வியாழன், 8 ஜூலை, 2010

ரூ.17.5 லட்சம் , இலங்கைத் தமிழரை கடத்தி கப்பம் பெற்ற கும்பல் கைது

பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரை கடத்தி கப்பம் பெற்ற கும்பல் கைது
பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் ஒருவர் விடுமுறையில் சென்னை வந்தபோது அவரைக் கடத்திச் சென்று அவரது மனைவியிடம் ரூ.17.5 லட்சம் பணத்தைப் பறித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சண்முகவேல் (வயது 36) என்பவரின் மனைவி ராதிகா சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.
லண்டனிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக சென்னை வந்திருந்த அவர், கடந்த யூன் மாதம் 22 ம் தேதி காரில் திருவல்லிக்கேணிக்கு சென்று கொண்டிருந்த போது, ஆட்டோவில் வந்த சிலர் வழி மறித்து கடத்திச் சென்று ஒரு வீட்டில் 2 நாட்கள் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பின் அவரது மனைவியிடம் தொலைபேசியில் மிரட்டி 25 லட்சம் ரூபா பணம் தந்தால் உனது கணவனை விடுதலை செய்வோம் என மிரட்டினர். பொலிஸாரிடம் சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டியதால் அவரது மனைவி ரூ.17.5 லட்சத்தை அந்த கடத்தல் கும்பலுக்குக் கப்பமாக கொடுத்து கணவரை மீட்டார்.
இந் நிலையில் கடந்த 5ம் தேதி பல்லாவரம் பொலிஸில் இக்கடத்தல் சம்பவம் குறித்து சண்முகவேல் புகார் கொடுத்தார்.
அதில் குறித்த கடத்தல் கும்பல் தன்னை கடுமையாக தாக்கி கையை உடைத்துவிட்டது. அந்தக் கும்பலைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து புறநகர் பொலிஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில், இக்கடத்தல் கும்பலைப் பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தப் படையினர் நடத்திய விசாரணையில், சண்முகவேல் லண்டனில் இன்னொரு இலங்கைத் தமிழரான பாலா என்பவருடன் சேர்ந்து தொழில் செய்து வந்ததும், அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும்,
இதையடுத்து பாலா சென்னையில் உள்ள தன் நண்பர் சிவா என்பவருடன் சேர்ந்து சண்முகவேலை கடத்தி ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதும், பின்னர் பல்லாவரத்தில் வைத்து சண்முகவேல் மனைவியிடம் இருந்து ரூ.17.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு அவரை விடுவித்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து பொலிஸார் பல்லாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு காரில் வந்த 4 பேர் பொலிஸாரை பார்த்தவுடன் காரை விட்டு இறங்கி தப்பியோட முயற்சித்த வேளையில் பொலிஸார் விரட்டிச்சென்று அவர்கள் 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

அத்துடன் அவர்கள் பயணித்த காரில் இருந்த கத்திகள், உருட்டுக் கட்டைகள் மற்றும் ரூ.9 லட்சம் பணம் என்பவற்றை  பொலிஸார் கைப்பற்றினர். அதையடுத்து பிடிபட்டவர்களை விசாரணை செய்தபோது  குறித்த சண்முகவேலை கடத்தியவர்கள் இவர்கள் தான் என்ற உண்மை  தெரியவந்தது.

ஜனார்த்தனம் (30), சீனிவாசன் (28), சுரேஷ் (29), பாஸ்கர் (31) என்ற நால்வருமே கைது செய்யப்பட்வர்களாவர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு  தலைமறைவாக உள்ள பாலா, சிவா ஆகியோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: