சனி, 8 ஜூன், 2019

பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!

டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!மின்னம்பலம் :மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. அதிமுகவின் மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா இன்று பிரஸ் மீட்டில் சொன்ன விஷயங்களை மின்னம்பலத்தின் 1 மணி பதிப்பில் எழுதியிருந்தோம். அவர் சொன்னதை ஒருமுறை வாசித்துவிட்டு பின்னணிக்குள் போவோம்.
“மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று வெற்றியை சமர்ப்பித்துள்ளார். இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற 9 எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவில்லை. இது யார் குற்றம்? 9 பேரின் குற்றமா அல்லது தலைமைக் கழகத்தின் குற்றமா? இல்லை ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு வரவில்லையா? அவர்களை தடுப்பது யார்? 9 தொகுதி வெற்றி என்பது மிகப்பெரியது. அரசைக் காப்பாற்றுகிற வெற்றி. அந்த வெற்றியைக் கொண்டாட ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குச் சென்று 9 பேரும் அஞ்சலி செலுத்தவில்லை. அதற்கு காரணம் யார்? இதுபோன்ற சின்னச் சின்ன நெருடல்கள் அதிமுகவை வீழ்த்திவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது.

திமுக என்ன முயற்சி செய்தாலும், எங்களுக்குள் எந்த பிரச்சினை இருப்பினும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் திமுகவுக்குச் செல்லமாட்டோம். ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும், பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை பொதுக்குழுவில் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை உட்கட்சிப் பூசல் என்று கருதக்கூடாது. பொதுக்குழுவில் முன்வைக்க வேண்டிய பிரச்சினை இது. பொதுக்குழு கூட்டப்படாததால் ஊடகங்கள் வாயிலாக இதனை முன்வைத்துள்ளேன். தோல்விக்கான காரணத்தை ஆராய்வதற்காக எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டச் சொல்லி முதல்வரிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துவிட்டோம். திறமையான, சுயநலமற்ற மக்கள் பணியாற்றக் கூடிய ஒருவரை அதிமுகவிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். கட்சியைக் கட்டுக்கோப்புடன் நடத்துகிறவர் முதல்வராக இருந்தாலும், முதல்வராக இல்லாமல் இருந்தாலும் தவறு கிடையாது. அது யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. இரு தலைமையின் கீழ் செயல்படுவதால் நாங்கள் உடனுக்குடன் உரிய முடிவு எடுக்கமுடிவதில்லை. மக்கள் சக்தி படைத்தவர், ஜெயலலிதாவால் கொஞ்ச நாள் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வர வேண்டும். எடப்பாடி, பன்னீர் இருவருமே ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்தான். அதில் யார் சிறந்தவர்கள் என்று பார்க்கலாம். அல்லது புதியவர் யாராக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்” என்பதுதான் ராஜன் செல்லப்பா பேசியது.
இப்போது விஷயத்துக்கு வருகிறேன். எடப்பாடியை சந்தித்த சில மூத்த நிர்வாகிகள், ‘ கட்சிக்கு வர வேண்டிய மத்திய அமைச்சர் பதவி பன்னீரால்தான் கெட்டுப் போச்சு. பன்னீர் டெல்லிக்குப் போய் அவருடைய மகனுக்கு கேட்டதால்தான் தமிழகத்துக்கு அமைச்சரவையில் இடமே கிடைக்கவில்லை. சீனியர் வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். பன்னீரும் இடையில் புகுந்து தன் மகனுக்காக கேட்டதால் பி.ஜே.பி. யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. இதை நீங்க அப்போதே கேட்டு இருக்கணும்.’ என்று சொல்லியிருக்கிறார்கள். எடப்பாடி எந்த பதிலும் அப்போது சொல்லவில்லை.
இன்னொரு பக்கம் வைத்தியலிங்கத்தை சந்தித்த சிலர், ‘உங்களுக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவி பன்னீரால்தான் கிடைக்காமல் போனது. பன்னீர்கிட்ட நாம பேசிப் பார்க்கலாம். கட்சியில் நீங்கதானே சீனியர். அவரை விட்டுக் கொடுக்கச் சொல்லி கேட்கலாம். நம்மாலதானே அவரு துணை முதல்வராகவே இருக்காரு. அவருகிட்ட பேசலாம்.’ என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் வைத்தியலிங்கமோ, ‘எல்லோரும் அமைதியாக இருங்க. நமக்கு கட்சிதான் முக்கியம். அதெல்லாம் யாரும் எதுவும் பேச வேண்டாம்..’ என்று தடுத்துவிட்டாராம்.
இப்படியாக கட்சிக்குள் தொடர்ந்து புகைச்சல் இருந்து கொண்டே இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வைத்திலிங்கத்தை சந்தித்துவிட்டுதான் போயிருக்கிறார் ராஜன் செல்லப்பா. அதன் பிறகு இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ராஜன் செல்லப்பா இப்படியான ஒரு விஷயத்தை முன்னெடுத்து இருக்கிறார். இதில் ராஜன் செல்லப்பா பேசியது எடப்பாடிக்கு எதிராக இருப்பது போல தெரிந்தாலும் எடப்பாடி சொல்லித்தான் ராஜன் செல்லப்பா இப்படி பேசினார் என்றே சொல்கிறார்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது முதலில் தேனி தொகுதியை விரும்பிய பன்னீரின் மகன் ரவீந்திரநாத் பிறகு திடீரென மதுரை பகுதியை குறிவைத்து காய் நகர்த்தினார்.
ஆனால் இதை ராஜன் செல்லப்பா கொஞ்சமும் விரும்பவில்லை. மதுரை தொகுதிக்கு பன்னீரின் மகன் வேட்பாளராக நின்றால் பன்னீரின் ஆதிக்கம் மேலும் விரிவடைந்துவிடும் என்று கருதினார் ராஜன் செல்லப்பா. இதனால் அதிமுக தலைமை கழகத்தில் நடந்த வேட்பாளர் தேர்வு ஆலோசனையின் போது பன்னீரின் மகனுக்கு மதுரையை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர்கள் கடுமையாகப் போராடினார்கள். அதை தடுத்தும் நிறுத்தினார்கள். பன்னீரின் மகனை மதுரை வேட்பாளராக ஆகாமல் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்ல தன் மகனான ராஜ் சத்யனை மதுரை தொகுதி வேட்பாளராக ஆக்கினார் ராஜன் செல்லப்பா. இதற்கு எடப்பாடியின் முழு ஆசியும் இருந்தது என்று அப்போதே மின்னம்பலத்தில் தகவல் வெளியிடப்பட்டது.
ராஜ் சத்யன் மதுரை தொகுதியில் தோல்வியைத் தழுவியதால் இப்போது வர இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் அவரை எம்பியாக்க கடுமையாக முயற்சி செய்கிறார் ராஜன் செல்லப்பா. எடப்பாடியின் சமூக தளங்களுக்கு அட்மின் ஆக இருப்பவர் ராஜ் சத்யன்தான். இந்த பின்னணியில்தான் எடப்பாடிக்கு தீவிர ஆதரவு தெரிவிக்கும் முகமாக இந்த ஒற்றை தலைமை பிரச்சனையை முதன்முதலாக எழுப்பியிருக்கிறார் என்கிறார்கள்.
மேலும், ‘எடப்பாடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் பன்னீர் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்காரு. குறிப்பாக மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய இடம் பன்னீரால்தான் பறிபோனது. இதில் முதல்வர் ரொம்பவும் டென்ஷன் ஆகிட்டாரு. ஆனால் அதை வெளிக்காட்டிக்க முடியல. எடப்பாடி யாரையாவது திட்டினால் உடனே அந்த ஆட்கள் பன்னீர்கிட்ட போயிடுறாங்க. ரெண்டு தலைவர் இருப்பதுதான் இந்த சிக்கலுக்கு எல்லாம் காரணம் என எடப்பாடி நினைக்கிறாரு. ஆட்சி ஒருவரிடம் கட்சி ஒருவரிடம் இருப்பதுதான் இனி சரியாக இருக்கும் என எடப்பாடி நினைக்கிறாரு. அதாவது ஆட்சியில் கட்சி தலையிடக் கூடாது. கட்சியில் ஆட்சியில் இருப்பவர் தலையிட மாட்டார் என்பதுதான் அந்த முடிவு. அதை பன்னீரிடம் நேரடியாக சொல்ல முடியாது. அதைத்தான் ராஜன் செல்லப்பா மூலமாக சொல்ல வைத்திருக்கிறார். தேர்தல் நடத்தி பொதுச் செயலாளராகவும் எடப்பாடியே தேர்வு செய்யப்பட்டால் ஆட்சி, கட்சி இரண்டுமே அவரிடம் வந்துவிடும். இல்லை வேறு யாரிடம் கட்சி இருந்தாலும் அதற்கும் அவர் சம்மதம் சொல்லிவிட்டார். ஆனால், கட்சியில் முறைப்படி தேர்தல் நடத்திதான் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதுக்காகத்தான் ராஜன் செல்லப்பா மூலமாக பூனைக்கு மணி கட்ட வைத்திருக்கிறார் எடப்பாடி. இன்று ராஜன் செல்லப்பா, நாளை இன்னொருவர் என இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்துவார்கள்.’ என்று சொன்னார்கள் விவரமறிந்தவர்கள்.” என்று முடிந்தது மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: