ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

பாவம் டக்ளஸ் அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் நாசமாக்கியே தீருவதென்று புறப்பட்டிருக்கிறது இந்தக் கோஷ்டி

காக்கா கூட்டத்தைப்பாருங்க அதுக்கு கற்றுக்கொடுத்தது யாருங்க.    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
பாரிஸில் சில இலக்கிய அரசியல் அறிவுஜீவிகள்  இருக்கிறார்கள். இவர்களை என்ன கட்டக்கரியில் சேர்ப்பதென்றே தெரியாது. இலக்கியவாதிகள் என்றால் அவர்களுக்கு இலக்கியம் தெரியாது. அரசியல்வாதிகள் என்றால் அரசியல் தெரியாது. மார்க்சியவாதிகள் என்றால் மார்க்சியம் தெரியாது. தலித்வாதிகள் என்றால் தலித்தியம் தெரியாது. ஆனால் எல்லாம் தெரிந்ததுபோல அலட்டிக்கொள்வார்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வருவார்கள்.  இருபது வருடங்களுக்கு மேலாக பாரிஸில் இருக்கிறார்கள். ஆளையாள் முட்டிமோதியபடி இன்னும் இந்தக் கண்றாவி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பாரிஸ் அதிகளவு தமிழ்சனத்தை கொண்டுள்ள இடம். புலிகளுக்கு எதிரான குழக்கள் இங்கு இருந்தது இன்னும் இருக்கிறது. இந்தக்குழுவிற்கும் ஒற்றுமைக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது. ஆளையாள் ஒருவருக்கெதிராக நோட்டீஸ் அடிச்சு விடுவதில் வல்லவர்கள். கல்வெட்டு கூட உயிரோட இருந்த ஒருவருக்கெதிராக வெளியிட்ட வல்லமை படைத்தவர்கள். நோட்டீஸ் அடித்த காலம் போய் சஞ்சிகைகள் வெளியிட்டார்கள். வாசிப்பதற்கு கூட ஆளில்லாமல் நட்டத்தோடு போய்விட்டது. தற்போது இணையத்தளங்கள் கொண்டு வந்து ஆளையாள் மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.
என்ன கொள்கையை வைத்து வேலை செய்கிறீர்கள் என யாரும் கேட்கக்கூடாது. இவர்களுக்கு வேண்டாதவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் ஆதரிப்பதை எதிர்ப்பதுதான் இவர்களது கொள்கை. மற்றப்படி சொல்லிக்கொள்ளும்படி எதுவும் கிடையாது. ஒருவர் மார்க்சிற்கு அடுத்ததாக தான்தான் அப்பழுக்கற்ற மார்க்சியவாதி என சேர்க்கிளில் கிறுக்கிக் கொண்டிருக்கிறார். இன்னொருத்தர் இனியொரு என்று என்னத்தைச் சொல்ல வருகிறார் என்று தெரியாமல் இம்சை பண்ணியபடி இருக்கிறார். தலித்துக்கள் தூ என்றபடி இடையிடையே துப்பியபடி இருக்கிறார்கள். இன்னொருத்தர் சோபாவில் சாய்ந்தபடி தானொரு சக்தியாக ஆடிக்கொருதடவை புலம்பியபடி இருக்கிறார். அங்கால புலிகள் நெடியவன் குறூப் கே.பி குறூப்புடன் வார்கேம் நடாத்தியபடி இருக்கிறது. என்ன செய்வது தமிழ்ச்சனம் தங்கட அலுவல்களில் கவனமாக இருக்கிறது. இரண்டு மிளகாயத்தூள் போத்தல் எடுத்தால் ஒருபோத்தல் மிளகாய்த்தூள் இலவசம் என்கிற மலிவுவிலைகளில் தமிழ்ச்சனம் மலிஞ்சு போய்க்கிடக்கிறது.
தமிழர்கள் ஒற்றுமைப்படமாட்டார்கள் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில் தமிழர்கள் ஒற்றுமைப்படவேண்டும் எனச் சொல்பவர்கள் ஒற்றுமையாக இல்லாதவரை தமிழர்கள் ஒற்றுமைப்படப்போவதில்லை. அதிலும் பாரிஸ் தமிழ்அறிவுஜீவிகள்? சொன்னால் யாரும் கேட்கப்போவதில்லை. சாராயம் குடிச்சு உயிரைவிட்ட அறிவுஜீவிகள் இங்குதான் அதிகம். இலக்கியச்சந்திப்பு நடாத்திய போது ஒரு பெண்ணுக்காக வெறியில் உருண்டு பிரண்டு அடிபட்டாங்கள். கலைச்செல்வன் மட்டும்தான் தமிழ்ச்சமூகத்திற்கு மிகப்பெரிய வரலாற்று தியாகத்தை செய்ததுபோல அவரது வருடா வருட நினைவுதினத்தை பெரிதாக விளம்பரப்படுத்தி கூட்டங்கள் போட்டாங்கள். அவர் என்ன பெரிதாக தமிழ்ச்சமூகத்திற்கு செய்தார் என்று எனக்கும் தெரியவில்லை. கூட்டம் நடாத்தியவர்களும் சொல்லவில்லை. கலைச்செல்செல்வனைவிட தமிழ்ச்சமூகத்திற்காக தமது உயிரை அர்ப்பணித்தவர்கள் பாடுபட்டவர்கள் என நூற்றுக்கணக்கான மனிதர்களை நினைவுகூர ஏன் இந்த பாரிஸ் அறிவுஜீவிகளால் முடியாமல் போனது.
இது போன்ற பல ஓட்டைச்சிரட்டைகளை வைத்துக்கொண்டு தமிழ்ச்சனத்திற்கு தண்ணி பருக்க வெளிக்கிட்டால் என்ன நிலமை. புலிகளுக்கு இதுபற்றிய கவலை எதுவும் இருக்கவில்லை. புலி உச்சத்தில் இருந்தபோது இந்த மாற்றுக்கருத்து அறிவுஜீவிகளுக்கிடையில் இருந்த சண்டை சச்சரவுகளால் புலி சந்தோசமாக தனது அலுவல்களை பார்த்துக்கொண்டது. கருணா பிரிந்தபோது ஒரு கோஷ்டி கருணாவை ஆதரித்தது. இன்னொன்று கருணாவிற்கு எதிராகப்போனது. பிறகு கருணாவில் இருந்து பிள்ளையானை ஆதரித்தது. இது போதாதென்று டக்ளஸ் பாரிசிற்கு வந்துபோக மக்டோனால்சில் டக்ளசின் பணத்தில் சாப்பிட்டுவிட்டு ஒரு கோஷ்டி ஏறுமுகமாக இறங்கியது. இருக்கிற அலப்பறை போததென்று வானொலியில் வந்து டக்ளஸ் புராணம் பாடியது. பாவம் டக்ளஸ் அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் நாசமாக்கியே தீருவதென்று புறப்பட்டிருக்கிறது இந்தக் கோஷ்டி.
தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர்களுக்கு கொஞ்சம் ஊத்திக்கொடுத்து நாங்கள்தான் தமிழ்ச்சமூகத்தின் வழிகாட்டிகளாக பேட்டிகொடுத்து பெயரை முன்னிலைப்படுத்த ஒரு கோஷ்டி இறங்கியது. ஐரொப்பாவில் இவர்கள்தான் இலக்கியவாதிகள் என்றும் முற்போக்குவாதிகள் என்றும் இந்திய வாராந்தச்சஞ்சிகைகள் இவர்களைப் பற்றி வாந்தியெடுத்துக்கொண்டன. இப்படி தண்ணியில் பேரெடுத்துக்கொண்டவர்கள் இவர்கள்.
இலக்கியச்சந்திப்பு நடைபெறும்போதெல்லாம் இந்தக்கோஷ்டிகளின் காவடியாட்டங்களைக் காணலாம்.  சந்திப்பு நடைபெறத் தொடங்கிய சில மணிகளில் காருக்குள் இருந்து போத்தல்களை எடுத்து தாகசாந்தி செய்துவிட்டு இலக்கிய விவாதங்களில் கலந்து கொள்ளாவிட்டால் இவர்களுக்கு இலக்கியம் மற்றும அரசியல் துணிவு வராது. மைக்கைப்பிடிக்கும்போது கண்கள் சிவந்தபடி இடதுசாரி தத்துவம் பேசுவார்கள். பொது நிகழ்ச்சிகளில் கூட தண்ணியைக்கூட தியாகம் செய்ய முடியாதவர்கள் தமிழ்மக்களின் பிரச்சினைகளில் தீர்க்கதரிசனம் பற்றி கதைத்தார்கள்.
எல்லாம் முடிந்துவிட்டது. புலிகள் தோல்வியடைந்து விட்டார்கள். இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்று விட்டது. இவர்களின் உள்முரண்பாடுகள் முடியவில்லை. பிளேட்டை மாற்றி விட்டார்கள். ஒரு குறூப் அரசை ஆதரிக்க இன்னொன்று அதை எதிர்க்கிறது.  அதாவது நீ எதை ஆதரிக்கிறாயோ அதை நான் எதிர்ப்பேன் என்கிற மாற்றமுடியாத தத்துவ விதி.
இதுதான் பாரிஸ் தமிழ் இலக்கிய அரசியல் அறிவுஜீவிகளின் நிலை. இதில் இருந்து வித்தியாசமாக  சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மௌனமாக இருக்கிறார்கள். இந்த சண்டைகளுக்குள் அவர்கள் இல்லை. தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்காக சிந்திப்பவர்கள். ஆனால் இவர்களின் குரல் மேற்படி காவடியாட்டங்களின் கத்தல்களுக்கிடையே அடங்கிப்போயிருப்பதுதான் கவலைக்குரியது.
www.teavadai.wordpress.com

கருத்துகள் இல்லை: