திங்கள், 20 செப்டம்பர், 2010

கரடியனாறு வெடிவிபத்துச் சம்பவம் பல்வேறு கோணங்களில் விசாரணை!


சக்தி வாய்ந்த வெடிபொருட்களை கவனயீனமாக எடுத்துச் செல்லப்பட்டதே கரடியனாறு பொலிஸ் நிலைய வெடிவிபத்துக்குக் காரணமென கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக தெரிவித்துள்ளார்.அத்துடன், இந்தச் சம்பவம் நடைபெறக் காரணமாயிருந்த நிலைமைகள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தற்போது விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விஷேட புலனாய்வுக் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து தற்போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுக் குழுவினர் உடனடியாகவே அவ்விடத்திற்குச் சென்று தங்கள் பணிகளை ஆரம்பித்தனர்.அடுத்த ஒரு வாரத்திற்குள் இது தொடர்பாக அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தவெடி விபத்து தொடர்பாக இராணுவ வெடிமருந்து நிபுணர் குழுவும் விசாரணைகளை நடத்தி வருகிறது. ஆரம்ப விசாரணைகளின் படி, டைனமற்றுடன் நின்ற கொள்கலன் கடும் வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தால் கடும் வெப்பம் காரணமாக அதனுள்ளிருந்த “ஜெலிக்நைற்” வெடிமருந்து வெடித்திருக்கலாமென கூறப்படுகிறது.
இந்த வெடி விபத்துக்கு சதிச்செயல்கள் எதுவும் காரணமல்ல என்றும் எனினும் நாசகாரச் செயல்கள் எதுவும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.அத்துடன், இந்த வெடி விபத்தின் தாக்கம் சுமார் ஒரு கிலோ மீற்றர் சுற்றளவில் பாதிப்பையேற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: