வெள்ளி, 24 செப்டம்பர், 2010

10 ஆயிரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்லும் போராட்டம

இலங்கை கடற்படையை கண்டித்து ஆயிரம் படகுகளில்
 10 ஆயிரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்லும் போராட்டம


தமிழகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்படுகின்றனர். தினமும் மீனவர்களை தாக்குவதும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத் துவதும் தொடர் கதையாகி வருகிறது.
இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த பல முறை மத்திய-மாநில அரசுகளை கேட்டும் மீண்டும் இந்த நிலை தொடர்வதால் மீனவர்கள் கவலையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ராமேசுவரத்தில் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் மகத்துவம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், அந்தோணி, சேசுராஜா, எமரிட், ஜான், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்டித் தர வேண்டும்; எல்லை தாண்டி சென்ற 110 படகுகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்; இலங்கையில் உள்ள படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகள் வருகிற 8-ந் தேதிக்குள் நிறைவேற்றக்கோரி, அக்டோபர் 11-ந் தேதி ஆயிரம் படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரண்டு கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: