சினிமாவில் டெக்னாலஜி வளர்ந்துட்டே இருக்கு. ஒரு பக்கம், கேனான் 5டி ஸ்டில்கேமராவில் படம் எடுக்குறாங்க. இன்னொரு பக்கம், 'அவதார்' பண்டோரான்னு ஒரு தனி கிரகத்தையே உருவாக்குறாங்க!
சில படங்களோட கதையே புதுசா இருக்கும். 'அட! இப்படியும் யோசிக்க முடியுமா?'ன்னு ஆச்சர்யப் படவைக்கும். டெக்னாலஜி, கதை இரண்டிலும் மிரளவைக்கும் ஒரு படம், என் 'ஏழாம் அறிவு'!" - எனர்ஜியோடு பேசுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
"கஜினிக்கு அடுத்து சூர்யாவுடன் மீண்டும் கூட்டணி... பெரிய எதிர்பார்ப்பு இருக்கே?"
"கதை, திரைக்கதையைவிட அந்த எதிர்பார்ப்புதான் எங்களுக்குப் பெரிய சவால். கதைக்காகப் பல மாதங்கள் வேலை பார்த்தேன். இந்தியாவில் இதுவரைக்கும் யாரும் சொல்லாத கதை இது. இது ஒரு பீரியட் ஃபிலிம். சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட். 'கஜினி'யில் சூர்யா கேரக்டர் வித்தியாசமா இருக்கும். இதில் ரொம்பப் புதுசா இருக்கும். உணர்வுகளும் கலையும் மொழிகளுக்கு அப்பாற்பட்டவை. அழகா ஒரு படம் எடுத்து, எல்லா மொழி ரசிகர்களையும் ரசிக்கவைக்கணும்கிறது என் கனவு. அது 'ஏழாம் அறிவு' மூலமா நிறைவேறும்னு நினைக்கிறேன். படத்தை இந்தி, தெலுங்கிலும் டப் பண்ணி ரிலீஸ் பண்றோம். படத்தில் இன்னொரு விசேஷமும் இருக்கு. இந்தச் சமூகம் ஏன் இப்படி இருக்குன்னு நமக்குச் சில கோபம் இருக்குமே... அந்தக் கோபமும், அதற்கான பதிலும் படத்தில் உண்டு. அது அரசியல் கிடையாது. விழிப்பு உணர்வுன்னு வெச்சுக் கலாம்!"
"கஜினியில் பார்த்த சூர்யா இப்போ எப்படி இருக்கார்?"
"முன்னாடி சூர்யா கடுமையா உழைப்பார். ஆனா, திட்டம் எதுவும் இருக்காது. இப்பவும் அதே உழைப் பைத் தர்றார். ஆனா, பக்கா பிளானிங்கோடு இருக்கார். ஒரு விஷயத்தை எப்படி ஆரம்பிக்கணும், அதை எப்படி முடிக்கணும்னு கச்சிதமா திட்டம் போட்டு வேலை பார்க்கிறார். 'கஜினி' சமயம், தமிழ் சினிமாவில் தனக்குன்னு ஓர் இடத்தைப் பிடிக்கணும்னு வெறித்தனமா உழைச்சார். அந்த இடத்தைப் பிடிச்சுட்டார். இப்போ அந்த இடத்தைத் தக்கவைக்கவும், இன்னும் ஒரு படி மேலே போகவும் உழைக்க ஆரம்பிச்சிருக்கார். இந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரை இன்னும் பெரிய இடங்களுக்குக் கூட்டிப் போகும்!"
"ஸ்ருதிஹாசன் தமிழுக்கு செட் ஆகிட்டாங்களா?"
"ஸ்ருதிக்கு இது முதல் தமிழ்ப் படம். உடனடியா எல்லா விஷயங்களையும் பிக்கப் பண்ணிடுறாங்க. அவங்களுக்கு, யானைன்னா அவ்ளோ பயம். ஒரு காட்சியில், சூர்யாவும் ஸ்ருதியும் யானை மேல் ஏறி வரணும். 'சின்ன வயசுல யானை தும்பிக்கையை வெச்சு என் தலையில் தொட்டதுக்கே மயங்கி விழுந்துட்டேன்'னு பயந்தாங்க ஸ்ருதி. 'ரெண்டு நாள்தான் டயம். சீக்கிரம் யானையோட ஃப்ரெண்ட் ஆகிருங்க'ன்னு சொன்னதும், யானைப்பாகன் கிட்டே டிப்ஸ் கேட்டு, யானையோட தும்பிக்கையைத் தொட்டு, தடவிக் கட்டிப்பிடிச்சு நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க. இதே மாதிரி, ஒவ்வொரு காட்சியிலும் எங்க வேகத்துக்கு ஈடு கொடுத்து வர்றாங்க. சினிமா தவிரவும், அவங்க அப்பாபோலவே நிறைய விஷயங் கள் தெரிஞ்சுவெச்சிருக்காங்க. ஒரு தடவை, கமல் சார்கிட்டே பேசிட்டு இருந்தப்போ, ஒரு மணி நேரத்தில் மூணு ஸ்கிரிப்ட் சொன்னார். எனக்குப் பயங்கர ஆச்சர்யம். ஆனா, ஸ்ருதி அதையும் தாண்டிருவாங்களோன்னு தோணுது. ஒரு காட்சியோ, வசனமோ சொன்னா, 'சார், இந்தப் புத்தகத்துல அதைப்பத்தி விவரமா எழுதி இருக்காங்க', 'இந்தப் படத்தில் அப்படி ஒரு பிரமாதமான ஸீன் வெச்சிருக்காங்க'ன்னு நாலஞ்சு ரெஃபரன்ஸ் தருவாங்க. அவ்ளோ, தெரிஞ்சுவெச்சிருக்காங்க. தமிழ் சினிமாவில் ஸ்ருதிக்கு நிச்சயம் பெரிய இடம் காத்திருக்கு!"
"தயாரிப்பாளர் ஆகிட்டீங்களே?"
"எனக்கே அது ஆச்சர்யம்தான். 'ஸ்லம்டாக் மில்லியனர்' முடிஞ்ச தும், ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் என்னை ஒரு படம் இயக்கித் தரச் சொன்னாங்க. 'இப்போதைக்கு முடியாது'ன்னு சொன்னதும் எங்களுக்காக படத்தைத் தயாரிங்கன்னு கேட்டாங்க. உண்மையில், அந்த வேலையில் எனக்கு விருப்பம் இல்லை. அவங்களைத் தட்டிக்கழிக்க, நிறைய நிபந்தனைகள் விதிச்சேன். ஆச்சர்யமா எல்லாத்துக்கும் 'ஓ.கே' சொல்லிட்டாங்க. முதல் படத்தை என் அசிஸ்டென்ட் சரவணன் இயக்குகிறார். இரண்டு காதலுக்கு இடையே நடக்கும் சாதாரண கதைக்கு அழகான திரைக்கதை அமைச்சிருக்கார் சரவணன். அது, அடுத்த வருஷத்தின் மிகச் சிறந்த படமா அமையும்னு நம்பிக்கை இருக்கு!"
"அடுத்தது இந்திப் படமா?""யெஸ்!
'நாம சேர்ந்து இன்னொரு படம் பண்ணுவோம்'னு அமீர் கான் சொன்னார். 'இல்லை சார், 'கஜினி' நல்ல படம்னாலும் உங்களை வெச்சுத்தான் ஓப்பனிங்கே கிடைச்சது. நீங்க இல்லாம நான் இந்தியில் ஒரு படம் ஹிட் கொடுக்கணும். அதுதான் டைரக்டரா எனக்குப் பெருமை. அதுக்கு அப்புறம் சேர்ந்து பண்ணலாம்'னு சொன்னேன். 'நல்ல விஷயம். எந்த உதவின்னாலும் கேளுங்க'ன்னு சொன்னார். அதுதான் அமீர் கான். இடையில், அக்ஷய்குமாரை வெச்சுப் படம் பண்ண ஒரு வாய்ப்பு வந்தது. 'ஏழாம் அறிவு' அநேகமா அடுத்த மார்ச் மாசத்துக்குள் வெளியாகும். அதற்கடுத்து, அக்ஷய் குமாரை வெச்சு ஒரு ஆக்ஷன் படம் பண்ணப்போறேன். அடுத்து, சின்ன பட்ஜெட் படம் பத்தியும் யோசிக்கணும்!"
"இந்தி, தமிழ் இரண்டிலும் எது பெஸ்ட்?"
"தமிழ் சினிமாவில் எப்பவுமே கிரியேட்டிவிட்டிக்குப் பஞ்சம் கிடையாது. நல்ல படங்கள் தொடர்ந்து வந்துட்டே இருக்கு. இந்தியில் அந்த அளவுக்கு நல்ல படங்கள் வெளிவருவது இல்லை. ஆனால், 'த்ரீ இடியட்ஸ்' மாதிரி ஒரே ஒரு 'எக்சலன்ட் ஃபிலிம்' கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்கவெச்சுடுவாங்க. வருடம் முழுக்க வெளி வந்த நல்ல தமிழ்ப் படங்களின் பெயர்களைத் தட்டிட்டுப் போயிடுவாங்க. 'ரங்க் தே பஸந்தி', 'தாரே ஜமீன் பர்', 'த்ரீ இடியட்ஸ்' இப்போது 'பீப்ளி லைவ்'னு நம்ம நான்கு வருட நல்ல சினிமாக்களை நான்கே சினிமாக்களில் முந்திடுறாங்க. தமிழ்லயும் எக்சலன்ட் சினிமாக்கள் வர ஆரம்பிச்சுட்டா, நாமதான் இந்திய சினிமா!"
"அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் அமீர்கானும், ஷாரூக்கானும் ஈகோ யுத்தத்தில் மும்முரமா இருக்காங்களே?"
"பல மாநில சினிமாக்களில் இருக்கும் மோசமான விஷயம் இதுதான். இங்கே ஆரம்ப காலத்தில் இருந்தே ரஜினி சாரும், கமல் சாரும் நட்பு உணர்வோடு இருந்தாங்க. அந்த நட்பைத் தங்களுடைய ரசிகர்களுக்கும் சொல்லிக்கொடுத்தாங்க. அதனால், இங்கே ஈகோ சண்டை எதுவும் வரலை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சில நடிகர்களின் ரசிகர்கள் சண்டை போட்டாங்க. இப்போ அதுவும் இல்லை. இது உண்மையிலேயே ஆரோக்கியமான விஷயம். தமிழைத் தவிர, மற்ற மொழி ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் ஈகோ உண்டு. இந்த விஷயத்தில் தமிழ் சினிமாவைப் பார்த்து மற்ற ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக