வெள்ளி, 9 ஜூலை, 2010

விஜயசாந்தி வீடியோவை ஆய்வு செய்யும் தேர்தல் ஆணையம்:

ஆந்திராவில் 5 மாவட்டங்களில் உள்ள 12 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 27 ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் கமிஷன் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 30 ந்தேதி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி. நடிகை விஜயசாந்தி முன்னிலையில் பல்வேறு கட்சி தொண்டர்கள் தெலுங்கானா கட்சியில் சேரும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயசாந்தி தனி தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை
கடுமையாக விமர்சித்து பேசினார்.

தெலுங்கானா மாநிலத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை வெட்டி கொல்வேன் என்று ஆவேசமாக பேசினார்.

இதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தேர்தல் கமிஷன் விஜயசாந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அனுப்பியது.

அதில், தேர்தல் விதி அமலில் இருக்கும் போது அதை மீறி வன்முறையை தூண்டும் வகையில் பேசி இருக்கிறீர்கள். உங்கள்
மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? இதற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் விஜயசாந்தி வீடு உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதி போலீசுக்கும் விஜயசாந்தி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை
எடுக்கும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன் படி பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் விஜயசாந்தி மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். அவரை உடனடியாக கைது செய்யவும் முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து விஜயசாந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை வந்த நவீன் சாவ்லாவிடம் இந்த விவகாரம் கேட்டபோது,
‘’ விஜயசாந்தி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி  8ம் தேதி முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆந்திர தலைமைத் தேர்தல் அதிகாரி ஐ.வி. சுப்பா ராவ், ஹைதராபாதில் இன்று  இது குறித்து,  ’’பொறுப்புள்ள அரசியல் கட்சித் தலைவர் என்ற நிலையில் உள்ள விஜயசாந்தி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருக்கக் கூடாது.
 இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவரது பேச்சு அடங்கிய வீடியோ பதிவை தேர்தல் ஆணையம் முழுமையாக ஆராய்ந்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: