செவ்வாய், 28 மே, 2019

சசிகலா : அப்பவே தனிக்கட்சி எல்லாம் வேண்டாமேனு தினகரன்கிட்ட சொன்னேன்.

தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்‌ஷன்!மின்னம்பலம : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்து பல இடங்களில் டெபாசிட்டை இழந்தது.
தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்று அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முதலில் கருத்து தெரிவித்த போதும், பின்பு கட்சி அடைந்த தோல்வி பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். தங்களது முகவர்களின் வாக்குகள் கூட தங்களது கட்சிக்கு கிடைக்காமல் போனது பற்றி தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார் தினகரன்.
இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாள் மே 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குள் சென்று சசிகலாவை சந்தித்துள்ளார் அமமுக கர்நாடக மாநில செயலாளரான பெங்களூர் புகழேந்தி. ஒசூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளராகவும் நின்றவர் புகழேந்தி.

இந்த சந்திப்பின்போது, தேர்தல் முடிவுகள் பற்றி தனது வருத்தத்தை புகழேந்தியிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா.
“நான் அப்பவே தனிக்கட்சி எல்லாம் வேண்டாமேனு தினகரன்கிட்ட சொன்னேன். ஆனா அவரு எப்ப வந்தாலும் என்னை சமாதானப்படுத்துவதிலேயே கவனமாக இருந்தாரே தவிர, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலையோனு தோணுது. இப்போ அதிமுகவும் தோத்துப்போச்சு. அமமுகவும் தோத்துப் போச்சு. இரட்டை இலையை எதிர்த்து நின்னா நம்மள அதிமுக தொண்டர்கள் ஏத்துக்குவாங்களானு ஒரு கேள்வி மனசுல இருந்துச்சு. அது இப்போ உறுதி ஆயிடுச்சு. இனி என்ன பண்றதுன்னு புரியலையே” என தனது வருத்தத்தை கூறியிருக்கிறார் சசிகலா.
இதையடுத்து பெங்களூரில் இருந்து சென்னை கிளம்பி வந்த புகழேந்தி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தினகரனை சந்தித்து சிறையில் சசிகலா தெரிவித்ததை கூறியிருக்கிறார்.
அதைக் கேட்ட தினகரன், “என்கிட்ட சொல்லாம சினம்மாவை ஏன் சந்திச்சீங்க? வெளியில நடக்கிறதெல்லாம் அவங்களுக்கு முழுசா தெரிய வாய்ப்பு இல்லையே. தேர்தலுக்கு முன்பே திட்டம் போட்டு நமக்கு குக்கர் சின்னம் மறுக்கப்பட்டது. பல விஷயங்கள்ல திட்டம் போட்டு நம்மை பழிவாங்கிக்கிட்டிருக்காங்க. இதையெல்லாம் எதிர்த்து போராடிட்டு இருக்கோம். சின்னம்மா உணர்வு அப்படித்தான் இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார் தினகரன்.
ஜூன் 1-ஆம் தேதி அமமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இது பற்றியெல்லாம் விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: