சனி, 10 ஜூலை, 2010

கலைஞரும் புலிகளுக்கு ஆதரவாக மாகாண சபையைக் கலைக்க வலியுறுத்தினார்

யாழ் உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் வழங்கிய பேட்டி: 
வி.பி.சிங் இந்திய இராணுவத்தை மீள எடுப்பதிலேயே அக்;கறை காட்டினார். மாகாணசபையைக் கலைக்குமாறு தூது விட்டார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களும் புலிகளுக்கு ஆதரவாக இருந்து மாகாண சபையைக் கலைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். புலிகள் தமிழர்களைக் காப்பாற்றுவார்கள் தமிழர்களின் உரிமைகளை வெல்வார்கள் என்றார். மொத்தத்தில் அன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான வட்டத்திற்குள் ஒரு தீர்வு எந்தக் கோணத்திலிருந்தும் கிடைக்கவில்லை. நியாயமான நடைமுறைச் சாத்தியமான தீர்வுக்காக உழைத்த எங்களுக்குத் துணையாக ஒரு அரசியற் சக்தியும் அன்று இருக்கவில்லை.
அதைவிட எம்மை எதிர்த்தவர்களும் எம்மை அழிக்க முனைந்தவர்களுமே மிக அதிகமாக இருந்தனர்.
நாம், ஈழப்போராட்டத்துக்குப் பதிலாக இந்தியா ஒரு நீதியான தீர்வை ஏற்படுத்தித் தரும் என்பதற்காகவே மாகாண சபை முறைக்கு ஒத்துக்கொண்டோம். ஆனால் நியாயமான தீர்வெதையும் இந்தியாவும் தரவில்லை, இலங்கையும் தரவில்லை.
இலங்கை அரசாங்கமோ புலிகளின் உதவியுடன் எல்லாவற்றையும் மோசமாக சீரழிப்பதிலேயே கடுமையாக இருந்தது. எனவேதான் வேறு வழியின்றி நாங்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போகிறோம் என்பதைச் சொல்ல வேண்டியாயிற்று.
அந்த ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாம் அன்று முன்வைத்த பத்தொன்பது அம்சங்களில் பெரும்பாலானவை இன்றைக்கும் பொருத்தமானவை நீங்கள் இப்போதாயினும் படித்துப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

எப்போது விடுதலைப் புலிகள், ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தார்களோ அன்றைக்கே எமது ஈழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே ஈழ விடுதலைப் போராட்டத்தை உண்மையில் தோற்கடித்தவர்கள் புலிகள்தான்.
அவர்கள் யுத்த மோதல்களைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேற்கொண்டாலும் அவர்கள் 1986ம் ஆண்டே இலங்கை அரசை ஈழ விடுதலைக்கான யுத்தத்தில் வெற்றிபெற வைத்துவிட்டார்கள்.. புலிகள் சக இயக்கங்கள் மீது தாக்கத்தொடங்கிய போதே தமிழர்களின் தனிஈழக் கோரிக்கையின் தோல்வி நிச்சயமாகிவிட்டது.
அதற்குப் பிந்திய 24 ஆண்டுகால யுத்தமும் அழிவுகளுக்கும் இழப்புக்களுக்குமென நடத்தப்பட்ட யுத்தவெறியர்களின் சண்டைகளே தவிர வேறொன்றுமில்லை.

கருத்துகள் இல்லை: