புதன், 29 மே, 2019

2 கோடி விளம்பரத்தை மறுத்த சாயி பல்லவி .. வெள்ளை தோல் விளம்பரமாம்

மின்னம்பலம் : நடிகை சாய் பல்லவி பெரும் வருமானத்தைத் தரக்கூடிய
விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்துள்ளார். வெண்ணிறத்தை முன்னிறுத்தும் விளம்பரம் என்பதால் அதில் நடிக்க மறுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரேமம், ஃபிதா, மாரி 2 ஆகிய படங்களுக்குப் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களிலும் சாய் பல்லவிக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படத்திலும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் அழகு சாதன க்ரீம் விளம்பரத்தில் நடிப்பதற்கு சாய் பல்லவியை அணுகியது அந்நிறுவனம். விளம்பரத்தில் நடிக்க ரூ.2 கோடி வழங்கவும் அந்நிறுவனம் தயாராக இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் சாய் பல்லவி. அழகையும் நிறத்தையும் தொடர்புபடுத்தும் விளம்பரம் என்பதால் அதில் நடிக்கவில்லை என்று சாய் பல்லவி விளக்கியுள்ளார்.

தனியார் யூடியூப் சேனலுக்கு சாய் பல்லவி அளித்துள்ள பேட்டியில், “எனது பெற்றோர், எனது சகோதரி பூஜா, எனது நண்பர்கள் மட்டுமே எனது நெருங்கிய வட்டாரம். என்னைப் போல அழகாக இல்லை என்ற எண்ணம் பூஜாவுக்கு உண்டு. நாங்கள் இருவரும் பலமுறை கண்ணாடி முன் நின்றபோதெல்லாம் என்னுடன் அவர் தன்னை ஒப்பிட்டுக்கொள்வார். பூஜா அழகாக வேண்டுமென்றால் அவர் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட வேண்டும் என்று நான் அறிவுறுத்தினேன். அவரும் சொன்னபடி செய்தார்.
பூஜாவுக்குப் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவது பிடிக்காது. ஆனாலும் அவர் சாப்பிட்டார். ஏனென்றால் பூஜாவுக்கு அழகாக வேண்டுமென ஆசை. அழகு என்பது என்னைவிட ஐந்து வயது இளைய பெண்ணுக்கு எத்தகைய தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பது வியப்பளித்தது. விளம்பரத்தால் கிடைக்கும் பணத்தை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்? வீட்டுக்குச் சென்று சப்பாத்தியோ, சாதமோ சாப்பிடுவேன். எனக்குப் பெரிய தேவைகள் ஏதுமில்லை. என்னைச் சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சிக்குப் பங்களிக்கவே முயற்சி செய்கிறேன். நாம் வைத்திருக்கும் தரநிலைகள் தவறானவை.
இதுதான் இந்தியர்களின் நிறம். நாம் வெளிநாட்டவரிடம் சென்று நீங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்க முடியாது. அது அவர்களின் நிறம்; இது நமது நிறம்” என்று கூறினார். தெலுங்கில் விரத பர்வம் படத்தின் பணிகளில் தற்போது சாய் பல்லவி பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராணா நடிக்கிறார்.

கருத்துகள் இல்லை: