதம், குரோதம், மற்றும் வன்முறைக்கு துணை போகாதீர்கள். அதற்கு மாறாக எம்முடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திய வண்ணம் புதிய பரிமாணங்களை நாம் எட்ட முடியும்.

கருத்துகள் இல்லை: