வியாழன், 6 ஜூன், 2019

பிற மாநிலங்களில் தமிழ் விருப்ப பாடம்- டுவிட்டர் பதிவை நீக்கினார் முதல்வர்


பிற மாநிலங்களில் தமிழ் விருப்ப பாடம்- டுவிட்டர் பதிவை நீக்கினார் முதல்வர்வெப்துனியா :மற்ற
மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேர்க்கும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுத்த, டுவிட்டர் பதிவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.
சென்னை: மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கை வரைவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாகவும், இதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூறினார்கள். அதேசமயம், தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடர்ந்து நீடிக்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி அளித்தார். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, புதிய கல்வி கொள்கை அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது. திருத்தப்பட்ட புதிய வரைவு அறிக்கையின்படி, தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது, இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாவது மொழி பாடத்தை மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம்.


இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மற்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேர்க்க நடவடிக்கை தேவை என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனால் உலகின் மிக தொன்மையான மொழிக்கு பெருமை சேர்ப்பதாக அமையும் என அவர் குறிப்பிட்டு இருந்தார். 

இது முதல்வர் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளிக்கிறார் என்ற விமர்சனத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில் மும்மொழி குறித்த டுவிட்டர் பதிவை முதல்வர் பழனிச்சாமி நீக்கிவிட்டார். 

இதுபற்றி பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதற்கு டுவிட் செய்தார்? எதற்காக நீக்கினார்? என்று தெரியவில்லை. முதலமைச்சரின் டுவீட் மட்டுமல்ல, முந்தைய காலத்திலேயே பிரதமர், இதுபற்றி சொல்லியிருக்கிறார். வடமொழியைச் சார்ந்தவர்கள் தென்மொழியை கற்க வேண்டும், தென் மொழியைச் சார்ந்தவர்கள் வடமொழியைக் கற்கவேண்டும் என கூறியிருக்கிறார். மொழிப் பரிமாற்றம் இருக்க வேண்டும். அது தமிழாக இருக்கும்பட்சத்தில் நமக்கு மகிழ்ச்சிதான்” என்றார்

கருத்துகள் இல்லை: