சனி, 25 செப்டம்பர், 2010

கமல் - பாலா கடவுள் சர்ச்சையின் சலசலப்பில் ‘மைனா’

 


       மைனா பட இசைவெளியீட்டு விழாவில் கமல், இயக்குனர் பாலாவின் வருகை ஹைலைட்டாக அமைந்தது. அதே போல அவர்கள் இருவரின் காரசாரமான பேச்சுக்களும் விழாவை பரபரப்பாக்கியது. அவர்கள் பேசிய போது ஆத்திகமும் நாத்திகமும் வானளாவ சிறகடித்தது என்றே கூறனும்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை அமைத்துக் கொண்ட இயக்குனர்களில் ஒருவர்தான் பிரபு சாலமன். கிங், கொக்கி, லீ, லாடம் என்று ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட புதுமையான கருத்துக்களை சொல்லியிருப்பார். இப்போதும் அவர் இயக்கியிருக்கும் ‘மைனா’படமும் சினிமாவில் புதிய மைல்கல் என்று புகழப்பட்டு வருகிறது.

மைனா படத்தின் சிறப்புக்காககவே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் கல்பாத்தி எஸ் அகோரத்தின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து திரையிடுகின்றன. இதில் புதுமுகம் விதார்த் கதாநாயகன். இவர் கூத்துப்பட்டறை மாணவன். அமலாபால் என்ற அனகா (‘சிந்து சமவெளி’ புகழ் அனகாவேதான்) இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  ஒருவகையில் இவரும்கூட புதுமுகம்தான். சிந்து சமவெளிக்கு முன்பே இதில்தான் நடித்தார் அனகா. தயாரிப்பு ஜான் மேக்ஸ். 
 
யுகபாரதியின் வரிகளில், டி.இமானின் பிரமாதமான இசைச் சேர்ப்பில் உருவான ‘மைனா’ பாடல்கள் வெளியீடு சத்தியம் திரையரங்கில் செப்டம்பர் 23ந் தேதி(நேற்று) மாலை நடைபெற்றது.

இவ்விழாவில் கமல், இயக்குனர் பாலா, கார்த்தி, கரண், ஷாம், சிபிராஜ், யுகபாரதி மற்றும் மைனா படக்குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாடல் குறுந்தகடை கமலஹாசன் வெளியிட, அதை பாலா பெற்றுக்கொள்ள சிறபாக நடந்தது  இசைவெளியீடு. இதில் இருவரும் பேசியது இன்னும் சிறப்போ சிறப்பு. 

மைனா படம் பற்றி பேசிய யுகபாரதி, “மைனா படம் மிகப் பெரிய வெற்றிப்பெறும். இவ்விழாவில் பேசுவதற்கு குறிப்பெடுத்து கொண்டு வரவில்லை. என்றாலும் பிரபு சாலமன் பற்றி நினைக்கும் போது ஈரோடு தமிழன்பனின் ஒரு கவிதையை மட்டும் குறிப்பாக சொல்ல வேண்டும் என தோன்றுகிறது. 

“பத்துமுறை கால் இடறி விழுத்தவனுக்கு 
பூமித்தாய் முத்தமிட்டு சொன்னாள்-  
நீ ஒன்பது முறை விழுந்து எழுந்தவன் என்று”

அப்படித்தான் பிரபு சாலமனும். இதுவரை அவர் எத்தானையோ தோல்விகளை கண்டிருந்தாலும், இந்தப் படத்தில் அவர் நிமிர்ந்து எழுந்து விடுவார்.

‘கர்த்தர் கைவிட்டதும் இல்லை, விட்டு விலகுவதும் இல்லை’ என்று பிரபு சாலமன் அடிக்கடிக் கூறுவார். அதைப் போலவே இந்தப் படத்தின் வெற்றியில் அவரை கர்த்தர் கைவிடமாட்டார்” என்றார் யுகபாரதி.

இவர் இப்படிக் கூறியதுதான் விழாவின் பரபரப்புக்கு அடிப்படையாக அமைந்தது. 

இவரை தொடர்ந்து பேசவந்த பாலா தொடங்கும் போதே ஒருவித வேகத்தோடு பேசத்தொடங்கினார், “ இவ்விழாவில் கர்த்தர் என்ற ஒருவார்த்தை அடிபட்டது. அந்த வார்த்தையை கேட்டவுடன் எனது மூளைக்குள் சுளீர் என்றிருந்தது.


‘புத்தியுள்ளவனுக்கு எந்த கடவுளின் ஆசியும் தேவையில்லை’ என்று படபடவென பொறிந்தார் பாலா.(அப்போது ‘அகம் பிரமாஸ்மி’ என்ற வார்த்தை சத்தமாக முழங்குவது போலிருந்தது.)

மேலும் பேசிய பாலா, “இந்தப் படத்தை பார்த்து ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன். பிரபு சாலமனை ஆரத்தழுவிக் கொள்ளனும், பாராட்டி முத்தம் தரணும் என்பதைத் எல்லாம் தாண்டி, அவர் மீது ஒரு பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது. 

இமானின் இசை பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இமானின் அப்பா, ‘தன் மகனைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா’ என்று வருத்தப் படுகிறாரோ என்று நினைக்கிறேன். இமனை பற்றி நாங்கள் பேசவேண்டியதில்லை. படம் வெளிவந்த பிறகு மக்கள் பேசுவார்கள். அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கு அவரின் இசை.

இதில் நடித்தவர்கள் எல்லோரும் புது முகங்கள்தான். ஆனால் 100 படங்களுக்கு மேல் நடித்த அனுபம் பெற்றவர்கள் பேல சிறப்பாக நடித்துள்ளார்கள்” என்று பாராட்டினார் பாலா. 

அவரைத் தொடர்ந்து பேசவந்த பிரபு சாலமன்,'தேங்ஸ் சீஸஸ்' என்றுதான் ஆரம்பித்தார். இப்படி சொன்னவுடன் பாலாவை பார்த்து,“மன்னிச்சுடுங்க பாலா. இது என் நம்பிக்கை.

 காடு, மலை என்று நடந்த இந்தப் படப்பிடிப்பின் போது பல இக்கட்டான சூழ்நிலைகளில் எல்லாம் தெய்வாதீனமாக எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் நடந்தன. 

இந்தப் படம் இந்த அளவிற்கு வந்திருப்பதற்கு காரணம் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்தான். அவருக்கும், இந்தப் படத்தை வழங்கும் உதயநிதி மற்றும் கல்பாத்தி எஸ் அகோரம் ஆகியோருக்கும் நான் நன்றி என்று மட்டும் கூறுவதைவிட வாழ்நாள் முழுவதும் வணக்கம் செய்வேன் எனபது தான் பொருத்தமாக இருக்கும்” என்றார்.

கடைசியாக பேசவந்த கமல், “ இந்தப் படம் சாலமனுக்கு முதல் வெற்றிப்படமாக இருக்கும். அதற்கு காரணம் அவர் நம்பும் கர்த்தராகவோ, இல்லை பாலா நம்பும் மனித அறிவாகவோ இருக்கலாம். 


இந்த நேரத்தில் பாலாவுக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன் ‘அடக்கி வாசிக்கவும் பாலா’. ஏன்னா நாளைக்கு அயோத்தி பிரச்சனைக்கு தீர்ப்பு சொல்லப் போறாங்க. 

அயோத்தி பிரச்சனையில் தீர்ப்பு சொல்லவிருக்கும் இந்த நேரத்திலும், கடவுள் பற்றி தமிழ் நாட்டில் தைரியமாக பேசுகிறோம் என்றால், அதற்கு யார் காரணம் என்று பாலாவுக்கு அருகில் இருக்கும் உதயநிதிக்கு தெரியும். என்று ஒரு பீடிகை போட்டார் கமல். அவர் சூசகமாக சொன்னாலும், அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது அது யார் என்று.(நமக்கும்தான்...)

உதயநிதி பேசும்போது ‘மைனா’ படத்தை பார்த்துவிட்டு ரெண்டு நாளா தூங்கவில்லை என்றார். ஆனால் நான் நிம்மதியாக தூங்கினேன்.

இப்படி ஒரு தரமான படங்கள் வரும்போது தான் உண்மையான சினிமாக் கலைஞன் மிகவும் சந்தோஷப்படுகிறான். இது போன்ற நல்லப் படங்களுக்கு, என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பாலா போன்றவர்களின் ஆசிர்வாதமும் உண்டு. (என்று கூறி கண்சிமிட்டியபடி) இப்படி எல்லாத்தையும் தமாசாதான் எடுத்துக்கனும் என்றார் கமல்.

கடவுள் பற்றி என்னோட கருத்து என்று சொன்னால், ‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லே தெரியாது. தடுக்கி விழுந்திடுவோம்.எதற்குமே நமக்கு பகுத்தறிவு வேண்டும். இப்படி தனது கருத்தை  வழக்கமான தனது பாணியில் வலுவாக பதிவு செய்தார் கமல். (தசாவதாரம் படத்தின் முடிவில் ‘கடவுள் இல்லை என்று கூறவில்லை... இருந்தால் நல்லா இருக்கும் என்கிறேன்’ என்றவர்தானே அவர்)

எந்த ஒரு விழாவிலும் நான் இவ்வளவு நேரம் பேசியதில்லை. ‘அவர் சொன்னதையே வலிமொழிகிறேன். இதை பற்றி ஏற்கனவே எல்லாரும் சொல்லிட்டாங்க. இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை’ என்று அடுத்தவர்கள் மீது பொறுப்பை ஒப்படைத்து விடுவேன்.

அப்படிப்பட்ட நான் இந்த விழாவில் இவ்வளவு நேரம் பேசுறேன் என்றால் அதற்கு காரணாம் மைனா படம் தான். இது போன்ற சின்னப் படங்களை எல்லாம் என்னுடைய சொத்தப் படமாகத்தான் கருதுவேன். ஏனெனில் நானும் இது போன்ற சின்னப் படங்களில் இருந்து வந்தவன்தான். 

இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்று அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்  ‘மைனா’ படம்... அப்படி ஓடும், இப்படி ஓடும் என்று கட்டியம் கூறுவோ,ஜோசியம் கூறுவோ மாட்டேன்.அது மக்களின் கையில் இருக்கு. 

படம் நன்றாக ஓடுவதற்கு ரசிகர்கள்தான் காரணம். என்னோட ஆசை எல்லாம் இது போன்ற நல்லப் படங்கள் நிச்சயம் வெற்றிப்பெற வேண்டும் என்பதுதான். 

தரக்குறைவான படங்களை திட்டி தூற்றுங்கள். தரமான படங்களை பாராட்டி போற்றுங்கள். தூற்றலையும், போற்றலையும் மறந்து விட்டால், நாம் தரம் குறைந்து விடுவோம்.

இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெறும். அப்போது இன்னும் தலை நிமிர்வுடன் பேசுவேன். என்று மிகச்சிறப்பாக பேசினார் கமலஹாசன்.

இப்படி அனைவரும் மைனா படத்தைப் பற்றிய புகழ்ந்து பேசியதை கேட்டவுடன் படத்தை இப்போதே பார்த்தாகவேண்டும் என்ற பேராசை ஏற்படுகிறது. ஆனால் அதற்கு எந்திரன் ஆரவாரம் முடியும் வரை பொறுத்திருக்க வேண்டுமே. எந்திரன் படம் வெளிவந்த சில வாரங்களுக்கு பிறகே மைனா சிறகுவிரிக்கிறது.

கருத்துகள் இல்லை: