


அந்த லேப்டாப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் விசாரணைக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னொரு முக்கியமான தகவலும் கிடைத்துள்ளது. இதுபற்றி இலங்கையிடமிருந்து இந்திய தரப்பினருக்குக் கிடைத்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன என்கிறார்கள் புலனாய்வு வட்டாரத்தில்.
இதுபற்றி நாம் விசாரணை நடத்தியதில், “சிக்கிய லேப்டாப்பில் இருக்கும் பதிவுகளில் முக்கிய எச்சரிக்கைகள் அடங்கியிருக்கின்றன. ஹாஷிம் பேசுவது போன்ற பதிவுகள் அந்த லேப்டாப்பில் உள்ளன. அதில் ஓரிடத்தில், ‘எனது தியாகம் இந்தியாவிலும் ஐஎஸ் இயக்கத்தை வளர்க்க உதவும்’ என்று ஹாஷிம் குறிப்பிட்டுள்ளதாக இந்திய தரப்புக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
பிரதமர் மோடி இரண்டாம் முறையாகப் பிரதமர் பதவியேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இலங்கைக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பிரதமர் மோடி இலங்கை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கியமான காலகட்டத்தில் பயங்கரவாதியின் லேப்டாப்பில் கிடைத்த தகவல்கள் இந்தியாவுக்கு எதிராக இருப்பதை இந்திய தரப்புக்கு இலங்கை அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர்” என்று தெரிகிறது.
என்ஐஏ அமைப்பினர் கேரளம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனைகளில் இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்குத் தென்னிந்தியாவில் சிலருடன் தொடர்பிருப்பதும் கண்டறியப்பட்டது. பாலக்காட்டில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் ஹாஷிம் உரை அடங்கிய வீடியோ இருப்பதையும் அப்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இப்போது இலங்கையில் கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் இந்தியாவைச் சம்பந்தப்படுத்தி ஹாஷிம் பேசியிருக்கிற தகவல் கிடைத்துள்ளதால் இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் நடக்க இருக்கும் நிலையில், இந்த விவகாரம் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கெனவே இலங்கையின் ராணுவ தளபதி மகேஷ் சேனநாயக, “இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பான சந்தேகத்துக்குரியவர்கள் கேரளம், பெங்களூரு, காஷ்மீர் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கே பயிற்சி பெற்றிருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், இலங்கைத் தாக்குதலின் தொடர்ச்சியாக இந்தியாவிலும் நாச வேலைகளில் ஈடுபடலாம் என்ற எச்சரிக்கை தகவலும் இந்தியத் தரப்புக்குக் கிடைத்துள்ளது. இதுவரை சிரியாவுக்குச் சென்று ஐஎஸ் பயிற்சி முடித்துத் திரும்பிய இந்திய இளைஞர்கள் தற்போது அங்குள்ள நெருக்கடி காரணமாக சிரியாவுக்குச் செல்லாமலேயே ஆங்காங்கே பயிற்சி பெற்று வருகிறார்கள் என்ற தகவலும் இந்த எச்சரிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக