திங்கள், 27 மே, 2019

உபியில் காங்கிரசை கழற்றி விட்டதால் கந்தலான மாயாவதி அகிலேஷ் கூட்டணி

  தினமலர் : உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காததால் மாயாவதிக்கும் அகிலேஷ் யாதவுக்கும் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது. லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைந்து ஒரே அணியாக போட்டியிட திட்டமிடப்பட்டது.
ஆனால் மாயாவதியும், அகிலேசும் காங்கிரசை தங்கள் அணியில் சேர்க்க விரும்பவில்லை. இரு கட்சிகளும் தனியாக போட்டியிட்டாலே பெரும்பாலான இடங்களை கைப்பற்ற முடியும் என்று அவர்கள் இருவரும் கருதினார்கள்.
எனவே காங்கிரசை கண்டு கொள்ளாமல் கூட்டணியில் இருந்து கழற்றி விட்டனர். காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் அணிகள் எதிர்பார்த்தபடி அங்கு வெற்றி அடையவில்லை.
மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 64 இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றியது. 10 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், 5 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் வென்றது.
சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு இது படுதோல்வியாக கருதப்படுகிறது.

இந்த அணி மட்டும் காங்கிரசையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் அங்கு தேர்தல் முடிவு மாறி இருக்கும் என்று இப்போது புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு மாநிலத்தில் 6.3 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. அதிக இடங்களை பிடித்த பாரதிய ஜனதா கட்சிக்கு 49.56 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணிக்கு 38.62 சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன.
காங்கிரசையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் இந்த அணிக்கு 44.92 சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கும். இதன் மூலம் மேலும் பல தொகுதிகள் இந்த அணிக்கு வந்திருக்கும். அதை பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சிகள் கோட்டைவிட்டு விட்டன.



காங்கிரஸ் ஓட்டை பிரித்ததால் 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. பாரபங்கி, பதான், பாந்தா, பஸ்தி, தாராக்ரா, மீரட், சுல்தான்பூர், சாந்த்கபீர்நகர், மச்லிசார், பிரோசாபாத் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் ஓட்டையும், பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி ஓட்டுக்களையும் கூட்டினால் பாரதிய ஜனதாவை விட அதிகமாக உள்ளது.
ஆனால் இந்த தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் பாரதிய ஜனதாவின் இந்த வெற்றியை தடுத்திருக்க முடியும்.
பாரபங்கி தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் உபேந்திராசிங் ராவத் 1 லட்சத்து 10 ஆயிரத்து 140 ஓட்டுகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அந்த தொகுதியில் போட்டியிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எல். புனியாவின் மகன் தனுச் 1 லட்சத்து 59 ஆயிரத்து 611 ஓட்டுக்கள் வாங்கினார். இங்கு 3 கட்சிகளும் கூட்டணி சேர்ந்திருந்தால் அவை வெற்றி பெற்றிருக்கும்.
பதான் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் சங்கமித்ரா மவுரியா 5 லட்சத்து 11 ஆயிரத்து 352 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். சமாஜ்வாடி வேட்பாளர் தர்மேந்திர யாதவ் 4 லட்சத்து 92 ஆயிரத்து 898 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் இக்பால்சர்வாணிக்கு 51 ஆயிரத்து 947 ஓட்டுகள் கிடைத்திருந்தன. இங்கும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்.
பாந்தா தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷியாம சரன் குப்தா 4 லட்சத்து 18 ஆயிரத்து 988 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். பா.ஜ.க. வேட்பாளர் ஆர்.கே. சிங் 4 லட்சத்து 77 ஆயிரத்து 926 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் பால்குமார் பட்டேல் 75 ஆயிரத்து 438 ஓட்டுக்கள் பெற்றார். இங்கும் 3 கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தால் 16,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். இப்படி பல தொகுதிகளில் இதே நிலை நிலவுகிறது.

கருத்துகள் இல்லை: