திங்கள், 3 ஜூன், 2019

மத்தியக் கல்விக் கொள்கையில் திருத்தம்!

மின்னம்பலம் : மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையின்
வரைவு அறிக்கைக்கு தமிழக அரசு, உள்ளிட்ட தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பை அடுத்து இந்தித் திணிப்பு என்பதில் இருந்து இறங்கி வந்து வரைவு அறிக்கையில் திருத்தம் செய்திருக்கிறது மத்திய அரசு.
மத்தியில் புதிய பாஜக அரசு வெளியிட்ட கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில்,, இந்தி பேசாத மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழி, ஆங்கிலம், மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் பயில வேண்டும் என்ற அம்சம் சேர்க்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில், ஏதாவது ஒரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாக அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில், 6ஆம் வகுப்பில் இருந்து இந்தியை மூன்றாவது பாட மொழியாக்க வேண்டும் என்றும் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசும், தமிழக கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்த்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவில் இன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மும்மொழிக் கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம், மூன்றாவது மொழியைத் தேர்வு செய்வது தொடர்பான பிரிவில், இந்தி பேசாத மாநிலங்களில், அந்தந்த மாநில மொழி, ஆங்கிலத்துடன், இந்தியை கற்பிக்க வேண்டும் என்ற பரிந்துரையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என பிரித்துக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அத்தகைய வகைப்பாடே நீக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது மொழியை மாணவர்களே விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளலாம் என பரிந்துரையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்பதே மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்கான அடையாளம்தான் என்று கல்வியாளர்கள் இந்தத் திருத்தத்தின் பின்னணி பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: