வியாழன், 6 ஜூன், 2019

இந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய மொஹமத் சானாவுல்லாவின் குடியுரிமை பறிக்கப்பட்டது எப்படி?


BBC :மே 27ம் தேதி மாலை, 52 வயதான மொஹமத் சானாவுல்லா அப்போதுதான் வீடு திரும்பி இருந்தார். 30 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த அவர், 2017ல் ஓய்வு பெற்றார். கைதாகும்போது அஸ்ஸாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களை தடுப்பது என்பது எல்லை பாதுகாப்புப்படையினரின் வேலைகளில் ஒன்று.
வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக மக்கள் நுழைவது பல தசாப்தங்களாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது.
அன்று மாலை, சானாவுல்லா வீட்டில் அமர்வதற்கு முன்பே அவருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஓர் அழைப்பு வந்தது.
அவரை 'வெளிநாட்டவர்' என்று தீர்ப்பாயம் அறிவித்துள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

"அவருக்கு என்ன நடக்கப்போகிறது என்பது அப்போதே தெரிந்துவிட்டது" என்று கூறுகிறார் சானாவுல்லாவின் வழக்கறிஞரும், அவரது மருமகனுமான ஷஹிதுல் இஸ்லாம். இவர் சானாவுல்லா கவஹாத்தியில் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்தார்.

சானாவுல்லா அன்று இரவு போலீஸ் காவலில் இருந்தார். அடுத்த நாள் தடுப்பு காவல் மையத்திற்கு அனுப்பப்பட்டார். அஸ்ஸாமில் உள்ள ஆறு தடுப்பு காவல் மையங்களில், சுமார் 900 'வெளிநாட்டவர்கள்' இருக்கிறார்கள். அதில் பெரும்பாலனோர் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் ஆவர்.
கடந்தாண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வரைவுப் பட்டியலில், குறைந்தது 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுப்போக, அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் இது என்று பலரும் கவலை தெரிவித்தனர். ஆனால், இதனை மறுத்த நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கம், இது சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறியது.
வங்காள மொழி பேசும் இந்துக்களும் 'வெளிநாட்டவர்கள்' பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
மார்ச் 1971ல் அஸ்ஸாமிற்கு வந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், தங்கள் ஆவணங்களை வழங்க மக்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1971ல்தான் வங்கதேசம் சுதந்திரமடைந்தது.
பட்டியலில் இல்லாத லட்சக்கணக்கான மக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இவர்களை ஏற்றுக் கொள்ள வங்கதேசமும் முன்வரவில்லை.
எனினும் மூன்று ஆண்டுகள் தடுப்பு காவல் மையங்களில் இருந்தவர்களை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு உச்சநீதிமன்றம் கூறியது.
வழக்கை நடத்த சானாவுல்லாவின் வழக்கறிஞர்கள் தயார் செய்துவரும் நிலையில், சானாவுல்லாவை விசாரித்த காவல்துறை அதிகாரியான சந்திரமால் தாஸ் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2008 - 2009ஆம் ஆண்டு இந்த விசாரணை தொடர்பான ஆவணங்களில், சானாவுல்லாவின் கிராமத்தை சேர்ந்த மூன்று பேரின் சாட்சியங்கள் இடம் பெற்றிருக்கிறது.

அந்த ஆவணங்களில் சானாவுல்லா தான் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள கசிம்பூர் என்ற கிராமத்தில் இருந்து தாம் வந்ததாக கூறினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மொஹமத் சானாவுல்லாவுக்கு எதிராக, குரான் அலி, அஜ்மத் அலி, சொபஹன் அலி ஆகிய மூன்று பேர் அளித்த சாட்சியங்கள் அந்த விசாரணை ஆவணங்களில் இருக்க, தற்போது தாம் அந்த மாதிரியான எந்த கருத்துகளையும் அளிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். e>"சானாவுல்லா எங்கள் குடும்ப உறுப்பினர் போல. நான் ஏன் அவருக்கு எதிராக சாட்சி அளிப்பேன்? நான் சந்திரமால் தாஸ் என்ற ஒருவரை பார்த்ததில்லை. அந்தப் பெயரையே கேட்டதில்லை" என்கிறார் சானாவுல்லாவின் வீட்டின் அருகே வசித்துவரும் விவசாயியான சொபஹன் அலி.
இது தொடர்பாக தொலைப்பேசியில் பேசிய 68 வயதான குரான் அலி, "நான் 2008 - 09ஆம் ஆண்டு கவஹாத்தியில் நீர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிந்து வந்தேன். நான் இவ்வாறு கூறவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
சானாவுல்லா தான் டாக்காவில் இருந்து வந்தார் என்று கூறவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
"இந்த மூன்று நபர்களும் தங்களின் பெயர்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், தங்களைப் போன்ற பொய் கையெழுத்து போட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரியான சந்திரமால் தாஸ் மீது இவர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக" மூத்த காவல்துறை அதிகார் சஞ்சிப் குமார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்ற சந்திரமால் தாஸ் என்.டி.டிவியில் பேசுகையில், ஆவணங்களில் ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். அந்த சாட்சியங்கள் அனைத்தும் சானாவுல்லா என்ற நபர் தொடர்பான விசாரணையில் எடுக்கப்பட்டதாகவும், இது ராணுவ அதிகாரி மோஹ்த் சானாஉல்லா என்றும் குறிப்பிட்டார்.
2008 - 09ல் இந்திய ராணுவத்தில் இருந்த ஒருவர் மீது எப்படி அஸ்ஸாம் எல்லை பாதுகாப்புப் படையினர் விசாரணையை தொடங்கினர் என்பது தெளிவாக தெரியவில்லை. "2018ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் அவரது பெயர் இல்லை என்றவுடன்தான் இந்த 10 ஆண்டு கால விசாரணை குறித்து அவருக்கு தெரிய வந்தது. அதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்துவிட்டார்" என்கிறார் சானாவுல்லாவின் மகள் ஷேஹ்னஸ் அக்தர்.
எல்லை பாதுகாப்புப் படையினருக்கு நிறைய அதிகாரம் உண்டு.
ஒரு நபரின் குடியுரிமை தொடர்பாக எல்லை பாதுகாப்புப் படையினர் தானாக முன்வந்து விசாரிக்க முடியும் என்கிறார் எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரி ஒருவர்.
அஸ்ஸாமில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் எல்லை பாதுகாப்புப் படைப்பிரிவு இருக்கும்.
காவல் தடுப்பு மையங்களில் நூற்றுக்கணக்கான சானாவுல்லாக்கள் வாடி வருவதாக கூறுகிறார் கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள ஹஃபீஸ் ரஷித் அஹமத் சௌத்ரி.

கருத்துகள் இல்லை: