வெள்ளி, 31 மே, 2019

புதிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திரா சிங் சாரங்கி.. ஒரு இந்துத்வா பயங்கரவாதி புனிதர் போல ஊடகங்களால் ..

Most people may have forgotten, but new Union minister Sarangi was Odisha coordinator of the Bajrang Dal when Graham Staines and his two kids were burned alive two decades ago
அமைச்சர் பிரதாப் சந்திரா சிங் சாரங்கி
Durai Manikandan : யார் இந்த பிரதாப் சந்திரா சிங் சாரங்கி?
இன்று எல்லா ஊடகங்களிலும் புனிதர் போல போற்றப்படும் இவர், அடிப்படையில், பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர். இந்த அமைப்பு ஒரிசாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டைன் மற்றும் அவரது இரு மகன்களை உயிருடன் எரித்துக் கொன்ற அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே.
இவர், ஒரிசாவில் கிறித்துவ மதமாற்றத்தை தடுக்க மட்டுமே RSS சால் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து வருபவர்.
மேலும், இவர் பல முறை, கலவரத்தை தூண்டியது, பொது சொத்து மற்றும் தனிநபர்கள் மீது தீ வைத்து எரித்தது, அடிதடி மற்றும் பொது சொத்தை சூறையாடியது என பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2002இல் இந்து வெறியர்களால், ஒரிசா சட்டசபையை தாக்கிய வழக்கு இவர் மேல் இன்னும் நிலுவையில் உள்ளது. இவர் தான் அடுத்த மோடிபோல் இன்று எல்லா ஊடகங்களிலும் முன் வைக்கப்படுகிறார். 
மிதி வண்டியில் செல்வதாலும் மூங்கில் குடிசையில் வாழ்வதாலும் ஒரு மனிதன் புனிதராகிவிடுவாரா? இவரை பற்றிய பொய் பரப்புரையை தடுக்க, அதனை ஒட்டிய உண்மை நிலையை பரப்ப, நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.


மாலைமலர் :மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி ஒருவர் மிகவும் எளிமையாக, தெருவோர பைப்பில் குளித்து குடிசையில் வாழ்ந்து வருவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி:

பிரதமர் மோடி உள்பட 58 பேர் நேற்று மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர். 42 வயது முதல் 71 வயது வரை இளமையும், அனுபவமும் கொண்ட கலவையான அமைச்சரவையாக மோடியின் புதிய அமைச்சரவை அமைந்து உள்ளது.

மத்திய மந்திரிகள் 58 பேரில் நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருப்பவர் பிரதாப் சந்திர சாரங்கி. 64 வயதாகும் இவர் ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில் உள்ள கோபிநாத்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஏழை பிராமணர் ஆன இவர் 1975-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தார். சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் கொண்ட இவர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து ஏழை-எளியவர்களுக்கு தேவையான சமுதாய பணிகளை செய்து வந்தார்.

திருமணம் செய்து கொள்ளாத இவர் ஏழைகளுக்காக பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் துறவி ஆக ஆசைப்பட்டார். இதற்காக மேற்கு வங்காளத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடம் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் வயதான விதவை தாயை கவனிக்குமாறு சொல்லி திரும்பி அனுப்பி விட்டனர்.

இதனால் அவர் ஒடிசா திரும்பினார். மண் சுவர் கொண்ட குடிசையில் வாழ்ந்து வரும் இவர் மிகவும் எளிமையான வாழ்க்கை முறைகளே மேற்கொண்டுள்ளார்.

தனது குடிசை வீட்டுக்கு முன்பு தெருவோர பைப்பில் தான் குளித்துக் கொள்கிறார். மலைவாழ் மக்களுக்காக பலாசூர், மயூர்கஞ்ச் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிக்கூடங்களை தொடங்கி உள்ளார்.

ஏழ்மை, சேவை மற்றும் மக்கள் நலனில் கொண்ட அக்கறை காரணமாக இவரை ஒடிசா மாநில மக்கள் “ஒடிசாவின் மோடி” என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவர் 2004 முதல் 2009 வரையும், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையும் நீலகிரி சட்டசபை தொகுதியில் இருந்து தேர்வாகி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

2014-ம் ஆண்டு பலாசூர் பாராளுமன்ற தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

தற்போது மீண்டும் அவர் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக பிரதமர் மோடி பிரத்யேகமாக சென்று பலாசூர் பகுதியில் பிரசாரம் செய்து விட்டு வந்தார். இதன் காரணமாக சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதாப் சந்திர சாரங்கி வெற்றி பெற்றுள்ளார்.

சொந்தமாக கார் கூட இல்லாத இவர் தேர்தல் பிரசாரத்துக்கு பெரும்பாலும் சைக்கிளிலேயே சென்று வந்தார். இவர் மீது அனுதாபப்பட்டு எம்.பி. ஆக்கியுள்ளனர். பாராளுமன்றத்துக்கு தேர்வான முதல் தடவையே மந்திரியாகவும் உயர்ந்துள்ளார். ஒடிசாவில் இருந்து டெல்லிக்கு வந்த அவர் வழக்கம்போல தனது ஜோல்ணா பையுடன்தான் வந்திருந்தார். அவர் எளிமையை கண்டு மற்ற தலைவர்களும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டு போனார்கள். அவரது டெல்லி பயண காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

நேற்று அவர் மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட போதும் கூட புதிய உடைக்கு மாறவில்லை. தனது எளிமையான உடையிலேயே வந்து பதவி ஏற்றார். அதனால்தான் அவர் பதவி ஏற்க வந்தபோது வாழ்த்து கோ‌ஷமும், கரகோ‌ஷமும் அதிகமாக இருந்தது.

அவர் பதவி ஏற்று முடித்ததும் மற்ற சக மந்திரிகள் அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

பலாசூர் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜு ஜனதா தள வேட்பாளர் ரவீந்திரகுமார் ஜனா மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார். பணப்பலத்தை மீறி பிரதாப் சந்திர சாரங்கி வெற்றி பெற்றுள்ளார். மிகச்சிறந்த பேச்சாளரான சாரங்கி ஆன்மீக தொடர்பாக பேசுவதில் வல்லவர்.

ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஒடியா ஆகிய 4 மொழிகளில் சரளமாக பேசும் இவர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஆவார். இவர் மீது இரக்கம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இவரது தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்டோ ஒன்றை கொடுத்தது.

மற்றபடி வேறு யாரிடமும் இவர் எந்த உதவியையும் பெறவில்லை. உண்மையிலேயே மலைவாழ் மக்களுக்காக பாடுபட்ட இவர் இன்று ஏழ்மை நிலையில் இருந்து மந்திரியாக வந்துள்ளார்.

இவர் இதுவரை வருமான வரி கட்டியது இல்லை. பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட இவர் தனது வேட்புமனுவில் வரி கட்டும் அளவுக்கு தனக்கு வருமானம் இல்லை என குறிப்பிட்டு இருந்தார். என்றாலும் பான் கார்டு எடுத்து வைத்துள்ளார். இவரது பெயரில் வங்கிகளிலோ, தபால் அலுவலகத்திலோ சேமிப்பு கணக்கு இல்லை.

அதுபோல இவரது பெயரில் வாகனங்கள், வீடுகள், நிலங்கள் என்று எதுவும் கிடையாது. மூதாதையர்களுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை இவர் பயிரிட்டு அனுபவித்து வருகிறார். அந்த வகையில் தனக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2009-ம் ஆண்டு இவர் நீலகிரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட கட்சி மேலிடம் டிக்கெட் வழங்கி இருந்தது. அந்த டிக்கெட்டுடன் பஸ்சில் வந்து கொண்டிருந்த போது வேட்பாளருக்கான அங்கீகார டிக்கெட்டை தொலைத்து விட்டார்.

இதனால் அவர் நீலகிரி சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். எளிமை ஒன்றே இவரை மாநிலம் கடந்து நாடு முழுவதும் மக்களிடம் பேச வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: