வெள்ளி, 31 மே, 2019

நேசமணி ஹெஷ்டேக்! .. மோடியின் பதவி பாசிசத்தை எள்ளி நகையாடி தள்ளி மிதித்துவிட்ட தமிழகம்!

சிவசங்கர் எஸ்.எஸ் : நேசமணி யார் என்று உலகமே கேட்கிறது.
காரணம் Pray_for_Nesamani என்ற ஹேஷ்டேக் உலக டிரெண்டிங்கில் 2ம் இடத்திலும், இந்திய டிரெண்டிங்கில் முதல் இடத்திலும் வந்து துவம்சம் செய்திருக்கிறது.
இதில் என்ன துவம்சம் என்று கேட்கலாம். மற்ற நாட்கள் என்றால், இந்த ட்ரெண்டிங் துவம்சம் ஆகியிருக்காது. வெறும் காமெடியாக கடந்திருக்கும். ஆனால் அது நடந்த நாள், எதேச்சையாக மோடி "பதவியேற்ற நாளாக'' அமைந்து விட்டது.
மோடி பதவி ஏற்ற செய்தி நான்காம் இடத்திலும், நேசமணி செய்தி முதல் இடத்திலும் வந்திருக்கிறது என்றால் ட்விட்டரில் தமிழர்களின் ஆதிக்கம் வெளிப்படுகிறது.
இதில் கொடுமை என்னவென்றால், இந்த நேசமணி ட்ரெண்டிங் எதேச்சையாக நடந்தது.
சுத்தியல் படத்தை போட்டு, " இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர் ?" என்று ஒரு கட்டுமான நிறுவனம் இணையத்தில் கேள்வி கேட்டிருக்கிறது. அதனைப் பார்த்த ஒரு தமிழர், அளித்த பதில் தான் இவ்வளவு அதகளத்திற்கும் காரணம்.
அவர் சொன்னது, "இது சுத்தியல். இது தான் எங்கள் காண்ட்ராக்டர் நேசமணி தலையில் விழுந்து நினைவிழக்க செய்தது". அதற்கு பதிலளித்த இன்னொரு நண்பர், " நேசமணி பிழைக்க வேண்டுகிறேன்", என் பதிலளித்ததாக தகவல்.
பற்றிக் கொண்டது இணையம். காரணம், தமிழ் இணையவாசிகளின் தலைவன் வடிவேலு தானே.

உலகத் தமிழர்களின் வருத்தம் போக்கும் நாயகனாக இன்றைக்கும் திகழ்பவர் வடிவேலு தானே.
திரைப்படங்களில் நடிப்பதில் இடைவெளி ஏற்பட்டிருக்கலாம், ஆனால் இடைவெளி இல்லாமல் நம்மோடு பயணித்துக் கொண்டிருப்பவர் வடிவேலு தான் என நிரூப்பித்திருக்கிறது இந்த ட்ரெண்டிங்.
"ப்ரெண்ட்ஸ்" திரைப்படத்தின் அந்த காட்சிகள் இப்போதும் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. காரணம், அதன் தாக்கம். இவ்வளவுக்கும் இந்த திரைப்படம் வெளிவந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ராதாரவி தனது ஜமீன் பங்களாவிற்கு பெயிண்ட் அடிக்கும் காண்ட்ராக்ட்டை "நேசமணி" யிடம் வழங்குகிறார். நேசமணி தான் நம் "வடிவேலு". அவர், தன் உதவியாளர்களோடு பணிக்கு தயாராகிறார். அப்போது தான் அவரிடம் "அப்ரசண்டிகளாக'' நடிகர்கள் விஜய்யும், சூர்யாவும் சேர்கின்றனர்.
உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் , "தேவையில்லாத ஆணிகளை" பிடுங்க உத்தரவிடுகிறார் காண்ட்ராக்டர் நேசமணி. மாடிக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி சுத்தியலை "தவறுதலாக" கைவிட, அது நேசமணி தலையில் விழுந்து, "சம்பவம்" ஆகிவிட்டது.
நேசமணி மயக்கமாகிப் போனார். கோமாவிற்கும் சென்று விட்டார். தமிழ்நாட்டு அரசியல் தான் தடுமாறிப் போனது.
நேசமணிக்காக தெரிவிக்கப்பட்ட கருத்துகள், மோடிக்காக சொல்லப்பட்டதாக உருவகப்படுத்தப்பட்டது. உண்மையும் அது தான். தமிழ்நாட்டில் இருந்து வெளிப்படும் அத்தனை உணர்வுகளும் மோடிக்கு எதிரானவை என்பது தான், தமிழர்கள் அனைவரும் உணர்த்துவது.
இந்தியர்கள் என்ற "காண்ட்ராக்டர் நேசமணி" ஒப்பந்தம் செய்த "கிருஷ்ணமூர்த்தி" தான் மோடி. "கிருஷ்ணமூர்த்தி" மோடி தான் சுத்தியலை, "நேசமணி" என்னும் இந்தியாவின் தலையில் போட்டார். இந்தியா நினைவிழந்துப் போனது.
இது தான் இன்றைக்கும் நடந்திருக்கிறது.
தமிழகத்தின் தலையில் சுத்தியலை அல்ல, பாறாங்கல்லையே போடக்கூடிய எண்ணத்தோடு இருப்பவர் மோடி.
காரணம், தமிழகம் தனி சிந்தனையோடு தேர்தல் முடிவுகளை தரக்கூடியது. இப்போதும் தந்தது. இனியும் தரும். அதனால் மோடிக்கு தமிழகத்தை பிடிக்காது, பிடிக்கவும் வாய்ப்பில்லை.
பித்துக்குளி கிருஷ்ணமூர்த்தி கையில் இருக்கும் சுத்தியலை பிடுங்குவோம். நேசமணியை காப்போம்.
இந்தியாவின் அரசியலை தமிழகம் தான் நிர்ணயம் செய்யும் என்பதை, இந்தியா உணரட்டும்.
# நேசமணி வாழ்க, நேசம் வாழ்க, தேசம் வாழ்க !

கருத்துகள் இல்லை: