செவ்வாய், 4 ஜூன், 2019

தமிழக பாஜக தலைவராக ஜி கே வாசன் .. அமித் ஷா முடிவு ..

tamil.asianetnews.com - selvanayagam-p : தமிழகத்தில் பாஜக படுதோல்வி
அடைந்ததையடுத்து அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையின் பதவி பறிக்கப்படும் என்றும், முன்னாள் காங்கிரஸ் தலைவரை தமிழக பாஜக தலைவராக நியமிக்க அமித்ஷா அதிரடியாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அக்கட்சி படுதோல்வி அடைந்தது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்ற பிரபலங்கள் தோல்வி அடைந்தனர்.
தமிழகத்தில் எப்படியாவது பாஜகவை வளர்க்கலாம் என நினைத்து செயல்பட்ட அமித்ஷாவுக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
இதையடுத்து தமிழக பாஜகவை வளர்த்தெடுக்க புதிய தலைவரை நியமிக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார். அதற்காக ஒரு சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைந்தது போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, பாஜகவில் இணைத்து அதன் தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் பாஜக கேவலமான தோல்வி அடைந்திருக்கும் நிலையில், கட்சியில் இல்லாத புது நபரை தலைவரைப் போட்டால்தான் வளர்ச்சி அடையும் என்று டெல்லி மேலிடம் ஆசைப்படுகிறது. ஏற்கெனவே இது குறித்து அமித்ஷா வாசனிடம் பேசியிருந்ததாகவும், அவர் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருந்ததாகவும் தெரிகிறது.

டெல்லியில் மூன்று முக்கியமான பாஜக பிரமுகர்களை ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசியிருக்கிறார். இனிமேல் தனிக் கட்சி என்று நின்று அவமானப்பட முடியாது என்பது அவரது நிலை. அதேபோல் பாஜகவுக்கு யாரேனும் ஒரு மாற்று தலைவர் தேவைப்படுகிறது

சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகிய மூவரும் இப்போது போட்டியில் இருக்கிறார்கள் என்றாலும், யாரைப் போட்டாலும் கோஷ்டி பிரச்சனை ஏற்படும் என்ற நிலையே உள்ளது.
அதனால் சரியான தருணத்தில் ஜி.கே.வாசனை தலைவராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: