வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தமிழனுக்கு அறிவிருக்கிறதோ இல்லையோ ஆத்திரம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது

தன்மானத் தமிழன் தன் மானம் இழந்த கதை!

ஜனாதிபத அமெரிக்காவுக்கு விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்~வைக் கைது செய்ய வேண்டும் என்று புலன் பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக கனடா, அமெரிக்க தமிழர்கள் கூச்சலிடுகின்றனர். நமக்கிருக்கிற ஒரே ஒரு ஆறுதல் மகிந்தவைக் கைதுசெய்து புலன்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களிடம் கையளிக்க வேண்டும் என்று கோராததையிட்டுத்தான்.

இலங்கையின் சமாதான தூதராக முன்னர் பணியாற்றிய நோர்வே நாட்டு அமைச்சர் எரிக் சொல்ஹேம் முன்னொரு காலத்தில் புலிகள் இராணுவபலமுடன் இருக்கிறார்கள் அவர்களுடன் பேசுங்கள் என்று இலங்கை அரசாங்கத்துக்கு தடிவிட்டுக்கொண்டிருந்தவர், முள்ளிவாய்கால் ‘துன்பியல் சம்பவம்’ நடப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன் புலன்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தோன்றி தன்னால் மஜிக்கெல்லாம் செய்ய முடியாது என்று கூறிய எரிக் சொல்ஹேம் இன்று ‘புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தை சிறந்த கோணத்தில் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இதனைக் கவனத்தில் கொள்வதற்கு தமிழர்களுக்கு நேரமில்லை. அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கு புலன்பெயர் தமிழர்களின் ஊடகங்களுக்கு வக்கில்லை.

யுத்தத்தின் பின்னர் தமிழர் பகுதியில் அநீதியான செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் ஒருசில ஆரோக்கியமான விடையங்களும் நடைபெற்றுவருகின்றன. அதனைச் சுட்டிக்காட்டவோ தட்டிக்கொடுக்கவோ தமிழர் ஊடகங்களுக்கும் சில தமிழ் அரசியல் வாதிகளுக்கும் ஆய்வாளர்களுக்கும் துப்பில்லை. குற்றம்சாட்டி, துரோகியென்று பட்டம் சூட்டி, சுட்டுத்தள்ளும் போக்கில் வளர்ந்த அறிவாயிற்றே வேறு எப்படித்தான் சிந்திக்கும்?

தமிழர்களுக்கு உரிமை கிடைக்குதோ இல்லையோ? ஒருவேளை கஞ்சிக்கு வழி பிறக்குதோ இல்லையோ? இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்களை பகுதிபகுதியாகவேனும் விடுதலை செய்கிறதே பேரினவாத அரசாங்கம். அவர்களுக்கு தொழிற் பயிற்சியும் அளித்து, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கிறதே மகிந்த அரசாங்கம்.

உயிர்வாழும் உரிமையே முதன்மையானது. அதனை இலங்கை அரசாங்கம் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு அளித்திருக்கிறது. புலிகளிடம் சரணடைந்த அல்லது புலிகளால் கைதுசெய்யப்பட்ட எத்தனை மாற்று இயக்க உறுப்பினர்கள் - பொதுமக்கள் விடுதலையானார்கள்? மாற்றுக் கருத்துடையவர்களின் உயிர்வாழும் உரிமையை முற்றுமுழுதாக மறுத்த புலிகள் எதைத்தான் ஆக்கப+ர்வமாக செய்தார்கள்?

கூத்தமைப்பு அரசியல் சில்லறைகளும் மல்லினப்பட்டுப்போன சில தமிழ் ஊடகங்களும் அதன் அரசியல் விற்பன்னர்களும் முன்னதை மறைத்து பின்னதை மறந்துவிடுகிறார்கள். அதாவது அரசாங்கத்தின் ஆக்கப+ர்வமான செயற்பாடுகளை மறைத்து புலிகளின் குற்றங்களை மறந்தும் விடுகிறார்கள்.

தமிழனுக்கு அறிவிருக்கிறதோ இல்லையோ ஆத்திரம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. தமிழனின் நெஞ்சில் கைவைத்த மகிந்தவின் வேட்டிக்குள்ளாவது கைவைக்காவிட்டால் தமிழன் என்று சொல்லி தலைநிமிர்வது எப்படி?

அதனால்தான் அமெரிக்காவுக்கு வந்துள்ள மகிந்தவைக் அமெரிக்கா கைதுசெய்து அவருடைய வேட்டியை உருவவேண்டும் அதை கண்குளிர பார்க்க வேண்டும் என்பதே புலன்பெயர்ந்த தமிழனின் அவா! அமெரிக்காவின் கோட்டையும் சூட்டையும் உருவவேண்டிய அவசியமே இல்லை. அது ஏற்கனவே அவிழ்த்துப்போட்டு அம்மணமாத்தான் இருக்கிறது. அது வோறொரு கதை.

மேலும் இலங்கை அரசாங்கம் சிறுவர் போராளிகளைப் பராமரிப்பது தொடர்பில் ஐ.நா செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி ராதிகா குமாராசாமி முழுத் திருப்தி வெளிப்படுத்தியுள்ளார். அந்தக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக புலன்பெயர்ந்த எந்த தமிழனாவாது சிந்தித்ததுண்டா? அவர்களுக்கு உதவுங்கள், அவர்களுக்கு எவ்வாறு உதவலாம்? என்பது தொடர்பாக எத்தனை கட்டுரைகள் இந்த இணையத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு தக்க பலனேதும் கிடைத்ததுண்டா?

பேரயும் புகழையும் செல்வத்தையும் வயிற்றையும் வளர்க்கும் மூன்றாம்தர தமிழ் உணர்வாளர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக என்றாவது சிந்தித்ததுண்டா? குறைந்தபட்சம் ஒரு நேர பசியை ஆற்றுவதற்கு முயற்சித்ததுண்டா?

தாய் தந்தையை இழந்து, உற்றார் சுற்றத்தை இழந்து நிற்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் அவலத்தை யார் உணர்வார்கள்? அவர்களின் புன்சிரிப்பில் இந்த மூன்றாம்தர தமிழ் உணர்வாளர்களின் பொய் முகங்கள் சுக்குநூறாக நொருங்காதா?

யுத்தத்தில் முதலில் கொல்லப்படுவது உண்மை. யுத்தத்திலும் யுத்தத்தின் பின்னரும் முதலிலும் முதன்மையாகவும் பாதிக்கப்படுவது குழந்தைகள், பெண்கள். தமிழ் சமூகம் இந்த நூற்றாண்டுவரை பெண்களின் கற்பையும் கட்டுப்பாடுகளையும் தலையில் சுமந்து வந்திருக்கிறது.

அறிவியலும் தொழிற்நுட்பமும் ஒன்றைஒன்று போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்பத்தை மனிதன் இயக்குகிறானா? மனிதனை தொழில்நுட்பம் இயக்குகிறதா என்கிற குழப்பங்கள் ஆரம்பித்துள்ள நிலையிலும் தமிழன் பெண்களின் கற்பையும் கட்டுப்பாடுகளையும் தலையில் வைத்துக் கூத்தாடுகிறான்.

இந்த கட்டுப்பாடுகள் கலாசார விழுமியங்களை காவவேண்டிய பொறுப்பும் பெண்களின் தலையிலேயே சுமத்தப்பட்டுள்ளது. இதை கறாராக கடைப்பிடிக்க வலியுறுத்துவதும் இந்த மூன்றாம்தர தமிழ் உணர்வாளர்கள்தான். ஆனால் வரும்கால சந்ததிகளுக்கு ஆவனசெய்யாத பொறுப்பற்ற புறம்போக்காளர்களும் இவர்களே.

தமிழ் நிலங்களையும், தமிழ் நாமங்களையும் காப்பாற்றுவதிலும் உரிமைகளை வேண்டி அரசியல்வாதிகளின் சட்டைப்பையில் வைத்துக்கொள்வதிலும் பார்க்க தமிழ் சந்ததியைக் காப்பாற்ற வேண்டும். சந்ததியை அழித்துவிட்டு நிலத்தை பிடித்துவைத்து என்ன பயன்? தமிழ் சந்ததியின் எதிர்காலத்தை சூனியமாக்கிய பின்னர் தமிழ் நாமங்களைக் காப்பாற்றுவதில் பயனேதும் உண்டா?

அனைத்தையும் இழந்து பரிதவிக்கும் இந்தக் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறுமியர், பெண்கள். அவர்களின் நல்வாழ்வுக்கு தம்மாலான உதவிகளை ஒத்தாசைகளை சில நல்ல உள்ளம் படைத்த உள்நாட்டு வெளிநாட்டு மனிதர்கள் செய்துவருகிறார்கள். அர்வகளின் தன்னலமற்ற கடமையை பாராட்டி அவர்களின் கைகளை கண்ணில் ஒன்றிக்கொள்வோமாகா!

கருத்துகள் இல்லை: