வியாழன், 6 ஜூன், 2019

மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சி: .. மு.க.ஸ்டாலின் பேட்டி

தினகரன் :சென்னை: இந்திய அரசியல் நிர்ணய சபையில் மத்திய ஆட்சி மொழியில் ஒன்றாக தமிழை ஆக்கிட வேண்டும் என்று குரல் கொடுத்தவர் காயிதே  மில்லத் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காயிதே  மில்லத் 124வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர்போர்வை அணிவித்தார்.பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:  காயிதே மில்லத் 124வது பிறந்த நாள் இன்று. குறிப்பாக இந்தாண்டு அவருடைய பிறந்த நாள் வரக்கூடிய இந்த நாளில் ரம்ஜானும் கொண்டாடக்கூடிய  ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.


எனவே, அந்த உணர்வோடு திமுக சார்பில் இன்றைக்கு அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய வாய்ப்பை  பெற்றிருக்கக்கூடிய இந்த நேரத்தில் நான் தெரிவிப்பது இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தை உருவாக்கிய நேரத்தில் இந்திய அரசியல் நிர்ணய  சபையில் காயிதே மில்லத் மத்திய ஆட்சி மொழியாக, ஆட்சி மொழியில் ஒன்றாக தமிழை ஆக்கிட வேண்டும் என்று அன்றைக்கே குரல்  கொடுத்திருக்கின்றார்.

இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் மும்மொழி திட்டம் என்கின்ற அந்த பெயரில் இந்தியைத் திணிக்கின்ற முயற்சியில் இப்போது இருக்கக்கூடிய  மத்திய ஆட்சி ஈடுபட்டிருக்கின்றது. தமிழர்களின், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பார்த்ததற்குப் பிறகு இந்தித் திணிப்பு என்ற அந்த  வார்த்தையைத் திரும்பப்பெறுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.

தமிழ் மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் கட்டாய மொழியாக்க  உறுதி எடுக்கக்கூடிய நாளாக இந்த நாளை எண்ணிட வேண்டும். அதற்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்ற உறுதியை நான் இங்கு  நினைவுபடுத்துகின்றேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன், மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன்,  சேப்பாக்கம் பகுதி செயலாளர் மதன்மோகன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகைதீன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்

கருத்துகள் இல்லை: