திங்கள், 3 ஜூன், 2019

எடப்பாடி அழைப்பை நிராகரித்த நான்கு எம்.எல்.ஏ.க்கள்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி அழைப்பை நிராகரித்த நான்கு எம்.எல்.ஏ.க்கள்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. மெசேஜ் டைப்பிங் என்ற வார்த்தை வந்து வந்து மறைந்துகொண்டிருக்க, கொஞ்ச நேரம் கழித்து வாட்ஸ் அப் மெசேஜ் ரிசீவ் ஆனது.
“அதிமுக சார்பில் இன்று ( ஜூன் 3) சென்னையில் நடக்கும் இப்தார் விருந்துக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களை எல்லாம் பத்திரிகை வைத்து அழைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பாமக நிறுவனர் ராமதாஸோடு போனில் பேசி, அவரது இல்லத்துக்கு அமைச்சர் சி.வி. சண்முகத்தை அனுப்பி வைத்து இப்தார் விருந்தில் கலந்துகொள்ளுமாறு அழைத்தார் எடப்பாடி. இன்று மாலை 5.30 மணியில் இருந்தே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், டாக்டர் ராமதாஸ், பிரேமலதா, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் வந்துவிட துணை முதல்வர் ஓ.பன்னீரும் வந்துவிட்டார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வருகையை எதிர்பார்த்து எல்லாரும் காத்திருக்க, ‘முதல்வருக்கு தவிர்க்க முடியாத அலுவல் காரணமாக அவரால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை ‘ என்று ஆறு மணிக்கு அறிவித்தார் நிலோபர் கபில்.
எல்லா தலைவர்களையும் அழைத்த எடப்பாடி ஏன் இப்தார் விருந்துக்கு வரவில்லை என்று விசாரித்தால் காலையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தையே காரணமாகச் சொல்கிறார்கள் அதிமுகவினர்

.
அதிமுகவிலும், திமுகவிலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய செய்திகள் மின்னம்பலத்தில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஆட்சியைக் கவிழ்க்க திமுக செய்து வரும் முயற்சிகள், அதை எதிர்கொள்ள அதிமுக மேற்கொண்டு வரும் உத்திகள் என சட்டமன்றம் கூடுவது வரை பரபரப்பான நகர்வுகளுக்குப் பஞ்சமில்லை. அதில் ஒன்றுதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நடத்திய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.
ஆட்சியைக் கவிழ்க்க திமுக மேற்கொண்டு வரும் முயற்சிகள், கட்சிக்குள் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் தனக்குமான நெருடல்கள் ஆகியவற்றுக்கு இடையே தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் யார் யார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே எடப்பாடி இந்த எம்.எல்.ஏ.க்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய மூவருக்கும் , சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பட்ட மூவருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை..
காலை முதல் ஒவ்வொரு மாவட்டமாக எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி சந்திக்க ஆரம்பித்த தகவல் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்துக்கே பிறகுதான் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதன் பிறகே அவசரமாக அவர் எடப்பாடியின் இல்லத்துக்கு சென்றிருக்கிறார். என்ன நினைத்தாரோ கொஞ்ச நேரத்தில், ‘எனக்கு தலைமைச் செயலகத்தில் கொஞ்சம் வேலை இருக்கு’ என்று சொல்லிவிட்டு எடப்பாடியின் வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டார் பன்னீர்.
சந்தித்த ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் திமுகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி பற்றியெல்லாம் நேரடியாக எதுவும் பேசவில்லையாம் எடப்பாடி. ‘உங்க தொகுதியில என்ன பிரச்சினை இருக்கு, உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கு? தேர்தல்ல நாம ஏன் தோத்துப் போனோம்?’ என்பது போன்ற கேள்விகளைக் கேட்டிருகிறார். மேலும் தான் கட்சியில் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் பற்றியும் இந்த ஆட்சி தொடர வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் எம்.எல்.ஏ.க்களிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி.
அதுமட்டுமல்ல... ‘சீக்கிரமே உள்ளாட்சித் தேர்தல் வரப் போகுது. இன்னிக்கு கெசட் ல வார்டு வரையறையெல்லாம் போட்டாச்சு பாத்தீங்கள்ல. உங்க தொகுதியில உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்னன்னு பாத்து உடனே கவனிங்க. இல்லேன்னா, உள்ளாட்சித் தேர்தலுக்காக போகும்போது மக்கள்கிட்ட பதில் சொல்ல முடியாது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் இப்ப கவுன்சிலராக செயல்பட வேண்டிய நேரம் இது. மத்தபடி கட்சி அமைப்புகள்ல புதுசா மாவட்டம் உருவாக்கலாமா, இப்ப இருக்குற மாதிரியே நீடிக்கலாமா... உங்க மாவட்டம் பத்தின நிலைமைய என்கிட்ட சொல்லுங்க’ என்றெல்லாம் கேட்டிருக்கிறார் எடப்பாடி.
ஒரு லாங் சைஸ் நோட்டில் வருகை தந்த எம்.எல்.ஏ.க்களின் பெயரை எழுதி கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் வந்திருக்கிறார்கள் என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளத்தான் இப்படிக் கையெழுத்து வாங்கியிருக்கிறார் எடப்பாடி. அதன்படி இன்று அழைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் நான்கு பேர் வரவில்லை என்று கூட்ட முடிவில் தெரிந்திருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் முக்கியம் என்ற நிலையில் இன்று முதல்வர் அழைத்தும் வராமல் தவிர்த்துவிட்ட அந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் யார் என்பதுதான் அதிமுகவில் இப்போது பரப்பரப்பான பேச்சாக இருக்கிறது. நோட்டில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் ஆப்சென்ட் என்ற தகவலை அறிந்ததுமே எடப்பாடி அப்செட் ஆகிவிட்டார். அவர்களுக்கு அழைப்பு அனுப்பியவர்களிடம், ஏன் அந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை’ என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி. அதற்கும் சரியான பதில் இல்லை.
விரைவில் சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் தான் அழைத்து நான்கு எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை என்பது முதல்வருக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்தது. அதனாலேயே இப்தார் விருந்தில் கூட கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்’ என்பதே வாட்ஸ் அப் அனுப்பிய அந்த மெசேஜ். இதை ஷேர் செய்து கொண்டது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: