சனி, 8 ஜூன், 2019

குருவாயூரில் மோடி துலாபாரம்.. எடைக்கு எடை தாமரை மலர்

தினமலர் :திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி, கேரள மாநிலம்,
குருவாயூர் கோவிலில், இன்று(ஜூன் 8) சுவாமி தரிசனம் செய்து, துலாபாரம் காணிக்கை செலுத்துகிறார்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த, 30ல், இரண்டாவது முறையாக, பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. பொறுப்பேற்ற பின், முதல் முறையாக, கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு, இன்று வருகிறார்.
டில்லியில் இருந்து, நேற்று இரவு, தனி விமானத்தில் கொச்சி கடற்படை விமான தளத்துக்கு வந்தார். எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையில், இரவு தங்குகிறார். இன்று காலை, ஹெலிகாப்டரில், குருவாயூர் செல்கிறார். இதற்காக, கோவிலுக்கு சற்று அருகில், ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, காரில், ஸ்ரீகிருஷ்ணன் கோவிலுக்கு, காலை, 10:00 மணிக்கு செல்கிறார்.

சுவாமி தரிசனம் செய்தபின், எடைக்கு எடை, தாமரை மலர்களை, துலாபாரம் காணிக்கையாக செலுத்துகிறார். பின், 11:10 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டு, ஸ்ரீகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி மைதானத்துக்கு வருகிறார் மோடி. அங்கு, நாட்டிகா, குருவாயூர், மணலுார், குன்னம்குளம் ஆகிய சட்டசபை தொகுதிகளின், பா.ஜ., நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். கடந்த, 2008ல், குஜராத் முதல்வராக, மோடி பதவி வகித்த போது, குருவாயூர் கோவிலில், எடைக்கு எடை, தாமரை மலர்களை துலாபாரம் காணிக்கையாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, துலாபாரம் கொடுப்பதற்காக, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து, 100 கிலோ தாமரை மலர்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளதாக, திருச்சூர் மாவட்ட, பா.ஜ., தலைவர், ஏ.நாகேஷ் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை: