வெள்ளி, 9 ஜூலை, 2010

என்ஜீனியரிங் கல்லூரிகளில் மாவோயிஸ்ட் மாணவர்களா? போலீஸ் விசாரணை

சென்னையில் உள்ள தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் மாவோயிஸ்ட் ஆதரவு வட மாநில மாணவர்கள் உள்ளனரா என்ற கோணத்தில் கியூ பிரிவு போலீஸார் புதிய விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சென்னை பொறியியல் கல்லூரிகளில் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது. இதை ஆரம்பத்திலேயே தடுக்க உயர்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சமீபத்தில் ஒரு கொலையில் வந்து நின்றுள்ளது இந்தப் பிரச்சினை.

சென்னையில் ஏராளமான தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களில் 3, 4வது ஆண்டு படிக்கும் சீனியர் மாணவர்கள் புரோக்கர்களாக மாறியுள்ளது சமீபத்தில் தெரிய வந்தது. அதாவது தங்களது மாநிலத்திலிருந்து பல மாணவர்களை தாங்கள் படித்து வரும் கல்லூரிகளில் சேர்த்து விடுவதற்காக கணிசமான தொகையை அவர்களது பெற்றோர்களிடமிருந்து கமிஷனாக பெறுகின்றனர்.

மேலும், பெருமளவில் மாணவர்களை சேர்த்து விடும் மாணவர்களுக்கு சில கல்லூரிகளும் கூட கமிஷன் தருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி வட மாநில மாணவர்களில் பலர் புரோக்கர்களாக செயல்படுவதால் அவர்களுக்கிடையே கமிஷன் அதிகம் பெறுவது யார் என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியில்தான் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்குச் சொந்தமான மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் 3வது ஆண்டு பிடெக் படித்து வந்த நிர்பேஷ் குமார் சிங் என்ற மாணவர் வட மாநில மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வட மாநில மாணவர்கள் தொடர்பாக போலீஸாருக்கு புதிய சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒரிசா, அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த மாநிலங்கள் அனைத்தும் மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்தவையாகும்.

எனவே சென்னை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே மாவோயிஸ்ட் ஆதரவு மாணவர்கள் பெருமளவில் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கமிஷனாக பெறும் தொகையை நக்சல் அமைப்புக்கு இவர்கள் தருகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மாணவர்களின் விவரம், அவர்களது பின்னணி உள்ளிட்டவை குறித்து தீவிரமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் அவர்கள் ஹாஸ்டலில் தங்கியுள்ளனரா, தனி வீடு எடுத்துத் தங்கியுள்ளனரா, அவர்களது தொடர்புகள், அவர்களது நடமாட்டம் உள்ளிட்டவை குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன. அவர்களை தேடி யாரெல்லாம் வருகிறார்கள் என்பது குறித்த தகவல்களும் சேகரிக்கப்படுகிறது.

பதிவு செய்தவர்: முஸ்தாக்
பதிவு செய்தது: 08 Jul 2010 11:40 pm
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தமிழகத்தில் அமைதி சீர்குலைய ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்தில் படிக்க வரும் அண்டை மாநிலம் மாணவர்கள் பற்றிய விபரம் அனைத்தையும் சேகரிக்கவேண்டும்.

பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 08 Jul 2010 10:39 pm
இதுபோன்ற பிரச்சினைகள் களையப்படவேண்டும் என்றால், காவல்துறைக்கு சுதந்திரமும், தன்னாட்சியும் வழங்கப்பட்டு, தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தரப்படவேண்டும். சந்தேகம் உள்ள எவரையும் அழைத்து விசாரணைக்குட்படுத்தப்படும் அதிகாரமும் தேவை. அரசியல் குறுக்கீடு, ஊழல் என்று எதுவும் இருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில், முதலில் விசாரிக்கப்படவேண்டியவர் AC சண்முகம் அவர்களே. யாருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்று அறிதல் அவசியம். கடும் நடவடிக்கை, மற்றவர்களுக்கு பாடமாக அமையும்.

[ Post Comments ]

கருத்துகள் இல்லை: