tamil.asianetnews.com : இந்தியை திமுக ஏன் எதிர்க்கிறது என்பது குறித்து ஆதாரங்களுடன் விளக்கம் அளித்திருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.
இந்தி பேசாதா மாநிலங்களில் இந்தி கற்றுத் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு அளிக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாகக் கூறி தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக தரப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. இந்தியைப் புகுத்துவது என்பது தேன்கூட்டில் கல்லெறிவதற்கு சமம் என  மத்திய அரசை திமுக சாடியது.

தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரித்ததால் அந்தப் பரிந்துரையில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. இந்தி பேசாத மாநிலங்களில் அதே நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் இந்தியை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் தொடர்ந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டுவருகிறார்கள். குறிப்பாக திமுகவை சமூக ஊடகங்கள் உள்பட பொதுவெளியில் பாஜகவினர் விமர்சித்துவருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா திமுக இந்தியை ஏன் எதிர்க்கிறது என்பது குறித்து ட்விட்டரில் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.  அந்தப் பதிவில் திமுகவினர் நடத்தும் 45 பள்ளிகளின் பெயர்களையும் முகவரிகளையும் குறிப்பிட்டுள்ளார் எச்.ராஜா. இப்பள்ளிக் கூடங்கள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகள்.
இதனால் அந்த  ட்விட்டர் பதிவில், “திமுகவினர் இந்தி திணிப்பு என வெளியில் காட்டிகொண்டு அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டால், இவர்கள் பிழைப்பில் மண் விழுந்திரும். இப்போ புரியுதா இவர்கள் எதிர்ப்பு ஏன் என்று ?” என்று எச். ராஜா தெரிவித்துள்ளார். எச். ராஜாவின் இந்த ட்விட்டர் பதிவை ஷேர் செய்து பாஜகவினர் மீண்டும் திமுகவை வசைபாடி வருகிறார்கள்.