சனி, 8 ஜூன், 2019

திருச்சி: இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிப்பு!

திருச்சி: இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிப்பு! மின்னம்பலம்:  திருச்சி மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மும்மொழி கொள்கையைக் கொண்டுவர நினைப்பதை அடுத்து இந்தி திணிப்புக்கு எதிராகப் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மும்மொழிக் கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதாகப் பேசப்பட்டது. ஆனால் இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் திருச்சியில் மத்திய அரசு நிறுவனங்கள், விமான நிலையத்தில் உள்ள பலகைகளில் இந்தி பெயர்கள் கருப்பு மையால் அழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசு நிறுவனமான பி.எச்.இ.எல், துப்பாக்கி தொழிற்சாலை, விமான நிலையம், ரயில் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும்.


இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் முன்புறம் உள்ள பெயர்ப் பலகை, கண்டோன்மென்ட் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள பெயர் பலகை, தலைமை தபால் நிலையத்தில் உள்ள பெயர் பலகை ஆகியவற்றில் இருந்த இந்தி எழுத்துக்கள் மட்டும் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை யார் அழித்தார்கள் என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை கிண்டியில், மும்மொழி கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: