வெள்ளி, 7 ஜூன், 2019

நீட் தேசிய அளவின் 5 இடம் .. தாய் தந்தை இருவரும் மருத்துவர்கள்தான்! .. விகடன் திரிக்கும் கயிறு

நீட் தேர்வில் தேசிய அளவில் 5ம் இடம் பிடித்த கார்வண்ணபிரபு விகடனே .... இவரின் தந்தை கண்ணன், தாய் கௌசல்யா இருவரும் மருத்துவர்கள்தாம் இந்த மாணவனுக்குகிடைத்த வாய்ப்புக்கள்  அனிதாக்களுக்கு கிடைக்குமா?
நீட் தேர்வு எளிதுதான்; தற்கொலை வேண்டாம்!" - தேசிய அளவில் 5-ம் இடம் பிடித்த மாணவர் உருக்கம்
vikatan.com - durai-vembaiyyan : நீட் தேர்வு என்பது கடினமான விஷயம் அல்ல. 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புப் பாடங்களை உன்னிப்பாகக் கவனித்துப்
படித்தால், கண்டிப்பாக எளிதாக வெற்றிபெறலாம். நீட் தேர்வில் தோல்வியுற்றாலும், அடுத்து எழுத வாய்ப்பு உள்ளது. அதனால், நீட் தேர்வில் தோல்வியுற்றதற்காக யாரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம்" என்று கரூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் 5-ம் இடமும் வந்த மாணவர் கார்வண்ணபிரபு தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் வெளியான நீட்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததற்காகப் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா என்ற மாணவி உடலில் தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சி விலகுவதற்குள், திருப்பூர் வெள்ளியங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தையே இந்த இரு சம்பவங்களும் உலுக்க, நீட் தேர்வில் தோல்வியடைந்ததற்காக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா என்பவரும்
தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சூழலில், நீட் தேர்வில் 700-க்கு 572 மதிப்பெண்கள் பெற்று, மாற்றுத்திறனாளிக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் 5-ம் இடமும் வந்துள்ளார். கரூர் கௌரிபுரம் மேற்குப் பகுதியைச் சேர்ந்த மாணவர் கார்வண்ணபிரபு. இவரின் தந்தை கண்ணன், தாய் கௌசல்யா இருவரும் மருத்துவர்கள்தாம். அதோடு, இவரின் சகோதரி கபிலாவும் சென்னை மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில், நாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த கார்வண்ணபிரபு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வில் 500-க்கு 476 மதிப்பெண் பெற்றார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனக்கு கால்களில் குறைபாடு உள்ளது. ஆனால், என்னை ஒருபோதும் பெற்றோரும் நண்பர்களும், பள்ளி ஆசிரியர்களும் மாற்றுத்திறனாளி மாணவனாக நடத்தியதில்லை. நானும் அப்படி உணர்ந்ததில்லை. தன்னம்பிக்கையுடனேயே வளர்ந்து வந்தேன். அதனால்தான், என்னால் 10-ம் வகுப்பில் 491 மதிப்பெண்ணும் 12-ம் வகுப்பில் 476 மதிப்பெண்ணும் பெற முடிந்தது. பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை உன்னிப்பாகப் படித்ததில், நீட் தேர்விலும் 572 மதிப்பெண்கள் பெற்று, மாற்றுத்திறனாளி பிரிவில் மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் 5-ம் இடமும் வரமுடிந்தது. மாற்றுத்திறனாளியான நானே தன்னம்பிக்கையாகப் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். நீட் தேர்வு எளிதானதுதான். அணுக வேண்டிய வகையில் அதை அணுகினால், எளிதாகத் தேர்ச்சிபெற்றுவிடலாம். அப்படியே குறைந்த மதிப்பெண் பெற நேர்ந்தாலும், இரு வாய்ப்புகள் தரப்படுகிறது. அதைப் பயன்படுத்தி எழுதி பாஸ் செய்துவிடலாம். அதனால், நீட் தேர்வில் தோல்வியடைந்ததற்காக, மாணவ, மாணவிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம்" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை: