செவ்வாய், 28 மே, 2019

டாக்டர்.கிருஷ்ணசாமி : நீ யாருப்பா... உனக்கு எந்த ஊரு? நீ என்ன சாதி? இவன் எப்ப பாத்தாலும்


மின்னம்பலம் : புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று (மே 28) சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் தோற்றதற்கு தமிழக ஊடகங்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டியவர், ஒரு கட்டத்தில் தன்னிடம் கேள்வி கேட்ட நிருபரிடம், ‘நீ என்ன ஊரு? நீ என்ன சாதி?’ என்று கேட்க செய்தியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்கைக்காக புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
தொடக்கத்தில் பேசிய கிருஷ்ணசாமி,
“தென்காசி தொகுதியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும் எனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் நன்றி. தென்காசியில் எனக்கு பிராமணர்கள், ராஜுக்கள், பிள்ளைமார்கள் என எல்லா தரப்பு மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். நான் எல்லா இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தேன். சமூகத்தில் இணக்கம் உருவாகியிருக்கிறது” என்று கூறியவர் அடுத்து தமிழக ஊடகங்கள் மீது பாயத் தொடங்கினார்.

“கடந்த மூன்று வருடங்களாக மோடிக்கும், எடப்பாடிக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட கற்பனை குற்றச்சாட்டுகள், அவர்களை வில்லர்களாக கற்பிதம்செய்து அவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றாச்சாட்டுகள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பின்னடவை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஜல்லிக்கட்டுக்காக எல்லாரும் போராடினார்கள். அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் டெல்லி போய் மூன்று நாட்களாக தங்கி ஒரே நாளில் மத்திய அரசின் மூன்று துறைகளிடம் ஒப்புதல் வாங்கி ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவந்தார். அதன் வெற்றி இந்த ஆட்சியைத்தானே சேரவேண்டும். காவிரிமேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது மோடி ஆட்சியில்தானே... பிரச்சினைகளுக்காக போராடுகிறார்கள். அதை அரசு நிறைவேற்றும்போது அந்த புகழை அரசுக்கு தர மறுக்கிறார்கள். இவற்றுக்காகவெல்லாம் தமிழக ஊடகங்கள் மோடிக்கு ஏன் நன்றி சொல்லவில்லை?
தேஜகூ தோல்விக்கு ஊடகங்களே காரணம்
தமிழ்நாடு ஊடகங்கள் செய்த தவறான பிரச்சாரங்களால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்றது. தமிழ்நாட்டு ஊடகங்கள்தான் தமிழகத்துக்கு அதிகக் கேடு செய்திருக்கிறீர்கள். இந்தியா முழுதும் ஒரே முடிவெடுத்தபோது தமிழகத்தில் தீய பிரச்சாரம் செய்தது யார்? ஊடகங்கள்தான்” என்று கிருஷ்ணசாமி கூற,
உடனே சில செய்தியாளர்கள், ’மீடியாவை குறை சொல்லாதீங்க. நீங்க பேசறதையும்தான் மீடியாக்கள் காட்டினோம்’ என்று பதில் கூறினார்கள். தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி
“நான்கு ஆண்டு காலமாக தமிழக சமூக தளங்களும், தமிழக மீடியாக்களும்தான் தமிழக மக்களுக்கு தீங்கு செய்திருக்கிறார்கள். இல்லையென்றால் தமிழக மக்கள் இந்த நிலைக்குப் போகவே மாட்டார்கள்” என்று மீண்டும் கூறினார்.
அப்போது, “வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடிய பல திட்டங்களை பாஜக அரசுகொண்டு வரும்போது அதுபற்றி பேசக்கூடாதா?” என்று ஒரு செய்தியாளர் கேட்க,
“என்ன சார் அப்படி கொண்டு வந்துட்டாங்க?” என்று திரும்பிக் கேட்டார் கிருஷ்ணசாமி.
அப்போது, “தூத்துக்குடியில் பொது மக்களை சுட்டது யாரு சார்?” என்று ஒரு செய்தியாளர் கேள்வி கேட்க, ”இதுதான் பிரஸ் இதுதான் பிரஸ்” என்று மழுப்பினார் கிருஷ்ணசாமி.
தமிழ்நாட்டுமக்களை இனியாவது வாழ விடுங்கள். இல்லையென்றால் தமிழ்நாடு ஓரத்துக்குத் தள்ளப்படும் என்று அவர் சொல்ல, ‘இங்கு பாஜக ஜெயிக்கவில்லை என்றால் தமிழ்நாடு புறக்கணிக்கப்படும் என்று சொல்கிறீர்களா?” என்று கேட்டார் ஒரு நிருபர்.
உடனே டாக்டர் கிருஷ்ணசாமி, “அதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என்று கூறினார்.
இவ்வாறு சூடாக போய்க் கொண்டிருந்த வேளையில், ‘சார்...கிருஷ்ணசாமி ஏன் தோற்றார்? அதை சொல்லுங்கள்?” என்று நிருபர் கோகுல் கேட்க, டென்ஷனான கிருஷ்ணசாமி, ‘நீ யாருப்பா... உனக்கு எந்த ஊரு? நீ என்ன சாதி? இவன் எப்ப பாத்தாலும் என்னை இப்படிதான் கேட்பான்” என்று எகிற ஆரம்பித்தார்.
அது எப்படி நீங்கள் செய்தியாளரிடம் சாதியைக் கேட்கலாம் என்று சக செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியிடம் கேள்வி கேட்க, அதற்குள் புதிய தமிழகம் நிர்வாகிகளுக்கும் செய்தியாளர்களுக்கும் கடும்வாக்கு வாதம் ஏற்பட்டது. அத்தோடு பிரஸ்மீட்டும் முடிந்தது.
’கிருஷ்ணசாமி ஏன் தோற்றார்?” என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், ‘நீ என்ன சாதி?” என்று கேட்ட கிருஷ்ணசாமிக்கு எதிராக சமூக தளங்களில் பலத்த விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
இதுபற்றி இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில்,
“ கேள்வி கேட்ட நிருபர் கோகுலை ஒருமையில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி , " நீ எந்த ஊர்? என்ன ஜாதி? " என்று வன்மத்தை காட்டியுள்ளார். ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் மீதான டாக்டர் கிருஷ்ணசாமியின் வன்மமான பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது. மேலும் டாக்டர் கிருஷ்ணசாமி தனது செயலுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
சாதி, மொழி, மத அடையாளங்களுக்குள் பத்திரிகையாளர்களை திணிக்க முயற்சி செய்யும் போக்கு ஆபத்தானது மட்டுமல்ல அறுவறுக்கத்தக்கதும் கூட. சமீபகாலமாக செய்தியாளர் சந்திப்புகளில் சில அரசியல் தலைவர்கள் , செய்தியாளர்களிடம் எந்த சானல் ? எந்த ஊர்? என்றெல்லாம் மிரட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது.
பத்திரிகையாளர் என்ற அடையாளம் தான் பத்திரிகையாளர்களுக்கே தவிர அவர்கள் மீது வேறு எந்த அடையாளங்களை திணித்திடவோ, மிரட்டிடவோ நினைக்க வேண்டாம் என்றும், ஆட்சியாளர்கள் , காவல்துறையினர், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பத்திரிகையாளர்களிடம் அடிப்படை மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: