திங்கள், 27 மே, 2019

தலித்தியத் தூய்மைவாதமும் வஹாபியிசமும் இனத் தூய்மைவாதமும்.. திருமாவின் வெற்றி குறித்து விவாதங்கள் ..

தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!மின்னம்பலம் : தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்! தனியன் : அமெரிக்காவில் இருக்கும் மயிலாடுதுறை சிவா என்பவர் தீவிர திமுக ஆதரவாளர். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் அளவுக்குத் தீவிர திமுக ஆதரவாளர். அவர் திருமாவின் வெற்றி குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதிலிருந்து முக்கியமான சில பகுதிகளைப் பார்ப்போம்:
“உலகம் முழுக்க உள்ள தமிழ் ஆர்வலர்கள் அண்ணன் தொல்.திருமா வெல்ல வேண்டும் என்று தொடர்ந்து செய்திகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டும், சாதிக்கு அப்பாற்பட்டும் அண்ணனின் வெற்றியைக் கொண்டாடிய அனைத்து நல் உள்ளங்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் அண்ணன் அடைந்த மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. அண்ணனோடு தேர்தல் களத்தில் இருக்கும் தறுவாயில் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தேர்தலுக்கு முன்பே திருமாவை திமுகவோடு சேர விடாமல் சிலர் சதி செய்தனர். அண்ணனுக்கும் தினகரனுக்கும் தொடர்பு என்றார்கள்.
தளபதியே திருமா அண்ணனிடம் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். கட்சித் தலைவராக, நிறுவனராக, அவரது கட்சியை விட்டு விட்டு வேறு ஒரு கட்சியில் சேர்ந்து நிற்பது என்பது சுலபம் அல்ல. எனவே, ரவிக்குமார் அண்ணனை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு, தான் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் என்பதால் சிரமம் என்று விளக்கியிருக்கிறார்.

அடுத்தது சின்னம் - தேர்தல் ஆணையம் அவருக்கு மோதிரம் என்றார்கள். அண்ணனும் சம்மதம் தெரிவித்துவிட்டார், அடுத்த நாள் அழைத்து மோதிரம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள், பிறகு நாற்காலி என்று சொல்லியிருக்கிறார்கள், அதில் திருமா அண்ணனுக்கு முழு சம்மதம் ஏற்படவில்லை. அண்ணன் பானைச் சின்னம் கேட்டிருக்கிறார். முதலில் சம்மதம் சொல்லிப் பின்னர் மறுத்திருக்கிறார்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் அண்ணன், பானைச் சின்னம் வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்று தெரிந்துகொண்டு சொன்னவுடன், மீண்டும் திருமா கடும் முயற்சி செய்து பானை சின்னத்தைப் பெற்றிருக்கிறார். ஒரு சின்னத்தை ஒதுக்கத் திருமாவை அலைய விட்டிருக்கிறார்கள்.
அடுத்து இராமதாசு அண்ணன் திருமாவைத் தோற்கடிக்க, தினமும் அறிக்கை மூலம் திருமாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார். அன்புமணி நாடாளுமன்றம் செல்ல வேண்டும், திருமா தோற்க வேண்டும் எனப் பல கோடிகளைச் செலவு செய்திருக்கிறார். திருமாவைத் தோற்கடிக்க வன்னிய மற்றும் பிற சாதி மக்கள் மத்தியில் பல திட்டங்களைச் செய்திருக்கிறார்.
தினமும் தேர்தல் செலவுக்கு நிறைய பணம் செலவாகும். அதற்குச் சிரமப்பட்ட தறுவாயில் திருச்சியில் உள்ள தொழிலதிபர் மிகப் பெரும் தொகையைக் கொடுத்தனுப்பியிருக்கிறார், அதனைக் காவல் துறை பிடித்துவிட்டது. திருமா அண்ணன் உடனே தமிழகத்து மிகப் பெரும் காவல் துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். தேர்தல் நேரம் என்பதால் அந்தப் பணத்தை மீட்க முடியவில்லை (ஆனால், ஓபிஎஸ் மகன் பல கோடி செலவு செய்ததற்கு வீடியோ ஆதாரம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை).
தமிழ்நாட்டின் மிகப் பெரும் நட்சத்திர வேட்பாளர் அண்ணன் தொல்.திருமா சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டியவர். ஆனால், மக்களுக்குள் சாதி வெறியைத் தூண்டி, கோடி கோடியாகப் பணம் செலவு செய்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் எனப் பல சக்திகள் வேலை பார்த்திருக்கின்றன.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எளிய மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட அண்ணனுக்கு ஐந்து லட்சம் [5,00,229] வாக்குகள் என்பது சாதாரண வாக்குகள் அல்ல. 3,219 வாக்குகள் வித்தியாசம் என்பது பல லட்சங்களுக்குச் சமம்!
சிதம்பரம் வாக்காளருக்குக் கோடானு கோடி நன்றிகள்.”

இவை திருமாவளவனின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடி திமுக ஆதரவாளரான மயிலாடுதுறை சிவா எழுதிய மகிழ்ச்சி பொங்கும் வார்த்தைகள்.
திருமா தம்பிகளின் தனியாவர்த்தனம்
திருமாவின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் BR Leopards என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காணொலி வேறொரு கதையைச் சொல்கிறது.
அந்தக் காணொலியில் வாக்கு எண்ணிக்கையன்று திமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளுமே திருமாவைக் கைவிட்டுவிட்டதாகவும் திருமா தனித்தே போராடி வென்றதாகவும் தனுஷ் திரைப்படத்தின் காட்சியைப் பயன்படுத்தித் திமுகவை துரோகியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பதிவுகளுமே யார் யார் என்னென்ன நோக்கங்களோடு எப்படி அரசியலை அணுகுகிறார்கள் என்பதற்கான சாட்சியங்கள். குறிப்பாகச் சாதி ஒழிப்பில் உளசுத்தியுடன் ஒருவருக்கு அக்கறை இருந்தால் அவர் எந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பார் அல்லது கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான உதாரணங்கள் இவை.
அம்பேத்கரின் ஆயிரம் பொன் பெறும் வாசகங்களான “கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்” என்பதைத் தனது கொள்கைப் பிரகடனமாக அறிவித்துக்கொள்ளும் திருமா ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் பக்கம் எதைக் கற்பிக்கிறது? எதை ஒன்றுசேர்க்க முயல்கிறது? என்ன விதமான “புரட்சி”யை முன்னெடுக்கிறது?
திருமாவின் வெற்றிக்கோ அல்லது சாதி ஒழிப்புக்கோ இது உதவுமா, அல்லது உபத்திரவமாகுமா?

தலித்தியத் தூய்மைவாதமும் வஹாபியிசமும் இனத் தூய்மைவாதமும் தொடர்ந்து நிர்தாட்சண்யமின்றி எதிர்க்கப்பட வேண்டியவை. நாம் வாழும் காலம் வலதுசாரிகளின் வளர்ச்சிக் காலம். உலகம் முழுக்க வலதுசாரித் தத்துவம் முழு மூச்சோடு வெறிகொண்டு வளர்கிறது. அதுவும் நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் வழியாக, மக்களின் முழு ஆதரவுடனே இது நடக்கிறது.
இதன் அடிப்படை பெரும்பான்மைவாதம். மேற்குலகில் வெள்ளையினப் பெரும்பான்மைவாதம். மத்தியக் கிழக்கில் இஸ்லாமியப் பெரும்பான்மைவாதம். இந்தியாவில் இந்துத்துவப் பெரும்பான்மைவாதம். இலங்கை, மியன்மாரில் பௌத்தப் பெரும்பான்மைவாதம். எங்கு திரும்பினாலும் எண்ணிக்கை வலுவுள்ள, பொருளாதார வல்லமை மிக்க, அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை மக்கள் திரள், இதில் எதுவுமே இல்லாத சிறுபான்மையினரைத் தங்கள் முதன்மை எதிரியாக வரித்துக்கொள்கிறது. இந்த மக்கள் திரள் வன்முறை மிக்க வலதுசாரி அரசியலுக்குத் தம் வாக்குகள் மூலம் வலிமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. இதுதான் உலகம் முழுவதும் வலதுசாரிகளின் அதிகார அரசியலின் அடிப்படை இலக்கணம்.
அந்த வரலாற்றுப் போக்கின் நீட்சிதான் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்குக் கிடைத்திருக்கும் வெற்றியும்.
திமுகவின் தனித்துவ சாதனை
ஒட்டுமொத்த இந்தியாவையே மூழ்கடித்த மோடியின் ஆழிப் பேரலையைக் கட்சி அரசியல் ரீதியாக மட்டுமே மக்களை அணிதிரட்டி முறியடித்துக்காட்டியிருக்கும் ஒரு மாநிலக் கட்சிதான் திமுக. இந்தச் சாதனையை அது எதிர்க்கட்சியாக இருந்தபடி எல்லா விதமான அரசு அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு சாதித்துக்காட்டியிருக்கிறது. இந்திய அரசியலில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் இது மிகப் பெரிய தனித்துவமான வரலாற்றுச் சாதனை.
இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் பெரும்பான்மைவாதமாகக் குறைந்தது அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்துத்துவம் இருக்காது. சமூக மட்டத்தில் இந்துத்துவம் வாழ்வியலாக ஓரளவு பரவுகிறது என்றாலும் அரசியலில் அது இன்னும் அவ்வளவு ஆழமாக வேர்பிடிக்கவில்லை. இப்போதைக்குத் தமிழ்நாட்டில் இந்துத்துவம் ஆட்சிக்கு வருவது என்பது அவ்வளவு சுளுவில் நடக்காது என்றே தோன்றுகிறது.
ஆண்ட பரம்பரைகளைத் தோற்கடித்த கூட்டணி
தமிழ்நாட்டில் பெரும்பான்மைவாதம் ஆண்ட பரம்பரை சாதிகளின் அணிவகுப்பாக இங்கே அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக ஜெயலலிதா இந்த ஆண்ட பரம்பரை சாதியவாத அரசியலைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தார். பாமக இராமதாசும் அதே வேலையைச் செய்துவருகிறார். அதன் பொது எதிரியாக தலித்துகள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
இந்தத் தேர்தலில் சாதியப் பெரும்பான்மைவாதம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. தேனியில் மட்டும் இன்னும் அது உயிரோடு இருக்கிறது. சட்டமன்ற இடைத்தேர்தல்களில் சில இடங்களில் அது வேலை செய்திருக்கிறது.
சாதியப் பெரும்பான்மைவாதத்தை நம்பிய, ஊட்டி வளர்த்த அதிமுகவும் பாமகவும் பெரும் தோல்விகளைச் சந்தித்திருக்கின்றன. அரசியல் ரீதியாக அதை எதிர்கொண்ட திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்த வெற்றி இன்னும் முழுமையடையவில்லை என்பதற்கு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளே சாட்சி.

இது மிகப் பெரிய ஆரோக்கியமான மாற்றம். ஆதரித்து ஊக்குவிக்கப்பட வேண்டிய, வளர்த்தெடுக்கப்படவேண்டிய போக்கு. அதைத்தான் திருமாவின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்த திமுகவின் தொண்டர்களும் திமுக ஆதரவாளர்களும் செய்தார்கள்.
தலித்தியம் என்கிற தனிமைப்படல்
ஆனால், ஏனோ திருமாவின் தம்பிகளும் ஆதரவாளர்களும் இதற்கு நேர்மாறாக திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் தங்களைக் கைவிட்டுவிட்டதாகவும் துரோகம் செய்துவிட்டதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டிக் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குப் பாமகவும் எதிரிதான். திமுகவும் எதிரிதான். தலித் என்கிற தனித்துவ அரசியலே தமக்குப் போதும் என்பதாகவே இவர்களின் அணுகுமுறை இருக்கிறது. உத்தரப் பிரதேச மாயாவதியின் தலித்துவத் தனிமைப்படும் அரசியலின் நிலையைப் பார்த்த பின்னும் இவர்கள் தமிழ்நாட்டில் தலித்தியத் தூய்மைவாதத்தைத் தூக்கிப்பிடித்துத் தோழமைக் கட்சிகளையே துரோகிக் கட்சிகளாகச் சித்திரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இது ஆபத்தான போக்கு. இது நீடித்தால் சட்டமன்றத் தேர்தலுக்குள் திமுகவுக்கும் திருமாவுக்கும் இடையில் பிளவை உருவாக்க நினைப்பவர்களுக்குத்தான் இது சாதகமாக முடியும். இராமதாசு உருவாக்க விரும்பும் “தலித் அல்லாதார் கூட்டணி”யை அவருக்கு முன்பாக இவர்களே உருவாக்கிவிடக்கூடும். அது யாருக்கும் நல்லதல்ல.
தமிழ்நாட்டில் வலதுசாரி இந்துத்துவ / சாதியாதிக்க அரசியலை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டுமானால் திமுக போன்ற வலுவானதொரு கட்சியின் தலைமைத்துவம் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். மாறாக, வஹாபியிசமே வழிகாட்டி என்று மதச் சிறுபான்மையினர் தம்மைத்தாமே தனிமைப்படுத்திக்கொண்டால் தமிழக அரசியலில் என்ன நடக்கும் என்பதற்குக் கோவைக் கலவரங்களும் குண்டுவெடிப்புகளும் அதையொட்டிய தேர்தலில் பாஜக இடம்பிடித்த கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியுமே சாட்சி.
தலித்தியத் தனிமைப்படலும் அதேபோன்ற விபரீதத்தையே ஏற்படுத்தும். தலித் அல்லாதார் கூட்டணி தானாய் உருவாகி பாமக மீண்டும் வலுப்பெறும். எனவே, திருமாவின் தம்பிகளும் அதிதீவிர தலித்தியத் தூய்மைவாத ஆதரவாளர்களும் இனியேனும் திருந்துவார்களாக. திருந்தாவிட்டால் திமுகவுக்கு மட்டும் இழப்பல்ல. திருமாவுக்கும் இழப்பு ஏற்படும். அதைவிடப் பெரும் இழப்பு தமிழ்நாட்டுக்கானதாய் இருக்கும்.

கருத்துகள் இல்லை: