திங்கள், 27 மே, 2019

ஸ்டாலின், திருமா, அரசியல் நம்பகத்தன்மை ...... அரூப வஸ்து

LRJ : ஸ்டாலின், திருமா, அரசியல் நம்பகத்தன்மை என்கிற அரூப வஸ்து
நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த அதிமுக கூட்டணியில்
விரிசலோ விமர்சனமோ இல்லை. பெருவெற்றி பெற்ற திமுக கூட்டணியில் தேர்தல் முடிவன்றே ஆரம்பித்துவிட்டது திமுகவை எதிர்க்கும் தற்சிதைவு அரசியல்.
அதை சமூக ஊடகவெளியில் ஆரம்பித்துவைத்து தொடர்ந்து செய்துகொண்டிருப்பவர்கள் திருமாவின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் அவரது அதிதீவிர ஆதரவாளர்கள்.
அரசியலில் நம்பகத்தன்மை மிக முக்கியம். குறிப்பாக தேர்தல் கூட்டணிக்கும் அதன் வெற்றிக்கும் அதுவே அடிப்படை.
அரசியல் நம்பகத்தன்மைக்கு திமுக சிறந்த உதாரணம் என்று எமெர்ஜென்சியின் போது திமுகவால் மிக கடுமையாக எதிர்க்கப்பட்ட இந்திராவே பாராட்டியிருக்கிறார். தன்னை மிகக்கடுமையாக எதிர்த்தபோதும் ஆதரித்தபோதும் அதில் திமுக வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டதாகவும் அதன் அரசியல் நம்பகத்தன்மைக்கு அவையே சாட்சியங்கள் என்றும் கூறினார் இந்திரா காந்தி.

அந்த நம்பகத்தன்மையை இந்த தேர்தலிலும் திமுக நிரூபித்துக்காட்டியிருக்கிறது. தான் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரத்தேவையான சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அது போட்டியிட்ட இடங்களில் தோற்றதே தவிர கூட்டணி கட்சிகளுக்கு கேட்ட அளவுக்கு இடங்களையும் கொடுத்து, அதில் சிலபலருக்கு நிதியும் கொடுத்து, கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிட்ட நாடாளுமன்ற தொகுதிகள் அனைத்திலும் (தேனி தவிர) அவர்களை வெல்லவும் வைத்திருக்கிறது.
அதற்கு நேர் மாறாக அதிமுக அதன் கூட்டணி கட்சிகளை பலிகொடுத்து இடைத்தேர்தலில் மட்டும் கவனமாய் வென்று தன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக என்பது நம்பத்தகுந்த கூட்டணி கட்சியல்ல என்பது பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்ட பின்பும் அதனால் பாதிக்கப்பட்ட அதன் கூட்டணி கட்சிகள் ஒன்று கூட அதன் மீது சேறடிக்கவில்லை. அதிமுகவை தூற்றவில்லை. எடப்பாடியை எதிர்க்கவில்லை.
ஆனால் விசிக போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தங்கள் கட்சித் தலைவரையும் கட்சியின் “அறிவுஜீவி”யாக அறியப்படுபவரையும் போராடி வெல்லவைத்த திமுகவையும் அதன் நிர்வாகிகளையும் பகிரங்கமாக பொதுவெளியில் அவமானப்படுத்தும் வேலையை விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் திருமாவுக்கு மிக அணுக்கமான அவரது அதிதீவிர ஆதரவாளர்களும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே ஆரம்பித்து விட்டார்கள். அதை தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
இதற்கு இரண்டு காரணங்கள். இவர்களில் பலரது மதிப்பீட்டில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை விட திருமா மிகப்பெரிய தலைவர் அறிவுஜீவி. அப்படி அவர்கள் நினைப்பது தவறில்லை. ஒவ்வொருகட்சியும் அதன் ஆதரவாளர்களும் தங்கள் தலைவரே சிறந்தவர் என்று நினைப்பது இயல்புதான். ஆனால் தங்கள் கட்சித்தலைவர் ஒன்றுக்கு மூன்றுமுறை தேர்தலில் வெற்றிபெற உதவிய ஒரு தோழமை கட்சியை அதன் தலைவரை தொடர்ந்து மட்டம் தட்டுவது, பொதுவெளியில் அவமதிப்பது, அந்த கூட்டணி கட்சியின் தொண்டர்களிடம் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? தங்களின் எதிர்கால அரசியல் நலனுக்கு அது உதவுமா? உபத்திரவமாக முடியுமா? என்கிற குறைந்தபட்ச சுயநல சிந்தனை கூட இல்லாமல் நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை தொடர்ந்து வெட்டும் அதிமேதாவித்தனம் தேவையா என்பதை விசிகவினர் தான் சொல்ல வேண்டும்.
மேலும் ஸ்டாலினைவிட வைகோ மேதாவி என்று ஒருகாலத்தில் இவர்களைவிட வேகமாக களமாடிய வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் வரலாறு இன்று எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதையும் அதே பாதையில் இன்று வேகமாக பயணித்துக்கொண்டிருக்கும் வீரதீர விசிகவினர் ஒரு முறை நினைத்துப்பார்த்துக்கொள்வது அவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு கூடுதல் நல்லது.
இவர்களின் இந்த நடத்தைக்கு இன்னொரு காரணம் திருமாவின் இலக்கு நாடாளுமன்றத்தேர்தலில் வெல்வது மட்டுமே. சட்டமன்றத் தேர்தல் அவருக்கு என்றுமே பொருட்டல்ல. 2016 தேர்தலில் திமுக வெல்லக்கூடாது என்று களமாடியதைத்தவிர தமிழ்நாட்டு சட்டமன்றத்தேர்தலில் பெரிய அளவில் திருமா ஆர்வம் காட்டியதில்லை. அதனால் தான் அவர் முன்பு தனது சட்டமன்ற பதவியை நினைத்த மாத்திரத்தில் ராஜினாமா செய்தார். ஆனால் 2009ஆம் ஆண்டு கடுமையான எதிர்ப்பையும் தாண்டி காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திருமாவின் அரசியல் தேவை தீர்ந்து விட்டதாக கருதும் அவரது கட்சியினரும் ஆதரவாளர்களும் அடுத்து நடக்கும் சட்டமன்றத்தேர்தல் திமுகவுக்கு தான் வாழ்வா சாவா என்பதாக இருக்கும் என்பதால் தங்கள் தயவுதான் திமுகவுக்கு தேவையே தவிர திமுகவின் தயவு இனி தங்களுக்கு தேவையில்லை (குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு) என்று நினைக்கிறார்கள்.
இந்த நினைப்பில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தல் என்பது திமுகவுக்கு கண்டிப்பாக மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதுவும் மத்தியில் மோடி-அமித்ஷா கூட்டணி மிருகப்பெரும்பான்மை அரசாக நீடிக்கும் நிலையில் நடக்கப்போகும் சட்டமன்றத்தேர்தலில் தேர்தல் ஆணையம் எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கு நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலே சாட்சி. எனவே திமுக ஆட்சிக்கு வருவதற்கு அதற்கு வலுவான கூட்டணி வேண்டும் என்பதால் தங்களின் "தனித்தன்மையை" திமுக எதிர்ப்பின் மூலம் நிலை நிறுத்திக்கொள்ள விசிகவினர் விரும்புகிறார்கள்.
ஆனால் இதில் இருக்கும் ஆபத்து, இந்த அணுகுமுறை திமுகவை மட்டும் பாதிக்காது. விசிகட்சியின் எதிர்கால தேர்தல் கூட்டணி பேரங்களில் திருமாவையும் சேர்த்தே பாதிக்கும். கூட்டணியில் சேர்த்துக்கொண்டு பாடுபட்டு வெல்ல வைத்தாலும் வென்ற மறுநாளே கூட்டணிக்கு எதிராக போகும் ஒரு கட்சிக்கு எந்த பிரதான கூட்டணி கட்சி தொண்டர்களும் வேலை செய்யமாட்டார்கள்.
ஏனெனில் அரசியலில் நட்ப்புறவும் நம்பகத்தன்மையும் மிகவும் முக்கியமானவை. மேலும் இவை ஒருவழிப்பாதையல்ல. இருவாழிப்பாதை. ஒரு கட்சியும் அதன் தலைமையும் எதை தன் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கிறதோ அதுவே அந்த கட்சிகளும் அதன் தொண்டர்களும் அந்த கட்சிக்கும் அதன் தலைமைக்கும் திருப்பித்தருவார்கள்.
அதுவும் பெரிய கட்சிகளின் முழுமையான ஆதரவிருந்தால் மட்டுமே தேர்தலில் வெல்ல முடியும் என்கிற கள யதார்த்தத்தை எதிர்கொள்ளும் சிறு கட்சிகளுக்கு நம்பத்தகுந்த பொறுப்புள்ள பரஸ்பரம் மதிக்கக்கூடிய கட்சி என்கிற பெயர் மிகவும் அவசியம்.
ஆனால் அத்தகைய நம்பகத்தன்மையையும் நல்ல பெயரையும் திருமாவும் அவரது கட்சியும் வேகமாக இழந்து கொண்டிருக்கிறார்கள். அவரே இதில் நேரடியாக தலையிட்டு தடுத்து நிறுத்தாவிட்டால் இதன் எதிர்கால பாதிப்பு மிக மோசமாக இருக்கும். இன்றைய வெற்றிக்களிப்பில் இது பொருட்டாக படாமல் போகலாம். ஆனால் அரசியல் என்பது ஒற்றைத்தேர்தல் அல்ல.

கருத்துகள் இல்லை: